ஒருவரின் பெயர் ‘சார்’ என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா?
ஆனால் “என் கணக்கு வாத்தியார் கணேசன் சார்” என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது. ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ?
இந்த கணேசன் சார், கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவது ‘டியூசன் சார்’, ‘சும்மிங் சார்’ போன்றவை.
“என் பையனோட வயலின் சார் இருக்காரே, அவர் பெரிய மேதை!”
-- இதில் “சார்” விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது.
இதில் கலாச்சாரம் (உடை) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன். அதாவது, வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்தி ‘வாத்தியார்’. நீளக்காற்சட்டையுடன் ‘இன்’ பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தே “சாரே” யாவார்.
நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும் வெகுவாகப் பரவிக்கிடக்கிறது.
பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழிச் சொற்களுண்டு.
கல்லூரியில் தமிழ்ப்பேச்சுப்போட்டியில் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு நிமிடம் பேசக் கேட்டிருந்தார்கள். அதிலொன்று, வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்தாமல் பேசுவது.
கோவையிலேயே பிறந்து வளர்ந்த, பஞ்சாபிலிருந்து பெயர்ந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நண்பன் பேசினான்:
“கண் - இதை வைத்துக்கொண்டு சைட் அடிக்கலாம்”
உடனே அவனைப் போட்டியிலிருந்து விலக்குவதாக அறிவித்தார்கள். அவனுக்கும் தான் என்ன பிழை செயதோமென்றே புரியவில்லை. சைட் என்பது ஆங்கிலச் சொல் என்பதைச் சுட்டவும், அவன் வெகுண்டு, “நான் சொன்னது தமிழ் சைட்” என்று சண்டைக்கு நின்றான் அப்பாவியாக.
தமிழ் சார் போலல்லாது தமிழ் சைட் எனபது பதின்வயதினரே மிகுதியும் (அதிலும் பழைய பத்தாண்டொன்றில்) பயன்படுதுவதாயிருந்தது. அவர்கள் வளர்ந்தவுடன் அதைவிட்டும் விட்டார்கள்; அந்தப் பயன்பாடு ஏறக்குறைய அற்றும்போய்விட்டது. ஆனால் இப்போது சார் பயன்பாடு தமிழைப் பீடித்துள்ளது.
இயல்பான தாய்மொழியறிவு குன்றியும், இந்தித் திணிப்பு மீண்டும் தலைதூக்கிக்கொண்டும் இருக்கிற இந்தக்காலத்தில் தமிழை மறக்காமல் பேசுவதே பெரிது என்றாகிவிட்டது. இதிலே ‘சாரை’ விட்டொழித்து ஐயா, வாத்தியார் என்பனவற்றைப் பயன்படுத்தச் சொல்லிக்கேட்பது ‘ராவுத்தரே கொக்காப் பறக்கிறார், குதிரைக்குக் கோதுமை ரொட்டி கேட்கிறதோ?’ என்பதுபோலத்தான் இருக்கிறது.
அப்படிச்சொன்னாலும் “நான் சொன்னது தமிழ் சார்” என்று நம்மிடம் மல்லுக்கட்டினாலும் வியப்பதற்கில்லை.
இருந்தாலும் கேட்பதற்குச் சகியாமல் நாராசமாய் இருப்பதால் சொல்லிவைக்கிறேன்; நண்பர்களுக்கும் அறிவுரைக்கிறேன்.
இது மொழிசார்த் தொல்லையே.
கருத்துகள்