முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னுமொரு புத்தக மீம்

ராம்கி அழைத்ததும் நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன்.

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா
மோகனாம்பாள் விவரம் தெரிந்து படித்த முதல் நாவல்.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பள்ளி நாட்களிலிருந்து.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை.

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வழக்கம் இல்லை.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
இலக்கிய வரலாறு தெரியாவிட்டாலும், கதை சொல்லுதல் என்கிற பழைமையான மரபில் இருந்து நாவல் வடிவம் இயற்கையாகப் பொருந்தி வந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. புதிய உத்திகள், நடை, வட்டார வழக்கு, என்பவை இவ்வடிவத்தை இன்னும் மெருகேற்றியுள்ளன என்றாலும், கதைப்போக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவே உள்ளன நாவல்கள்.

சிறுகதை என்கிற சிறிய வடிவில் வாழ்க்கையின் ஒரு தெறிப்பை/ஒரு பரிமாணத்தை/ஒரு மனநிலையை/ஒரு நிகழ்வை/ஒரு குழப்பத்தை/ஒரு உணர்வை அவை தரும் புதிய அர்த்தங்களையும் புரிதல்களையும் சேர்த்துக் கொடுப்பது ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் இது கொண்டாடப் படவேண்டிய ஒரு வடிவம்.

6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
தெரியவில்லை.

7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
மகிழ்ச்சியாக இருக்கும்.

8.நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை

9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரம் இல்லையானாலும், படுக்கப்போகும்போது ஆரம்பித்து, சில நேரம் அதிகாலை வரை வாசிப்பதுண்டு.

10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
அதிகம் இல்லை. அரசூர் வம்சம் ஏனென்று தெரியவில்லை.

11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
ஒன்றும் இல்லை.

12. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
விஷ்ணுபுரம் - நண்பன் பரிந்துரைத்தது.

13. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
மொத்தமாகவே பத்து நாவல்கள் தான் தேறும் என்று நினைக்கிறேன். மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, வாடிவாசல், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், புலிநகக் கொன்றை.

14. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
பிறமொழி நாவல்கள் எதுவும் படித்ததில்லை

15. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
ஆங்கிலத்தில் பல குப்பைகளை வாசித்திருந்தாலும் ‘கனமான’பிறநாட்டு நாவல்கள் எதுவும் படித்ததில்லை (வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் அந்நியன் தவிர)

16. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
அம்மா வந்தாள், மரப்பசு...

17. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
உண்டு.

18. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் Bertram Wooster போல வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்து, கொஞ்சம் நாள் கனவும் கண்டதுண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...