டெட் ஹ்யுக்ஸின் Thought Fox என்ற கவிதையின் சுமாரான மொழிபெயர்ப்பு ஒன்று (இணையத்தில்) கண்ணில் பட்டது. ஒரு கறாரான, நெகிழ்வற்ற மொழிபெயர்ப்பு முறையைப் பின்பற்றி, எல்லா ஆங்கிலச் சொற்களையும் இயந்திரத்தனமாக மொழிபெயர்த்தது போல் எனக்குத் தோன்றியது.
இதன் மூலம் இங்கே.
ஓரு நள்ளிரவில் காட்டில் சந்தடியில்லாமல், அரவமற்று வந்து போகும் நரியைப் போலவே யாரும் அறியாமல், எதிர்பாராத தருணத்தில் எழுத்தாளருக்குக் கற்பனை தோன்றி மறைகிறது. அந்த நழுவும் பொழுதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை. மேற்சொன்ன மொழிபெயர்ப்பில் சில "அடாவடிச்" சொற்கள், மற்றும் வரிக்கு வரி நேரான மொழிபெயர்ப்பு முறை, ஆகியவை அந்த இரவின் அமைதியையும், நரியின் கள்ளத்தனமான வந்துபோக்கையும் குலைத்து விட்டதாகக் தோன்றியதால் இம்முயற்சி. இதுவும் அவற்றையெல்லாம் சரியாகக் கொணர்ந்ததாகத் தெரியவில்லை.
எனினும் ஒரு அங்கலாய்ப்பில் வேறுவிதமாக முயன்றிருக்கிறேன்.
இந்த நள்ளிரவுத் தருணத்தின் காட்டைக் கற்பனை செய்துபார்க்கிறேன்:
கடிகாரத் தனிமைக்கும்
வெற்றுத் தாளில் நகரும் என் விரல்களுக்கும் அருகில்
வேறேதோ உயிர்ப்புடன் இருக்கிறது
என் சன்னலின் வழியே நட்சத்திரம் ஏதும் தெரியவில்லை:
ஏதோவொன்று மிக அருகில்
ஆனால் இருட்டின் உள்ளே பொதிந்து
இத்தனிமையின் உள்ளே நுழைந்துகொண்டிருக்கிறது:
சில்லென்று, மெல்லென இருள் பனியைப்போல
ஒரு நரியின் மூக்கு சுள்ளியில், இலையில் படுகிறது;
இரண்டு கண்கள் மட்டும்
ஒரு நகர்வைப் புலப்படுத்துகின்றன, அஃதிதோ
மீண்டும் இதோ,
இதோ,
இதோ
மரங்களுக்கு இடையே திருத்தமான தடங்களை
உறைபனியில் பதித்து,
மரத்தண்டுகளிலும் இடைவெளிகளிலும் நீண்டு சுருங்கித்
தயக்கத்துடன் பின்தங்கிச் செல்லும்
மெல்லிய நிழலைத் தாங்கி
வெட்டவெளிகளின் ஊடாகத்
தெளிந்து வரும் உடம்பு,
ஒரு கண்,
வர வர விரிந்து தீவிரமாகும் பச்சையுடன்,
ஒளிர்ந்து, குவிந்து,
தன் பாட்டிற்கும் வருகிறது
இறுதியில் சட்டென்ற நரியின் காத்திரமான சூடான நெடியுடன்
அது தலையின் இருண்ட பொந்தில் நுழைகிறது.
சன்னலில் இன்னும் நட்சத்திரங்கள் இல்லை; கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது,
தாள் நிரம்பிவிட்டது
கருத்துகள்