முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த 

டிவியை அணைத்தேன் 


என்ற  (யாரோ எழுதிய - கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும். 

முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலைக் கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை எழுதுதல் 'இரு கோடுகள்' கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பதைப் போன்ற பயிற்சியாக மலிந்துவிடும். 


Art by author's daughter

கலைஞன் கொந்தளிப்பான மனநிலை கொண்டவன். எப்போதும் உணர்வெழுச்சிகளின் தாக்கத்திலே கட்டுண்டிருப்பவன். இந்தக் கெட்டிக்காரத்தனத்தின் சிறுமை கலைஞனின் கோபமாய், ஒரு 'மொழிக் கவிதை'யாய் வெளிப்படுகிறது. 


கொசு கடித்தது 

குளித்தேன் 


கவிதையும், தத்துவமும், குறியீடுகளும் சந்திக்கும் நுட்பமான வெளியிலே  மொழிக்கவிதை சாத்தியப்படுகிறது. இவை வாசகரின் பங்கேற்பைக் கோருகின்றன. கவிதைப் புனைவின்  மரபார்ந்த நுட்பங்களை விடுத்து, வாசிப்பவரை மொழியலசலினூடே கவியின்பத்தைக் கட்டமைக்கத் தூண்டுபவை இவை. இங்கே மொழியானது வெறுமோர் இடையீட்டுக் குறியாகச் செயற்படுவதில்லை. மாறாக, மொழியே கவிதை வடிவமாகப்  பயன்படுகிறது / பயன்படுத்தப் படுகிறது. 

இங்கே கிரடிலிசம் (Cratylism) என்ற தத்துவக் கோட்பாட்டை நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும். இது மொழிக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இயல்பான தொடர்பு இருப்பதாக நம்புவது, அதிலும் ஒரு பிரதிபலிப்புத் தன்மை (mimetic virtue)இருப்பதான கற்பிதத்தை அடிப்படையாகக் கொண்டது.  அடிப்படை மொழியியல் இக்கோட்பாட்டை மறுக்கிறது - மொழி தற்செயலானது, மற்றும் வழங்குதன்மை சார்ந்தது (arbitrary and conventional) என்பதே மொழியியல் நிலைப்பாடு. இதிலே கவிதையைப் பொருத்தமட்டில் மொழியின், தான் குறிக்கும்  பொருளைப் பிரதிபலிக்காத/ நடித்துக்காட்டாத தன்மை மொழியின் குறைபாடாகிறது. இம்மொழிக்குறைபாடே இலக்கியத்தில் கவிதையின் இடத்தைச் சாத்தியமாக்குகிறது. கவிதையின் இருத்தலை அது நியாயப்படுத்திடுகிறது. இதன் தொடர்ச்சியாக மொழியே இரண்டு மொழிகளைக் கொண்டு இயங்குவதாகிறது - ஒன்று மொழியியல் சொல்லும் 'பொருளைக் குறிக்கும்' தற்செயலான, வழக்கமான செயல்பாடு; மற்றொன்று (வேண்டிய) பொருளைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட கவித்துவ மொழியாய்ச் செயற்படுவது.  

கொசு அன்றாட வாழ்க்கையின் தினசரிப் பிரச்னைகளின் குறியீடாகிறது. அதிலும், நாம் எப்போதும் சந்திக்கிற, எளிதில் கடந்து போகிற பிரச்சனைகளின் பிரதிபலிப்புமே அது. சஹாரா பாலைவனத்தை நடந்தே கடந்தவனுக்குக் காலணிக்குள்ளே புகுந்த மணல்த்தரியே பெரும் பிரச்னையாயிருப்பதுபோலவே (பாலையின் தீவிரமான தட்பவெட்பங்களோ, குடிநீர்க் குறைபாடோ, நிழலின்மையோ அல்லாமல்) நம்மை எப்போதும் 'கடிப்பன' கொசுவைப்போன்ற சிறிய விஷயங்களே. 

மேலும் கொசு கடித்தது என்ற வரியில் கவிதை சொல்லியின் சமூக, பொருளாதார நிலை பற்றிய புரிதலும் நமக்கு கிடைக்கிறது. நாம் ஈடுபாட்டுடன் செய்யும் எதிலும் மூழ்கிவிடுதலால் கொசு கடித்தல் என்பது ஒரு சொல்லத்தக்க, நினைவுகூரும் நிகழ்வாக இருப்பதில்லை. இங்கே  கவிதைசொல்லி எதிலும் ஈடுபாடின்றி சலித்த மனநிலையில் (ennui) கட்டுண்டிருப்பதும் புலனாகிறது.


குளித்தேன் 


என்று தொடரும் வரியில் உள்ளது மொழிக்கவிதையின் சூட்சும முடிச்சு. மொழிக்கவிதைகளின் 'பத்துக் கட்டளை'களில் ஒன்று பாரடாக்சிஸ் (parataxis) என்ற உத்தி. உளவியல் நோக்கில் இவ்விரு வரிகளும் கட்டமைப்பது இருத்தலின் சலிப்பையும் (கொசு கடித்தது), அதை மீற முயலும் மனித எத்தனங்களையுமே (குளித்தேன்). ஆனால் இவ்வரிகளைத் தொடர்புபடுத்தும் சொல் ஏதும் இல்லாமால் வரிகளை அடுத்தடுத்து அடுக்குவது பன்முக வாசிப்புக்கான வெளியை ஏற்படுத்துகிறது. கவிதையை வாசிப்பவரே அதை மொழியின் மூலம் கட்டமைத்துக்கொள்ள உதவுகிறது.

மொழிக் கவிதைகள் கொள்கைரீதியாக 'முடிவு கட்டுதலை' நிராகரிப்பவை (rejection of closure). கவிதையோ, எந்தப்புனைவோ எங்கே தொடங்க வேண்டும், எங்கே முடியவேண்டும் என்பது தற்செயலானவொன்று. கவிதை 'முடிவதால்' அதன் சிந்தனையோ, அவதானங்களோ, எண்ணவோட்டங்களோ முடிவதில்லை. கவிதை சிலவரிகளுக்குள்ளே சொல்லப்படுவதன் காரணம் கவி தன் சொற்களையும், மற்ற அலகுகளையும் 'தீர்த்துவிட்டதன்' விளைவாகவே. அது  முடிவதில்லை; நிறுத்தப்படுகிறது. இது மொழிக்கவிஞர் லின் ஹிஜினியன் இதே தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியின் (தரம் குறைந்த) மொழிபெயர்ப்பு. 

மூலம் இங்கே (முழுக்கட்டுரைக்கான சுட்டி மேலே)

"Whether the form is dictated by temporal constraints or by other exoskeletal formal elements—by a prior decision, for ex­ample, that the work will contain, say, x number of sentences, paragraphs, stanzas, stresses, or lines, etc.—the work gives the impression that it begins and ends arbitrarily and not because there is a necessary point of origin or terminus, a first or last mo­ment. The implication (correct) is that the words and the ideas (thoughts, perceptions, etc. —the materials) continue beyond the work. One has simply stopped because one has run out of units or minutes, and not because a conclusion has been reached nor “everything” said."

ஆக, கவிதை வாசிப்பும், அக்கவிதையை மனதில் கட்டியெழுப்புவதும் கவிதை 'முடிந்த' பிறகும் தொடர்கிறபடியால் கவிதைக்குள்ளேயே முடிவு கட்டுதல் நடப்பதில்லை. மேலும், ஒரு சனநாயகத் தேர்வாக, பிரதியில் வாசகரைப் பங்கேற்க வரவேற்குமுகமாக, பிரதி திறந்தே  (open text)அமையவேண்டும் என்பதும் மொழிக்கவிதையின் இயல்பு. 

அவ்வகையில் எந்த முடிவையும் முன்வைக்காமல், இக்கவிதை வரிகளைத் தாண்டி நீண்டு உயிர்க்கின்றது; பிரதி வாசகனின் பங்கேற்ப்புக்காய்த் திறந்தும் இருக்கிறது என்பதைச் சொல்லி இந்த அலசலை நிறைவு செய்யலாம். 

கருத்துகள்

Sri இவ்வாறு கூறியுள்ளார்…
இதை எப்படி படிக்காமல் விட்டேன் ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர