முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்க் காதலன் இப்படிச் செய்தானே!

ஜாவளி என்கிற கருநாடக இசை / பாடல் வடிவம் பற்றிச் சொல்லுகையில், இவை சிற்றின்பத்தைத் தூண்டும் வகையில் அமைந்த, வெளிப்படையான வழக்குமொழியில் அமைந்த பாடல்கள் என்று பகுக்கிறார்கள். ஏதோ தீண்டத்தகாததாகவும், பெரிய தாக்கத்தை உண்டுபண்ணாததாகவும் கருதப்படும், மற்றும் கச்சேரிகளில் ‘துக்கடா’ வாகப் பாடப்படும் இவைகளை நான் நேசிக்கிறேன். மனிதர்கள் புனையும் எதுவும் மனித உறவுகளின் இழையைக் கொண்டிருப்பதில் வியப்பில்லைதானே?  தாய்-சேய், தந்தை-தமையன், ஆண்டான் - அடிமை, காதலன் - காதலி இப்படி ஏதோ ஒரு மனிதர் உறவைச் சொல்லியே அடியார்கள் பலரும் இறையைப் பாடியிருக்கிறார்கள்.

இயல்பான மனித உணர்வாக எல்லோரும் தத்தம் சொந்த அனுபவங்களுடன் பொருத்திப் பார்துக்கொள்ள ஏதுவானதும், அதனாலேயே மனதிற்கு நெருக்கமானதாக இருப்பதுமான  காதல், ஊடல், பிரிவாற்றாமை என்பவற்றை பெருமைபடுத்துவது (glorify)ஆகாதது என்று இருந்துவருகிறது. எப்போதும் உணரும், வாழ்ந்து திளைக்கும் இவ்வுணர்ச்சிகளை (இதைத் தனியாகப் பெரிதுபடுத்திப்பாட என்ன இருக்கிறது என்று) எதற்கு மிகையுணர்வின்பாற்படுத்துவது (to romanticize) என்று விட்டுவிட்டார்கள் போலும். எந்தக் கலையிலும் பெரும் பாடுபொருளாகக் காதல் இல்லாததும் (அவ்வாறு கொண்டிருக்கும் சினிமா போன்றவற்றை இகழ்வதும்) இறையுணர்ச்சி, பேரின்பம் முதலியன புனிதப் பிம்பம் பெறுவதும் எனக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. குறிப்பாகக் கருநாடக இசையில் இது மனிதர்களை விலத்திவைக்கும் போக்கிற்கும் இடமளிக்கிறது. இசையும், பாடல் வரிகளும், அவைதரும் பொருளும், இராகங்களில், தாளங்களில் கலைஞர்கள் செய்யும் வித்தைகள் மூலம் மனத்திற்கும், அறிவுக்கும் ஒருங்கே இன்பமளிக்கக் கூடியதாகவே தற்காலக் கருநாடக இசைவடிவம் இருக்கிறது. இதிலே பாடல்வரிகள் தமிழிலே இருத்தல் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடும் என்று ஒரு போக்கு இருந்தது. இப்போது எதற்கும் இருக்கட்டும் என்று ’தமிழ்’ப்பாடல்களும் பாடப் படுகின்றன.

மொழி, பாடுபொருள் என்று பலவகையியே புனிதத் தன்மையைக் காப்பாற்றுவதிலேயே இதனைப் போற்றுபவர்கள் குறியாயிருக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்யவேண்டும்? மனிதர் நேர்கொள்ளும் அன்றாட நடப்புகள் பாடுபொருளாவதிலே என்ன தவறு? தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இறைப்பாடல்களும் இருக்கலாம். இப்படியான புதிய வெளி ஜாவளிகள் மூலம் சாத்தியமாகிறது. தருமபுரி சுப்பராயர் இயற்றிய இந்தத் தெலுங்கு மொழி ஜாவளியைக் கேளுங்கள். (இதை எனக்குத் தெரிந்ததுபோல மொ(மு)ழிபெயர்த்திருக்கிறேன்)




”தோழி, என்னுயிர்க் காதலன் இப்படிப் படுத்துகிறானே!
இதோ வருகிறேனென்று தேனொழுகப் பேசிவிட்டுப் வேறு பெண்ணுடன் போய்விட்டானே!
முன்பென்னோடு பழகி என் கள்ளங்களை அறிந்தவன் (என்னை) மறந்தானே!”

பிரிவாற்றாமையைக் குரலிலும் பாவனையிலும் பாடலினூடே ஓடும் ஏக்கத்தைச் சரியாகப் பரிமாறுகிறார் இப்பாடகி. இவ்விசை நம் செவிகளிலிருந்து இதயம் நுழைந்து உணர்ச்சிகளின் மையத் நரம்பொன்றை மீட்டுகிறது.. பிரிவுத்துயரில் ஆழ்த்திவிட்டானானலும் அவனைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் காதல் இன்னும் வழிந்தோடுகிறது! அவன் மேல் சற்றும் கோபமில்லை; இன்னும் அவன் தன்னிடமிருந்து விலகிச் செல்லுவது ஏனென்று புரியவில்லை; ஆற்றாமை நம்மையும் பீடிக்கிறது. இந்தப் பெண்ணின் துயர் எப்படியும் தீர்ந்துவிடாதா என்று மனது ஏங்குகிறது. இதற்கு உருகினால் என்ன கேடு வந்துவிடப்போகிறது?

இதுபோன்ற பாடல்களை மிகுதியும் கச்சேரிகளில் பாடினால் என்ன? வேதம் - புராணம் - காவியம் என்ற வடமொழிப் பகுப்பிலே இப்படிச் சொல்லுவார்கள்: வேதம் அரிய உண்மைகளை ஆசிரியன் போல போதிக்கிறது. புராணங்கள் இவற்றை இன்னும் நெருக்கமான மொழியிலே தாய் தந்தையரின் அறிவுரைகள் போலச் சொல்லுகின்றன; காவியங்கள் அதைவிட நெருக்கமான மொழியில் காதல்த் தலைவி, தலைவனிடம் உரைக்குமுகமாகச் சொல்லுகின்றன. இதிலே நன்மை தீமைகளை, ஒழுக்கங்களை, காவியங்கள் போலக் காதல் மொழியிலே சொன்னால்தான் என்ன? அதற்குக் கருநாடக இசை இடையீடாக இருந்தால் இன்பத்திற்குக் குறைவுமுண்டோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் கவிதை