முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தும் வாசிப்பும்

நாட்குறிப்பு எழுதிப் பல நாட்கள் ஆகின்றன. 

அலுவலகத்தில் கட்டுப்பாடுகளுடன் செய்த வேலை சலித்து, அம்மனிதர்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் போனது.  அலுவலக வேலையை விட்டொழித்து, மீண்டும் அந்நரகத்துக்குப் போகக்கூடாது   என்று  வெஞ்சினம் கொண்டு  வேறு பல வேலைகளை மேலிழுத்துப் போட்டுக்கொண்டேன். நாய்க்கு வேலையில்லை; ஆனால் நிற்பதற்கும் நேரமில்லை என்று சில நாட்கள் ஓடின. தொண்டூழியம், வீட்டுறையப்பன் (stay-home dad), என்று பல அடவுகள்,  இந்த இடைவெளியில். நண்பர்களை அலுவல் நேரத்தில் அரைநிஜாருடன் போய்ப் பார்த்து காபி குடிக்க அழைத்து வில்லச்சிரிப்பும் எக்காளமுமாய் அவர்களை வயிறெரிய வைத்தேன். இன்னும், ஆபீசென்னும் நரகத்திலிருந்து தப்புவதெப்படி என்று அவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்யவாரம்பித்தேன். சட்டையில் ‘ask me how?’ என்ற வில்லையைக் குத்திக்கொண்டு நடுத்தெருவில் நிற்கவும் ஆயத்தமானேன். ஆனால் இரண்டேயாண்டுகளில்  விதி என் காலரைப் பிடித்துத் ‘தறதற’ வென  இழுத்து வந்து மீண்டுமொரு  வேலைஸ்தலத்தில் விட்டுச் சென்றுவிட்டது. நமக்கு அவ்வளவுதான் ஆசீர்வாதம்.

வேலை முந்தைக்கிப்போது எவ்வளவோ பரவாயில்லை.   இனி மனத்திற்குச் சோர்வோ அழுத்தமோ கொடுக்கும் பணிகளைச் செய்வதில்லை, நச்சுச் சூழலை சகிப்பதில்லை  என்று சூளுரைத்திருக்கிறேன். விரும்பிச் செய்யும் வேலைகளானாலும் நேரத்தை விரும்பியபடி வளைக்க முடியவில்லை. ஏற்றுக்கொண்ட பணிகளும் போக, சொந்த மகிழ்வுக்காக 'அப்புறம் பார்க்கலாம்' என்று ஒத்திப் போட்ட எழுத்திற்கு நேரம் வாய்ப்பதில்லை.

ஐஃபோன் / ஐ ஓ எஸ் செயலியான 'நோட்ஸ்' ஸில் கைவலிக்கத் தமிழில் கிறுக்கியதில் சிலவற்றைத் தூசு தட்டி வலைப்பதிவேற்றம் செய்துவருகிறேன். 2004 ல் தமிழில் வலைப்பதிவு எழுதியபோது மொழியிலும், பேசுபொருளிலும் லேசுத்தனமை இருந்தது. இப்போதெல்லாம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும்போது, அல்லது எட்ட இருக்கும் எதையோ எடுக்கப் போகும்போது ஆவது போல எழுதும்போது  மொழி எங்கேயாவது 'பிடித்துக்கொண்டு' விடுகிறது. மொழியிலும், உள்ளடக்கத்திலும் அழுத்தம் கொடுக்கப்போய்ச் சற்றும் நெகிழ்வற்ற  அசட்டுமொழியொன்று வந்து உட்கார்ந்துகொள்கிறது.  தேய்பதங்கள் / தொடர்கள், அடி / முதல் மறந்த நீண்ட வாக்கியங்கள், (துல்லியம் என்று நினைத்துக்கொண்டு) சில வேற்றுகிரகச் சொற்கள் சேர்ந்து, 'மண்ணுமில்லை, சாணியுமில்லை' என்பது போல ஆகிவிட்டது எழுத்து. 

---


வாசிப்பில் வேறுவிதமான தொல்லைகள். 

கண்ணூரில் ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது பளபள அட்டையுடன் கூடிய ஆங்கிலப்புத்தகமொன்று கையில்  அகப்பட்டது. புரட்டிப்பார்த்ததில் அது  நண்பரின் தோழி (பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறார்) இராமாயணத்தை  108 கவிதைகளாக எழுதிய  ஆங்கிலக்கவிதைத் திரட்டு என்று தெரிந்தது (Preetha TK,  The Flame Of Ram "A Poetic Re-Telling”). அதைப் பற்றி விசாரித்ததிலேயே நண்பருக்கு உற்சாகம் - பிரதியைக் கையில் திணித்துப் படிக்கச் சொல்லியனுப்பிவைத்தார். நானும் இரண்டு மூன்று கவிதைகளைப் படித்துவிட்டு கவிதைகள் சுமாராக இருப்பதாக விமரிசனம் செய்தேன். 

முதற்காரணம், வரிகளைக் கவிதையாக்க அவர் வலிந்து திணித்த இயைபுத்தன்மை (rhyme) - வரிகளின்  ஈற்றுசீர் ஒரே ஓசையில் ஒலிக்க வேண்டுவதற்காய் சில நேரங்களில் சொற்களை முன்னும் பின்னுமாகப் போடுவது  (anastrophe) கவிதை மொழிக்கு அழகே. அனால், நூற்றியெட்டிலும் இது தொடர்ந்து வருவது எரிச்சலூட்டியது. 

இரண்டு, ஆசிரியர் மலையாள மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டிருந்தாலும் இராமனை ராம் என்றும், இராவணனை ராவண் என்றும் குறிப்பிடுவது  - இவ்வாறே எல்லாப்பாத்திரங்களையும் குறிக்கிறார். இராமன் என்றும் இராவணன் என்றும் எழுதியிருக்கலாம். இது இன்னும் எரிச்சலூட்டுவது.

மூன்று, இக்கவிதைகளை முழுமையான ஆங்கிலக் கவிதையாகப் படிக்கமுடியாமை -  பாத்திரங்களின் பெயர் தொடங்கி ஊர்கள், ஆயுதங்கள் என்று பல்வேறு சொற்கள் வடமூல மொழியிலேயே குறிப்பிடப்படுவதால் அடிப்படையில் இது ஆங்கிலமும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள மொழியாகிறது. இதிலே ஆங்கில மொழியின் நுட்பக் கலவையாய் கவிதை மலர்வது எனக்கு நடக்கவில்லை.

அப்புறம் யோசித்துப்பார்த்ததில், வடமொழி மூலத்தில் இருபதாயிரம் சுலோகங்களுக்கு மிஞ்சியும், கம்பராமாயணத்தில் பத்தாயிரத்துச் சொச்சம் செய்யுள்களும் கொண்ட பெரும் படைப்பை நூற்றியெட்டு ஒருபக்கக் கவிதைகளில் அடக்குவதே ஒரு சாதனையாகத் தோன்றியது.  அப்புறம், இராமாயணம் அது படைக்கப்படட காலந்தொட்டு ஏன் பல முறை மறுபக்கம் செய்யப்படவேண்டும் என்ற கேள்வியும் விடாமல் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தது. மேற்சொன்ன (பிடிக்காமல் போனதன்) காரணங்கள் என் தனி விருப்புவெறுப்பு சார்ந்தது என்பதனால், சந்தேகத்தின் பலனை ஆசிரியருக்கு அளித்து இன்னும் கவனமாக அவற்றைப்  படிக்கத்தொடங்கினேன். 

எனக்கு இராமாயணக் கதை முழுதாகத் தெரியாது. சில கட்டங்களில் என்ன நடக்கிறதென்று தெரியாததால், மூலக்கதையைப் படிக்க முனைவதுடன், இராமாயணத்தைத் தமிழில் இயற்றிய கம்பர் ஏன் கவிச்சக்கரவர்த்தியாகப்  புகழப்படுகிறார் என்றும் தெரிந்துகொள்ள, கம்பராமாயணத்தில் வந்து முடிந்திருக்கிறது படிப்பு. தமிழ்த் தேர்ச்சி போதாத எனக்கு இது வழுக்குப்பாறையில் பிடிமானம் தேடுவதுபோலவே இன்னுமிருக்கிறது. "வழுக்குப்பாறை பார்த்துக்கொள்ளும்" என்று நண்பன் தேற்றியிருக்கிறான்.

ஈதிப்படியிருக்க, புத்தகங்களை விரும்பி வசிக்கிற பக்கத்து வீட்டுக்காரருக்கு அண்மையில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் - அவர் விரும்பும் எழுத்தாளரின் படைப்புகள் குறித்த உரையாடலின் மின்னிணைப்புடன். நண்பர் ஐம்பது வயதுக்காரர். அந்த எழுத்தாளரின் படைப்புகளை இன்னும் படிப்பதில்லை என்று மறுபடியனுப்பியிருந்தார். கூடவே இப்படி ஒரு கணக்கும்: அதாவது, இன்னுமவர் இருபதாண்டுகள் உயிர்வாழ வாய்ப்புள்ளது என்று கொண்டால் (அவரே சொன்னது) இரண்டு மாதங்களுக்கொரு நூல் என்ற வேகத்தில் ஆண்டுக்கு 6 புத்தகங்களும், இருபதாண்டுகளில் இன்னும் 120 புத்தகங்கள் படிப்பார்.  இந்த ஆயுட்காலத்தில் இன்னும் 120 புத்தகங்களையே படிக்க முடியும் என்பதால்  முளைத்திருக்கும் / இன்னும் முளைக்கும்  புதிய விருப்பங்களுக்கு அந்த 120 ஐப் பங்கீடு செய்வதே பாடாயிருக்க, படித்ததை மீண்டும் படிக்க நேரமில்லாததால், எதைப் படிக்கவேண்டும் என்பதை மிகுந்த திட்டமிடுதலுடன் செய்வதாகவும் சொன்னார். 
இதைப் பார்த்ததும் நானும் கணக்குப் போட்டேன்.  ஆண்டுக்கு இரண்டு நூல்கள் வீதம் படிக்கும் நான்  ஐம்பது புத்தகங்கள் படிப்பதே பெரியது என்று தெரிந்தவுடன் பீதியில் கலங்கிப் போயிருக்கிறேன். இதிலே இராமாயணம் வேறு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை