முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒப்பனை கலைத்த ஒரு பொழுதில்

என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன். உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள்.

சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன். அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்மேல் வீண்பழி சுமத்துகிறேன்.


உனக்காக நான் உருவாக்கிய ( நிதானமிழக்காத நான், ஒப்பனைகள் மூலம் நான் காட்டிக் கொள்ள விரும்புகிற இன்ன பிறவுமான நான் என்ற) என் பிம்பங்களும், நான் உன்னைக் குறித்து எழுப்பியுள்ள (என்னை ஆராதிக்கும் நீ, என்னை உயரத்திலேயே வைத்துப் பார்க்கும் நீ, என் வார்த்தைகளுக்கு மயங்கும் நீ, என்னால் எப்போதும் வசீகரிக்கப்பட்ட நீ, என்ற) பிம்பங்களும் ஒருங்கே உடைந்து சிதறும் தருணங்களில் நான் வேறெப்படித் தான் நடந்துகொள்வது?

***

ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.

நன்று.

பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.
//

Very true!

//
பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.
//

AMEN!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...