முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Bus stop

ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன். இப்படி எங்கும் செல்லாமல், வரும் பேருந்துகளிலும் ஏறாமல் நேரம் ஓடுகிறது. இங்கே சில நேரம் நின்றுவிட்டால் ஒரு தொல்லை - இவ்வளவு நேரம் செலவு செய்த பிறகு காலியான பேருந்தில் போகவில்லையானால் காத்திருந்து நேரம் கடத்தியதில் அர்த்தமில்லை, அதனால் கடைசிப் பேருந்தானாலும் கூட்டமிருந்தால் ஏறுவதில்லை. ஒன்றும் பயனின்றி நடந்தே செல்ல முடிவு செய்கிறேன். நேரத்தோடு போகுமிடம் போய்ச்சேரும் நிர்பந்தம் எனக்கில்லை. கூட்டமிகுதியான பேருந்தில் ஏறமாட்டேன் என்ற பிடிவாதமே ஓங்குகிறது. ஒருவேளை பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற தீர்மானம் முதலிலேயே இருந்திருந்தால் பல நிமிடங்களை நிறுத்தத்தில் விரயம் செய்யாமல் நடக்கத் துவங்கியிருக்கலாம். ஆனால் காலியான பேருந்து ஒன்று வரும் என்கிற நப்பாசை விடுவதில்லை. இப்படி நடந்து போகும்போது ஒரு காலியான பேருந்து என்னைத் தாண்டிச் சென்றால் தப்பான முடிவெடுத்தலுக்கு மனது என்னைக் குற்றம் சொல்லி ஏளனம் செய்கிறது. நேரத்தோடு போகும் நிர்பந்தம் இல்லையானாலும், ஒன்றும் செய்யாமல் நேரவிரயம் செய்வது எனக்குச் சோர்வையே அளிக்கிறது.



அதே வண்டி நிறுத்தத்தில் ஒரு தீர்மானத்துடன் பலர் இருக்கிறார்கள். வரும் முதற் பேருந்தின் ஆட்கூட்டத்தில் அவர்களைத் திணித்துக் கொள்கிறார்கள். பின்னால் ஒரு காலியான பேருந்து வருமோ என்கிற எதிர்பார்ப்போ, வரப்போகும் ஒரு வாய்ப்பைத் தவறவிடும் கவலையோ அவர்களுக்கு இல்லை. போகுமிடத்தை விரைவில் அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாத அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் அவர்கள் திண்ணமாய் இருக்கிறார்கள்.



இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது. நடப்புகளில் இருந்து விலகி இப்படிக் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்தால் இப்படியாகத்தான் தோன்றுகிறது.



ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கென வந்திருக்கிறேன். போட்டியின் விதிமுறைகள் விசித்திரமானவை: இலக்கு எதுவென்று சொல்லப்படாது; எவ்வளவு நேரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற விபரம் இல்லை; எப்படிச் செல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுமில்லை. பயணப் போட்டி என்பது மட்டும் தெரிகிறது. ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன்...

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
வீட்ல சொல்லி ஒரு பொண்ணு பாக்கச் சொல்லீட்டா எல்லாம் சரியாப் போயிடும்:-) :-) அப்புறம் அடிச்சுப் புடிச்சு ஓடுவீங்க இல்ல?
---
வழக்கமான உங்கள் இனிய எழுத்து நடை மிகவும் கவர்கிறது. கிளம்பிய இடத்திலேயே வந்து முடித்திருக்கும் சுழற்சியும் நன்றாக இருக்கிறது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வா,

நல்லன விழைதலும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் இன்னும் எழுதுவதற்கு மட்டுமல்லாமல், பொதுவில் வாழ்க்கையிலும் பெரும் நம்பிக்கை பெற உதவுகிறது. சக மனிதரின் அங்கீகாரம் - எந்த வகையினதாய் ஆனாலும் - நம் மேல் நமக்கே மரியாதை வரச் செய்யும் ஒன்று.

தொடர்ந்த ஊக்கத்திற்காய் உங்களுக்கு நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla irukku kannan. Thanks
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கமணி,

நன்றி!
Ramya Nageswaran இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா எழுதியிருக்கீங்க கண்ணன்..

//இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது.//

எனக்கு இந்த எண்ணம் வேறு விதத்தில் தோன்றும்: இன்றைக்கு அதிமுக்கியமாக தோன்றும் பல விஷயங்கள் சில வருடங்களில் அர்த்தமற்று போகலாம் என்று...
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ரம்யா,

நன்றி. நீங்க சொல்றதும் சரிதான்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good to see this community
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
The take off and landing on the same spot is excellent... Keep this as ur Style...

Continue...

Wishes...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...