இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள்.
“அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி,
இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்?
உன் துயர் தீர வழியென்ன?
காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு?
கருணை படைத்தவளே!
மற பெண்ணே,
விடு கண்ணே
உன்னுயிர்த் தலைவன்
சடுதியில் வருவானோ, வாரானோ!
இன்னும் காத்திராதேயம்மா
நாகக்குழலி (நாகவேணீ)!”
இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா?
இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும் எந்த உபசார வார்த்தைகளும் இல்லாமல் எளிய, நேரடியான மொழியில் அமைந்துள்ள இப்பாடல் நம்மை ஆட்கொள்கிறது. பரிவுடனே தோழி இவளைக் கடிந்து கொள்வதை இசைப்பதில் கானடா இராகம் சரியான தேர்வாய்த்தோன்றுகிறது.
இப்பாடலை ஐதராபாத் சகோதரர்கள் பாடிய ஒலிப்பதிவு கீழே. வேறு சில பாடகர்கள் இதைப்பாடியிருந்தாலும் இந்த இரட்டையர் பாட்டே எனக்குப்பிடித்தமானது. பெங்களூர் கச்சேரியொன்றில் இதை இவர்கள் பாடி நேரடியாகவே கேட்டிருக்கிறேன் (அன்று மிக அற்புதமாகப் பாடினர்). பாடலாசிரியர் பற்றிய குறிப்புகள் இணையத்தில் நான் தேடியவரை குறைவாகவே காணப்படுகின்றன.
பாடல் வரிகளைத் தமிழ்ப்’படுத்தாமல்’ ஆங்கிலத்திலேயே தருகிறேன்:
cArumatI upacAramu lETikE
mIrina shOkamulE rIti dhIru
sarasuDu jUDani AbharaNamu lETikE maracEnAtamE karuNAshAli
vEgamE prANaEshuDu rAgavaDO rADO jAgu jEsunO nAga vEnirO
சாப்பு தாளம் - இது ‘அதீத எடுப்பு’ என்று சொல்லப்படும், தாளச்சுழற்சியின் ஆரம்பத்திற்கு ஒரு தட்டு முன்னதாகவே பாடலை ஆரம்பிக்கும் அமைப்புப்பெற்றது. என் போன்ற குளியலறைப் பாடகர்களுக்குத் தாளம் போட்டுப் பாடவும் கடினமானது. பட்டாபிராமைய்யா தாள வேலைகள் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அறிகிறேன்) தாள / இலயத்தை மனத்தில் இருத்திய நடனமணிகள் சதிராடிப் பாடியிருக்கவேண்டும். அவர்களை மரியாதையுடன் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.
"ஜாகு சேயுனோ நாக வேணீரோ!"
விடாமல் துரத்துகின்றன இவ்வரிகள். பரிவும் ஆழ்ந்த காதலும் இல்லாமல் இப்படிப்பட்ட மொழி யாரிடமிருந்தும் வராது.
இது என்ன மொழி?
உபசார வார்த்தைகள் இல்லை. அரசியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டதில்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. அன்பு கொண்டவர்களிடத்திலே மட்டும் நாம் பாவிக்கும் அந்தரங்க மொழி இது. இது வலிந்து வரவழைக்கப்பட்டதல்ல - அன்பினாலே இயல்பாய் வருவது. அன்பில், காதலில் கரைந்து, 'கருணைக்கடல் பெருகி, காதலினால் உருகி' வந்த மொழி.
அப்படித்தான் சொல்கிறாள், 'சேயுனோ'. 'ஓ' என்ற ஒலியில் நெருக்கம் அதிகமாகிறது.
ஆனால் 'வராத காதலனுக்காய்க் காத்திருந்து உன்னை வருத்திக்கொள்ளாதே' என்று பரிவில் சொன்னாலும் காதல் வயப்பட்டவளுக்கு அது கடுமையாகத் தானே தெரியும்? அதனால் உடனே தன் உள்ளத்து அன்பையெல்லாம் திரட்டிச் சொல்லுகிறாள் : 'நாகத்தைப் போன்ற மயிர்ப்பின்னல் உடையவளே'!
அதைச் சொல்லும்போது அவளைத் தாயன்போடு கட்டியணைத்திருப்பாளோ? இயலாமையின் பொருட்டு அப்போது அவள் கண்கள் நிறைந்திருக்குமோ?
இந்த உணர்ச்சிக்கொந்தளிப்பைப் பாடலின் இசை நன்கு எடுத்துக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது . 'வேணீ...ரோ' என்று குழைந்து இழுத்துக் காட்டுகிறான் கைதேர்ந்த பாட்டுக்காரன்.
இன்னும் இது என்னை விட்டபாடில்லை...
கருத்துகள்