முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்போது படித்துக் கொண்டிருப்பது

இது முழுதும் பாசாங்கு. உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து, சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது... கடைந்த மோரில் வெண்ணையைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது டம்பளர் பாலில் இருக்கும் கருப்புப் பூச்சி போலக் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும் எழுதுவதற்காய்க் கிளம்பினால். இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான். கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய்தாலும், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம். உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான். மற்றபடி இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு.

***

வானமற்ற வெளி என்கிற பிரமிளின் கவிதைகள் பற்றிய கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை 'எழுதுதல்' என்பதை ஒருவித பாசாங்கு என்று தான் நினைத்திருந்தேன். ஒரு அரிதான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுக்கும் ஒரு விஷயத்தை காகிதத்தில் வடிக்கும்போது வடிவம், யாப்பு, இசைநயம் பற்றிய கவலைகளோ, கணக்கு-பிணக்கு-சுணக்கு போன்ற சப்த ஒழுங்குள்ள கோர்வைகளைச் சேர்க்க வேண்டிய அவசியமோ கவிதையைக் குலைத்து, சில நேரம் மலினப்படுத்தி விடுகிறது என்று தோன்றும். பிரமிள் சொல்லுவது போல "கோலம் வரைந்த பின் இடப்பட்ட புள்ளிகள்" என்கிற ரீதியில் தான் கவிதைகள் வந்த பின்பு பொருத்தப் பட்ட யாப்பினைப்பற்றியும், பொதுவில் மொழியிலக்கணம் குறித்தும் யோசித்திருந்தேன்.

கவிதைகளின் ஊற்று, யாப்பு, இசை-சப்த நயங்கள், மரபு மற்றும் வசனக் கவிதைகள், படிமங்களின் பங்கு என்று பல விஷயங்களைப் பற்றிய தமது எண்ணங்களைக் கவிதைகளை விமரிசிப்பதூடே சொல்லிக்கொண்டு போவதில், சில விஷயங்களில் நான் கொண்டுள்ள புரிதல்களை ஒத்தே அவரும் சொல்லியிருப்பது இதன் வாசிப்பில் எனக்கு ஒரு நெருக்கத்தை உண்டு செய்கிறது. ஒரு கவிதைக்கும் அதை வாசிப்பவருக்கும் உண்டான ஒரு தனித்துவமான உறவு பற்றி யோசித்திருக்கிறேன். நான் புரிந்து கொண்டுள்ள வரையில் சில படிமங்களும், வார்த்தைகளும் (மலையாள நண்பன் ஒருவன் "ஞாபகங்கள் தாலாட்டும்" என்ற பாடலில் லயிப்பவன். "ஞாபகம்" என்பது எவ்வளவு powerful ஆன வார்த்தை! என்று அவன் சிலாகிக்கும்போது பொறாமையாகத் தான் இருக்கும். இவனையும் வார்த்தைகள் வசீகரிக்கின்றன போலும்) ஒருவருக்குக் கொடுக்கும் அனுபவம் மற்றொருவருக்குக் கிட்டுவதில்லை என்று தோன்றும். இதனால் கவிதைகளைப் பொதுவில் விமரிசிப்பது கடினம் என்று நினைப்பேன்.(மேலும் பாடு பொருள் கவிஞரின் உள்ளிலிருந்து இயல்பாய் எழுந்ததா இல்லை வலிந்து எழுதியதா - "காற்று" என்ற தலைப்பில் கவிதை வரைக என்பது போல...- என்பதும் வெறும் வார்த்தை ஜாலங்களைக் கடந்து கவிதைக்கு உயிர் இருக்கிறதா என்பதற்கு முக்கியம் என்று எனக்குத் தோன்றும்) பிரமிளின் விமரிசனங்கள் அவரின் சொந்த அனுபவப் பகிர்தல்களே என்று (இந்தக் கவிதையைப் பற்றியது போல) சிலவற்றைப் படித்ததும் தோன்றியது.

எப்படியானாலும் படித்து முடித்தல் என்பது இம்மாதிரிப் புத்தகங்களுக்குப் பொருந்தாது. அதுவுமல்லாது சில புத்தகங்களைப் படிக்கும் போதே மனதிற் பல சிந்தனைகளைக் கிளப்பிவிடும். இம்மாதிரி ஒரு பத்தியைப் படித்து நானே என் உலகில் சஞ்சாரித்துப் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வதுண்டு. இதனால் "புக் கிரிக்கெட்" விளையாடுவது போல புத்தகத்தின் ஏதோவொரு பக்கத்தைத் திறந்து அவ்வப்போது சில கட்டுரைகளில் மூழ்குவது நல்ல பொழுது போக்கு.

இதைத் தான் கொஞச நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

வானமற்ற வெளி-கவிதை பற்றிய கட்டுரைகள்-பிரமிள் - தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம்- அடையாளம்- 2004

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
In your element!

I did not understand a few words though. Mind clarifying?
1. 'ba(pa?)chaangu(ku?)'. appreciate it if you could write it's English transliteration. (btw, what is the word for 'transliteration' in Tamil?)
2. 'achiratthaiyaaga'. Wonder if it means 'without Shraddhaa' or faith/focus/concentration/dedication? Sounds suspiciously Sanskritish.
3. 'yaappu'
4. 'padimangal'
5. 'valindu'

Another interesting element in this article, I felt, is the use of words derived from Sanskrit - like 'reethiyil' or 'malinapadutthi' or 'sanchaaritthu' and a few others. These are words used in Kannada too to convey the same meaning. So is it Kannada or Sanskrit influencing you? Either way, I thought it would be interesting to know their Tamil equivalent and am finding out.

Thanks in advance.

Saumya
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Saumya,

You have me boxed!

நீங்கள் சொன்னபிறகு ஒரு முறை படித்துப் பார்த்தால் எனக்கே வியப்பாயிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதல்லாமல் இன்னும் சில சொற்களும் தமிழ்ச்சொற்களன்று.

உண்மைதான். சமஸ்கிருதக் கலப்பு நிறைய இருக்கிறது. ஏனென்று நானும் யோசிக்கவேண்டும்.

மற்றபடி, நீங்கள் கேட்டவை:
1. பாசாங்கு - pAcAngu - நடிப்பு
2. Transliteration - :-( தமிழ் தெரியவில்லை!
3. யாப்பு
4. அசிரத்தை - நீங்கள் புரிந்து கொண்டது சரியே
5. படிமங்கள் - imagery
6. வலிந்து - forced/strained

இனி கவனமாக இருக்கிறேன் :-)
கார்திக்வேலு இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
You havent posted anything for a long time .

Hope u come back with more posts soon

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க