முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை பாடிய தாலாட்டு

சிதார் - மகிழ்ச்சியான தருணங்களுக்கான இசைக்கருவி. அடித்துப் பெய்யும் பெருமழை போல, சலசலத்து ஓடும் அருவி போன்ற குதூகலத்துடனேயே இதன் இசையும் நம்மை நொடிப்பொழுதில் நனைத்து விடக்கூடியது. அதுபோலவே சரோத் அழுத்தமான இசையையும் சாரங்கி தனிமையை உணர்த்துவதும், ஷெனாய் துயரத்தையும் பொழிவதுமாய் எனக்குத் தோன்றும்.

சிதார் ஒலிக்கும் இந்தப் பாடலோ நிராசையைச் சொல்லுகிற பாடல். இது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்க முடியும்?

ஒருதலைக் காதல் விடலைத்தனமாக (இப்போது) தோன்றினாலும் எப்போதும் கைகூடும் சாத்தியமில்லாத சில மன வேட்கைகள் நம்மை அழுத்தக்கூடியனவே. இயலாமையை, கையறுநிலையை, நிராசையை, தணிக்கச் சாத்தியமில்லாத வேட்கைகளை எப்படி எதிர்கொள்வது? இது மேற்கில் தோன்றும் உதயம் போலவென மனத்தைத் தேற்றிக் கொள்கிறான் ஒருவன். அவ்வாறான அசாத்தியங்களை அவன் பட்டியலிடுகிறான் - நடை மறந்த கால்களிரண்டின் தடயம், உயிரிழந்த்கருவைக் கொண்ட கவிதை, இப்படி விரியும் கற்பனையில் இலயிக்கிறான். நினைக்க நினைக்க இம்மாதிரியான உருவகங்கள் அவன் மனத்திலும் வேடிக்கையாய் விரிகின்றன, நிகழ்கின்றன. வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுத்தால் எப்படியிருக்கும்? இது தாற்காலிகமாய் மனத்தை அமைதிப்படுத்துவதுடன், சாமான்ய அறிவைப் பகடி செய்வதில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி நிலைக்காதுதான், ஆனால் கோடைமழை போல நிலத்தையும் உள்ளங்களையும் ஒருங்கே சிலநேரத்திற்கேனும் குளிர்விக்க வல்லது. 

அப்படியொரு கோடைமழையாய் சிதார் இசையைப் பொழிகிறது.

கழவிரக்கத்தில் உழலுவதானாலும் உயர்ந்த மொழிரசனையின் உருவகங்கள் இதை ஆரோக்கியமான இளைப்பாறலாகச் செய்கிறது. தமிழ் மணக்கிறது! 

வெறும் நாரில் கரம் கொண்டு - இங்கே வரும் சிதாரின் அந்த ஒற்றை மீட்டல் பொதிந்திருக்கும் துயரத்தை விரலில் தீற்றிக் காட்டுகிறது. 

உறவறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது - மலையாளிகள் சொல்லும் 'பைங்கிளித்தனமாக' இருந்தாலும் உயர்ந்த மொழிக் கையாளல் இந்த வரிக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது.

தேஷ் இராகத்தில் அமைந்த பாடலின் இசையும், பாடிய பாலுவின் குரல் வளமும் இப்பாடலை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. 

டி.இராஜேந்தரின் பாடல்கள் பொதுவில் நீளமானவை. ஒரு வித நாடகத்தன்மையுள்ள மொழியைக் கொண்டவை. அவர் காலத்துப் பாடலாசிரியர்களின் மொழியினின்றும் அழகாக வேறுபட்டது. அதனாலேயே தொடை நயம், உவமை, கற்பனைவளம், மற்றும் மொழிக்கையாளல் என்று சிறப்பாக இருந்த அவர் பாடல் மொழியும், அவர் வரிகளும் வரவேற்புக்குரிய மாற்றமாக இருந்தது.  ‘மாதவி எழிலாள் மாதுளம் இதழாள் மாங்கனி நிறத்தாள் அம்மம்மா’ என்றெல்லாம் பல் உடையாமல் பாடுவதும் எளிதல்ல.  அவர் இயற்றிய பல பாடல்களின் நீளத்துக்கு இன்றைக்கு ஒவ்வொரு பாடலையும் இரண்டு முழுப்பாடலகளாகச் செய்துவிட முடியும். அப்புறம் அவரே ஒரு நேர்முகத்தின்போது சொன்னதைப்போல் அன்றைக்கு அவர் பாடல்களில் பல சரணங்கள் இயற்றி, அவற்றுள் சிலவற்றையே பாட வைத்தார் என்று கேட்கும்போது படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்தார் என்றே கொள்ளவேண்டும். 

எனக்கு இப்போது தோன்றுகிறது: இராஜேந்தரின் உச்சம் இது - மிகச்சிலரே இதை அடைந்துள்ளனர். அவரே தாண்டாத உச்சமுமே இது. 

பாடல் : 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...