முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாயிற் கடையாய்...

 ச முகமதலியின் நெருப்புக்குழியில் குருவி (இயற்கையியல் சார்ந்த இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் - அங்குசம் வெளியீடு, டிசம்பர் 2012) என்ற நூலைப் படித்தேன். பழந்தமிழிலக்கியம் தொட்டுச் சமகாலப் படைப்புகள் வரையில் காட்டுயிர்கள் பற்றிய அறிவியல் பார்வையற்று இருப்பதையும் செய்தி ஊடகங்கள்  காட்டுயிர் பற்றிய செய்திகள் மற்றும் கட்டுரைகளில் காட்டும் அலட்சியம் பற்றியும் எழுதியிருக்கிறார். எளிய உயிர்களாகப் பார்க்கப்படும் பன்றி, கழுதை, நாய் என்பன போன்றவற்றை முன்வைத்து மனிதரை ஏசுவது குறித்துத் தன் ஆட்சேபங்களை, எதிர்ப்புகளைக் கடினமான, உறுதியான குரலில் பதிவு செய்கிறார். எளிய மனிதர் முதல் அரசியல் பிரமுகர்கள், திருவருக்கள், என்று யாரையும் விட்டுவைக்காமல் சேர்த்துச் சாடியிருக்கிறார். 


நாம் இயல்பாகப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் மிருகங்கள் குறித்த சொலவடைகள் பொதுப்புத்தியில் மிருகங்கள் குறித்த தவறான புரிதல்களுக்கு வழிவகுப்பதாகச் சொல்லும் அவர், இம்மாதிரியானவற்றைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றிற்கான சரியான அறிவியல் தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.

இப்புத்தகத்தில் (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம் வந்திருக்கும் இரண்டாம் பதிப்பில்) வந்த அணிந்துரை மற்றும் ஒரு மதிப்புரை ஆகியன முகமதலி மனிதர்களை விடவும் மிருகங்களே மேலான உயிர்கள் என்று நிறுவுவதாகவும், அது தவறானது என்று மறுத்துமிருந்தன. இது பற்றிய என் எண்ணங்கள் இப்பதிவில்... 

காட்டுயிர் நவீன மனிதனைப் பலவகையில் வசீகரித்துள்ளது, அவற்றினின்றும் மனிதன் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பல. இருக்கும் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளுவதும், அச்சூழலுக்கு ஏதேனும் வகையில் முக்கியப் பங்காற்றித் தம்மை அச்சூழலின் இன்றியமையாத பாகமாக மாற்றிக் கொள்ளுதல் மனிதன் தவிர்த்த அனைத்து உயிரினங்களின் இயல்பு. இவ்வாறே காடுகளும், நீர்நிலைகளும், விலங்குகளும், மற்ற பூச்சி, தாவர இனங்களும் தம்மை இப்புவியில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிவந்தன. மனிதரும் நவீனமாகுமுன்பு இதையே செய்துவந்தனர்.
Indian Bison at Parambikkulam Tiger Reserve, Kerala - 2016 (Photo by author)

தம் வசதிக்கேற்பத் தாம் வாழும் சுற்றுச் சூழலை மாற்றியமைக்கத் தொடங்கினர் மனிதர். இயற்கை வளங்களை, காட்டுயிரை, மற்றும் இந்தப் புவியையே தமக்கு ஏவல் செய்யும் விதமாக எண்ணி, இவற்றைத் துச்சமாக மதிக்கத் துவங்கினர். தொழிற்புரட்சியின் காலந்தொட்டு, தொழிலுக்காகவும், தம் வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்காகவும் பல கண்டுபிடிப்புகளைச் செய்தனர். இந்நவீனங்களுக்காய் எரிபொருளைக் கண்டடைந்தனர். பல்லாயிரமாண்டுகளாக இயங்கிவந்த, தம் பாகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள பெரும்  அமைப்புகளான  காடுகளை அழித்துத் தொழில்முறை விவசாயத்தையும் நகரமயமாக்குதலையும் தொடங்கினர். அப்போது அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்  - காடுகள் வெறும் மரங்களின், தாவரங்களின், விலங்குகளின் ஒரு பேட்டை மட்டுமல்லவென்று; காடுகள் உயிரியக்கமுள்ள காடுகள் ஆவதற்கும் பல ஆண்டுகளாகும் என்பதை; காற்றை, நீரை, உணவைச் சாதகமாக்குவது காடுகளே என்பதை.

எரிபொருள் சார்ந்த தொழில்கள் கரியமில வாயு, மற்றும் இன்ன பிற நச்சுகளை பூமண்டலத்தில் பரப்பின. தொழில்முறை விவசாயம் பூமியின் மேற்பரப்பிலுள்ள வளமான மண்ணை வளமிழக்கச் செய்தது; இன்னும் செய்துகொண்டிருக்கின்றது. பயிர்களையும் வீடுகளையும் பாதுகாத்துக்கொள்ள மனிதன் கண்டுபிடித்த இரசாயனப் பூச்சிகொல்லிகள் நம் காற்றிலும், நீரீலும், உணவிலும், தாய்ப்பாலிலும்கூடக் கலந்துவிட்டது. இதை 1962ல் புத்தகமாக எழுதி இரசாயனப் பூச்சிகொல்லிகளை ஒழுங்குபடுத்தவும், ஆபத்து விளைவிக்கும் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தவும் வழி செய்த ரேச்சல்.எம். கார்சன் என்கிற (உயிரியல் பட்டதாரி) எளிய பெண்மணி நம் நன்றிக்குரியவராகிறார். 

நகரமயமாக்கல் நம் இயற்கைவளங்களின் மேல் தாங்கவொண்ணா அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இன்றைக்கு ஒரு ஆண்டில் நாம் நுகரும் வளங்களை உற்பத்திசெய்யப் புவிக்கு ஒன்றரை ஆண்டுகள் பிடிக்கிறது. 

அந்த நுகர்ச்சியால் பல்வேறு உயிரினங்கள் வாழ்விடம் இன்றி அழிந்து போய்விட்டன. இவ்வுயிரினங்கள் மனிதர் போலன்றிப் புவியின் பேண்தகுநிலைக்கு இன்றியமையாதவையாகும்!  யோனாசு எட்வர்ட் சால்க் என்ற அமெரிக்க  நச்சுயிரியலாளர் சொன்னது: "உலகில் உள்ள பூச்சிகளையெல்லாம் அழித்துவிட்டால் இன்னும் 50 ஆண்டுகளில் இப்புவியில் எல்லாவுயிரும் அற்றுப்போய்விடும்; அன்றி, இவ்வுலகில் மனிதவினம் முற்றும் அழிந்துபோய்விட்டால் இன்னும் 50 ஆண்டுகளில் எல்லாவிதமான உயிர்களும் தழைக்கும்"

இன்றைக்கு மனிதர்களே இப்புவியை வாட்டும் நோய்க்கிருமிகள் எனலாம். வளங்களைச் சுரண்டித் தமக்கும் புவியின் மற்ற உயிரினங்களுக்கும் அழிவு தேடிக்கொள்ளும் ஒன்றை நாம் வேறு எங்ஙனம் குறிப்பது?

"நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற்சிறந்த தயாவான தத்துவனே"

என்கிற திருவாசக  வரிகளை நினைத்துக்கொள்ளுகிறேன். எத்துணை எளிய பிறப்பாக நாய் பார்க்கப்பட்டாலும் (இதை முகமதலி ஒப்புக்கொள்ளமாட்டார்)   அது நன்றி மறப்பதில்லை, ஆனால் மனிதரில் கீழோர் இப்பிறப்பை அளித்த இறையை (இயற்கையை என்று படிக்கிறேன்) மறந்து நாயிற் கடையானாரே என்கிறார்.  இயற்கையும் இறையைப் போலத் தாய்மையுடைத்து. ஆனால் அதை அழித்து வாழ்வேது? 

உண்மையில் இப்புவியின் கடைநிலை உயிரினம் மனிதனே! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...