முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா இறந்தபோது நிம்மதியாயிற்று

 மலையாளக் கவிஞர் கல்பெட்டா நாராயணனின் பேச்சைக் கேட்பது ஒரு சுகம். பேசும் சொற்களை அன்றைக்குதான் கண்டுபிடித்தது போல கண்கள் மின்ன, சொற்-ஸ்வரங்களை நீட்டிச் சுருக்கி, வாக்கியங்களை அவர் இசைப்பார். உள்ளடக்கம் என்னவாயிருந்தாலும் பேசும் பாங்கே எல்லாவற்றையும் சுவாரஸ்யமானதாக்கிவிடும். 

வயநாடு இலக்கிய விழாவில் அவர் பேசும்போது, தாம் எழுதிய 'ஆசுவாஸம்' என்ற கவிதையைச் சொன்னார். மலையாளத்தில்தான் இன்னும் கவிதை 'பாடுகிறார்கள்'. சில கவிதை 'சொல்லல்கள்' இசையுடன் பாட்டாகவே செய்யப்படுவதுண்டு. 


வடமொழிக் கலப்பு இருந்தாலும், தமிழின் 'சென்சிபிலிட்டி'யே மலையாள மொழிக்கும் பொருந்திவருகிறது. இதனாலேயே இக்கவிதைகளை நாம் தமிழக் கவிதைகள் போலவே வாசிக்கலாம், அனுபவிக்கலாம்.


இனி, 'ஆசுவாஸ'த்தின் (என்) மொழிபெயர்ப்பு:


நிம்மதி

 - கல்ப்பெட்டா நாராயணன் (மலையாளம்) 


அம்மா இறந்தபோது 

நிம்மதியாயிற்று. 


இனி நான் இராப்பட்டினி கிடக்கலாம் 

தொல்லை பண்ண யாரும் இல்லை. 


இனி உலர்ந்து காயும்வரை நான் தலைதுவட்ட வேண்டியதில்லை

யாரும் முடிக்கற்றையை விலக்கிப் பார்க்கமாட்டார்கள். 


இனி நான் கிணற்றின் ஆள்மறைவில் உட்கார்ந்து 

தூங்கியாடிக்கொண்டே புத்தகம் படிக்கலாம் 

பாய்ந்தெத்தும் கூக்குரல் என்னை 

திடுக்கிட்டெழச்  செய்யாது.


இனி அந்திநேரங்களில் வெளியே செல்லும்போது 

நான்  டார்ச் எடுத்துச்செல்ல வேண்டாம் 

விஷம் தீண்டி 

ரோமத்துளைகளிலூடே 

இரத்தம் கசிந்து செத்த 

பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து 

உறக்கத்தினின்றும் விதிர்த்தெழுந்திருந்த மனது 

நேற்றைக்கு இல்லாமலானது.


இனி நான் சென்றுசேருமிடத்தில் உறங்கலாம் 

நான் வந்துசேர்த்தால் மட்டுமே 

அணையும் விளக்குள்ள வீடு 

நேற்றைக்கு அணைந்துவிட்டது. 


நான் அனுபவிக்கும் அத்தனையும் தன் குற்றமே 

என்ற கர்ப்பகால நினைப்பிலிருந்து 

அம்மா நேற்று விடுதலையடைந்தாள். 


கடைசியில் அம்மா என்னைப் பெற்றுத் தீர்த்தாள். 


உலகில் உடல்வேதனை காரணத்தாலன்று 

துக்கத்தால் இனியாரும் அழ மாட்டார்கள்.


இது கவிஞர் நினைவிலிருந்து சொல்லியது. இதன் பிரசுர வடிவம் இங்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...