முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வைக்கம் முகம்மது பஷீரும் மீசை மாமாவும்...



 
மேட்டுப்பாளையம் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த ’ஜீப்’சட்டென்று நிதானமிழந்து, ஒரு குலுங்கல் குலுங்கி, சறுக்கி, ஒருவழியாக சாலையோரத்தில் நின்றது - பங்க்சர். மாமாவின் சாம்பல் சொம்புக்குள்ளே பத்திரமாகவே இருந்தது. மின்சார உலையில் மாமாவை அன்றைக்குக் காலையில்தான் எரியூட்டியது. ஒருமணிநேரத்தில் ஒருபிடி சாம்பல் - மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதைக்கலக்கவே இந்தப் பயணம். ’நிமித்தங்களை’ நம்புகிறவர் சித்தப்பா - “இது மாதிரி சமயங்களில் இப்படி ஏதாவது நிமித்தங்கள் காட்டும்” என்றார்.

மாற்றுச்சக்கரத்தைப் பொருத்தி எல்லோரும் இளநீர் குடித்தோம். திக்காலுக்கொன்றாய் சிதறிக்கிடக்கும் மாமாவின் அக்காள் / தங்கைகளின் மக்கள் நாங்கள். மாமா பிள்ளைகளுடன் சேர்த்தால் ஏறக்குறைய 22 பேர் கொண்ட இரண்டு கிரிக்கெட் அணியினர் தேறுவோம். மாமா யாரையும் விட்டுக்கொடுக்காதவர். எல்லோரும் எல்லாருடனும் எப்போதும் தொடர்பிலிருக்கவேண்டும் என்று விழைபவர். எனக்கும் அந்த விழைவு உண்டு. இந்த 22 பேரும் ஒன்றாய்க் கூடி மகிழவேண்டும் என்று அடிக்கடி திட்டமிடுதலும், எல்லோரும் இயைந்து ஒன்றாய்ச்சேர சமயம் கைகூடுவதில்லையாதலால் அதைக் கைவிடுவதுமாய் இருப்போம். இப்போது மாமா போனபிறகு எல்லோரும் கூடியிருந்தோம் - இப்படித்தான் இதை நிகழ்த்துவது என்று மாமா காட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

****


தினமும் தாமதமான ஒரு சாயங்கால வேளையிலே ஒரு பாப்பின்ஸ் மிட்டாய்க் கொத்தும் மாலைமுரசின் மூன்றாம் பதிப்புமாய் அவர் அலுவகலத்தில் இருந்து வரும் வேளையை எதிர்பார்த்திருப்போம். பாட்டி பாப்பின்ஸைப் பிரித்து ஆளுக்கொன்று என்று விநியோகம் செய்தது போக எதுவும் மிஞ்சாது - எப்போதாவது வீட்டிலே ஆட்குறைவு இருந்தால் இரண்டாவது மிட்டாய் ஒன்று கிட்டும். (இப்போது வீட்டுக் குளிர்பதனப் பெட்டியிலே சாக்கலேட்டுகள் நாதியற்றுக் கிடக்கின்றன - பிள்ளைகளுக்குத் தின்று சலித்துவிடுகிறது) அந்த ஒற்றை மிட்டாயின் சுவையை மிஞ்சும் வகையில் எதையும் தின்றதில்லை இதுவரை. மாலைமுரசில் லாட்டரி முடிவுகளை நானும் சஞ்சீவனும் கடைசி இலக்கத்திலிருந்து (பரிசு ரூ 5) சரிபார்ப்போம் - ஒரு ரூபாயும் லாட்டரியில் அடித்ததில்லை.

சிவில் சர்வீசு மேலே மாமாவுக்கு அலாதிப் பிரியம். எங்களில் ஒருவரேனும் IAS, IPS ல் தேர்ச்சியடைய வேண்டும் என்பது அவருக்கு ஒரு பெருங்கனவாக இருந்தது. Competition Success Review வின் சுமார் 6 வாருடப் பிரதிகளை அம்மா பாத்திரக்காரருக்குப் போட்டிருக்கிறாள். அதிலே வரும் மாதிரி வினாத்தாள்களை நான் கத்தரித்து வைத்துக் கொண்டது சில கல்லூரி நுழைவுத்தேர்வுகளுக்கு உதவியாயிருந்தது. மாமாவுக்கு 1980 களில் எழுநூறு ரூபாய் சம்பளம் இருந்திருக்கலாம். CSR மாத இதழ் ஒன்றின் விலை அப்போதே 10 ரூ என்று நினைக்கிறேன்.

மாமா மனிதாபிமானம் மிக்கவர். சகமனிதரை சாதி, மத, இன வேறுபாடின்றி மதிக்க, ஏற்றுக்கொள்ள எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர். தீண்டாமையை அறவே நிராகரித்தவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்புடையவர். எல்லோரின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்.

****


மேட்டுப்பாளையம் வந்தபோது வெயில் உண்மையிலேயே சுட்டெரித்தது. காலையில் ‘சொர்க இரதத்தில்’ மேல் சட்டைகூட இல்லாமல், வேட்டியுடன் வெறுங்காலில் ஏறி வந்தது. வண்டியை விட்டிறங்கியதும் கால்கள் கொப்பளித்துக் கொள்ளும் அளவுக்கு வெப்பம்! அந்த வெப்பத்தில் ஆற்றில் இறங்கியவுடன் சில்லென்ற தண்ணீர் சோர்வையெல்லாம் களைந்தது. முங்கிக் குளித்து விளையாடினோம். மீண்டும் கரைசேர்ந்து கால்கள் வெம்மை தாளாமல், நிற்க நிழலும் இல்லாத இடத்தில் வண்டிக்காகக் காத்திருந்தோம். ஓட்டுனர் எங்களை ஆற்றங்கரையில் விட்டுவிட்டு டீசல் நிரப்பப் போயிருந்தார்.

மூடியிருந்த கோயில் ஒன்றின் கதவுகளில் சாய்ந்து, அந்த நிழலில் கால்களைப் பதித்திருந்தோம். ஏறக்குறைய கால் மாற்றி மாற்றிவைத்து ஆடிக் கொண்டிருந்தோம்.

பன்னிரண்டு மணி உச்சிவெயிலில் தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. பரட்டைத் தலை, சவரம் கண்டு பலநாளான தாடி, மடித்துக் கட்டிய காவி வேட்டியுடன் ஓராள் வெறுங்காலில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். அவனைத் தவிரத் தெருவில் வேறாள் இல்லாததால் எல்லோரும் அவனையே வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏதோ பரபரவென்று அங்கும் இங்கும் நடந்து ஏதோ வேலை செய்துகொண்டிருந்தான். கையில் வானொலிப் பெட்டி ஒன்றை காதுக் கருகில் வைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்துகொண்டிருந்தான் - அந்தப் பெட்டியினின்றும் ஒரு பாட்டு உரக்கக் கேட்டுக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் வைப்பதுபோல உரக்கப் பாட்டுப் போட்டுக்கொண்டு பெட்டியை காதுகளுக்கு அருகில் வைத்திருந்தான். பைத்தியக்காரன் போல என்று நாங்கள் பேசிக்கொண்ட்டோம் - இந்த வெப்பத்தில் காத்திருப்பதை சுவாரசியமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

நாங்கள் இன்னும் கால் மாற்றிக் கால் வைத்து ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பைத்தியக்காரன் எங்களை நோக்கி விடுவிடுவென்று வந்தான். இதேதடா புது வம்பு என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் தன் கையில் வைத்திருந்த சாவிக் கொத்தில் ஒன்றை வைத்துக் கோயில் கதவின் பூட்டைத் திறந்தான். நாங்கள் நிற்க இருந்த சொற்ப இடமும் இல்லாமல் போகும் சோர்வில் அகன்று நின்றோம்.

‘எல்லாரும் உள்ள வந்து இப்படி நிழல்ல உக்காருங்க’ என்று அவன் எங்களை கோயிலுக்குள் நிழலான ஒரு திண்ணையில் உட்கார அழைத்தான் - கோயிலின் காப்பாளன் போல. அப்போது சரியாக  எங்கள் வண்டியும் வந்துவிட்டதால் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டோம்.

எனக்கு அவன் மேல் மிகுந்த மரியாதையும், அவனை எள்ளியதை நினைத்துக் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. அன்பும் கனிவும் தன்னிச்சையானதும், இயல்பானதுமாகும்; அது ஆளுக்குத்தகுந்தபடி மாறுவது அல்ல என்பது உறைத்தது. முன்பின் தெரியாதவர்களின் துயர் அறிந்து தன்னால் இயன்ற உதவியைச் செய்த அவன் செயல் மாமாவையே நினைவுபடுத்தியது.

வண்டி புறப்பட்டதும் இதமான காற்று அடித்தது. டயரில் காற்றுப் போன நிகழ்வைக் காட்டிலும் இதுவே சரியான ‘நிமித்தமாக’ எனக்குத் தெரிந்தது. 


மனது நிறைந்தது.

****
 வைக்கம் முகமது பஷீரின் ‘தேன்மாம்பழம்’ என்ற சிறுகதையைப்  படித்தவுடன் இந்நிகழ்வு நினைவுக்கு வந்தது. முழுக்கதையும் இங்கே...


நெகிழ வைக்கும் ஒரு பகுதி இங்கே (சுகுமாரன் மொழிபெயர்ப்பு, மேற்குறிப்பிட்ட வலைப்பதிவிலிருந்து நகலெடுத்தது): 

“என்னுடைய தம்பி போலீஸ் இன்ஸ்பெக்டர். இங்கேயிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்திலிருக்கிற ஒரு பட்டணத்தில் அன்றைக்கு வேலை செய்துகொண்டிருந்தான். நான் தம்பியைப் பார்க்கப் போயிருந்தேன். அவன் கூடத் தங்கியிருந்தேன். பெரிய பட்டணமில்லை. இருந்தாலும் சும்மா சுற்றிப் பார்க்கப் போனேன். நல்ல வேனிற் காலம். சுடு காற்று வீசிக்கொண்டிருந்தது. தண்ணீருக்குத் தட்டுப்பாடாக இருந்தது. நான் அப்படி நடந்துகொண்டிருந்தபோது, இடை வழியில் மரத்தின் நிழலில் ஒரு கிழவர் சோர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். தாடியும் முடியும் நீளமாக வளர்ந்திருந்தன. எண்பது வயது இருக்குமென்று பட்டது. ரொம்பவே சோர்ந்து சாகிற நிலைமை. என்னைப் பார்த்ததும் ‘அல்ஹம் துலில்லா, மக்களே, தண்ணீர்’ என்றார்.

நான் பக்கத்தில் தென்பட்ட வீட்டுக்குப்போய் வராந்தாவில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன். அழகான அந்த இளம் பெண் உள்ளே போய்ச் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கிக்கொண்டு நடந்ததும் செம்பையும் ஏன் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று கேட்டாள். வழியில் ஒரு ஆள் விழுந்து கிடக்கிறார். அவருக்குக் குடிக்கத்தான் என்றேன். இளம்பெண்ணும் என்னுடன் வந்தாள். தண்ணீரைக் கிழவருக்குக் கொடுத்தேன். கிழவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு அற்புதகரமான ஒரு செயலைச் செய்தார். செம்புத் தண்ணீருடன் எழுந்து பாதையோரத்தில் வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை பிஸ்மி சொல்லி ஊற்றினார். மாம்பழம் தின்ற ஏதோ வழிப் போக்கன் வீசியெறிந்த கொட்டை. அது துளிர்த்திருந்தது. வேர்கள் மண்ணுக்கு மேலாக இருந்தன. கிழவர் மர நிழலில் வந்து உட்கார்ந்து மிச்சமிருந்த தண்ணீரை பிஸ்மி சொல்லிக் குடித்தார்..”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...