முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளையராஜாவின் மரி மரி நின்னே, டி எம் கிருஷ்ணா

இளையராஜா தியாகராஜரின் ‘மரி மரி நின்னே' பாடலை இராகம் மாற்றியமைத்ததைப் பற்றி டி எம் கிருஷ்ணா தமது புத்தகத்தில் எழுதியிருப்பதைக் குறித்து மேலும் அண்மைய செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்தார். அதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இந்தப் பதிவு.

 

செவிவழியாகப் பலபத்தாண்டுகள் கற்பிக்கப்பட்டு வரும் இசைப்பாடல் (அ) Composition (இது இராகம்-தாளம்-பிரதி என்ற முக்கோணத்தில் அடங்குவது) ஒரு குறிப்பிட்ட அழகியல் சட்டகத்தில் பொருந்தி வருவதாகவும், இம்மாதிரியான இராக மாற்றங்கள் அந்த அழகியலைக் குலைத்து விடுவதால் அவற்றைத் தன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் கிருஷ்ணா சொன்னார். 

எந்த அழகியல் அம்சங்களை கிருஷ்ணா குறிப்பிடுகிறார் என்று யோசித்துப்பார்த்ததில் கீழ்க்கண்டவை தோன்றின. அவையாவன - எனக்குத் தோன்றிய வரிசையில்:

  1. ‘ஸ்வராக்‌ஷரப்' பிரயோகங்கள் தியாகராஜர் தொடங்கிய பழைய வாக்கேயக்காரர்களின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. அதாவது பாடலின் சொற்களில் ஸ்வரங்கள் தோன்றும்போது அவற்றை அந்த ஸ்வரங்களாகவே பாடுதல் / இசைத்தல். இவற்றை மறுவாக்கம் செய்யும்போது இந்தவிடங்களைத் தவறவிட வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டு - தியாகராஜரின் ‘ஸாமஜவர கமனா' என்ற இந்தோளராகப் பாடலின் அனுபல்லவியில் வரும் “ஸா ம நி க ம ஜஸுதாமய” என்று துவங்கும் இடம்.
  2. சில இராகங்களில் அந்நிய ஸ்வரங்கள் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக ஆனந்த பைரவியில் வரும் அந்தர காந்தாரம். சியாமா சாஸ்திரி தன் ‘மரிவேறே' என்ற பாடலில் இந்த அந்நியஸ்வரம் வரும் பகுதியில் ‘நின்னு மரிமற வகனே’ என்ற வரியை வைத்திருப்பார். இறையை நோக்கி "உன்னை மறவேன்” என்று பாடுமுகமாக இருந்தாலும், இந்த அந்தர காந்தாரம் வரும்படியாக இசையை இங்கே அமைத்ததில் இந்த ஸ்வரத்தை மறக்கவில்லை என்னும்படியாகவும் கொள்ளலாம் என்று இந்தப்பாடலைக் குறித்துச் சிலாகிப்பார்கள். உண்மையிலேயே இதை இயற்றியவர் இப்படி யோசித்துச் செய்தாரா இல்லை அது இப்படியாகவும் புரிந்துகொள்ளப்பட்டதா என்று சொல்லமுடியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் அழகியல் அம்சமாக இது நிலைத்துவிட்டது.
  3. ஒரு பாடலை இயற்றும்போது அதை எந்த இராகத்தில் அமைப்பது என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் தம் பாடல்களில் இராகத்தின் பெயரைத் திறமையாகச் சேர்க்கும் வல்லமை பெற்றவர். அது அந்த பாடலின் பாடுபொருளோடு இயைந்ததாக இருக்கும். ‘ஆனந்த நடனப் பிரகாசம்' என்ற சிதம்பரம் குறித்த பாடலில் ‘ஶ்ரீ கேதாராதி’ என்ற வரியில் இப்பாடலின் இராகத்தைச் சேர்ப்பதுடன் பாடலின் பொருளில் சிவனை கேதாரம் முதலான தலங்களில் திகழ்பவன் என்னும்படியாகப் பாடியிருப்பார். மேலும் தியாகராஜரின் ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்ற பாடல் இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் ஶ்ரீ (லட்சுமி) வடிவமான சீதை அனுமனிடம் சொன்னதையே முதல் வரியாகக் கொண்டதால் ஶ்ரீ இராகத்திலேயே அமைத்தார் என்றும் சொல்லுவார்கள்.
  4. அப்புறம் பாடலின் பொருளுக்குத் தகுந்தாற்போல மென்மையாகவோ வலுவாகவோ பாடுவது போன்ற சிலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன். தியாகராஜரின் நாட்டை இராகப் பாடலான ஜகதானந்தகாரகா என்ற பாடலில் ஆகாயத்தைக் குறிக்கும் சொல்லான ‘ககனம்’ வரும் இடமான  ‘ககனாதிப சத்குலஜ’ என்பதை மேல் ஸ்தாயி ஸ்வரங்கள் கொண்டு அமைத்திருப்பார் என்பது ஒரு எடுத்துக்காட்டு. இதுவும் ஒரு interpretation ஆக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் இவையும் பாடலின் அழகியல் அம்சங்கள் ஆகின்றன.

மேலுள்ளவற்றையே கிருஷ்ணா குறிப்பிட்டாரா? அப்படியானால் அவர் கருத்தின் நியாயம் புலப்படுகிறது. இந்த அம்சங்கள் குலையாமல் இப்பாடல்களை மறுவாக்கம் செய்வது முடியாததில்லையானாலும் எளிமையானதல்ல.

ஆனாலும் இளையராஜா ஒரு பழம்பாடலை மறுவாக்கம் செய்வது அவர் படைப்பூக்கத்தினால் நிகழ்வது. எனக்கு சிந்துபைரவி திரைப்படத்தில் வந்த மரி மரி நின்னே பிடித்தே இருந்தது. "Fan fiction" என்பது போல், "விசிறிகள்" தம் ஆதர்சப் படைப்பாளிகளின் படைப்புகள் போலவே படைப்பது எங்கும் காணக்கிடைக்கிறது. இளையராஜாவின் இந்த முயற்சி குறைந்த பட்சம் அம்மாதிரியே எனக்குப்பட்டது. 

ஒரு கருநாடக இசைப்பாடல் எந்தவிதமான அழகியலைக் கட்டமைக்கிறது? படைப்பு உண்மையில் நிகழ்கிறதா?  அதைக்கேட்பவர்கள் எதை இரசிக்கிறார்கள்? என்று எல்லாவற்றையும் கட்டுடைக்கும் கிருஷ்ணாவுக்கு இளையராஜாவின் இந்த மறுவாக்கம் ஆட்சேபத்திற்குரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன்.  அவர் கேள்விக்குட்படுத்தும் அழகியல் அம்சங்களே (எடுத்துக்காட்டாக பக்தி தொடர்பானவை - மேற்சொன்னவையே காரணங்களாக இருக்கும் பட்சத்தில் ) குலைக்கப்படுவதற்காக அவர் இதை ஒப்புக்கொள்ளாதது வியப்பாக இருந்தது.

ஆனால் கிருஷ்ணா எந்தக் கருத்தையும் கொண்டிருப்பதும், அதைச் சொல்லுவதும் அவர் விருப்பம், சுதந்திரம். இந்தக் கருத்தினால் அவரைக் குறித்த என் மதிப்பும் அவர் மேலுள்ள மரியாதையும் மாறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...