முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

கருத்துகள்

Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

அருமையான பதிவு...

சக மனிதனை அவனது குறைகளோடு ஏற்றுக்கொண்டு எல்லோரும் நட்பு பாராட்டினால் இந்த உலகத்தில் பிரச்சினைகளே இருக்காது. பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலானோருக்கு அவரவரது குறைகள் என்னவென்றே தெரியாது அப்படியே தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் இல்லை.

அப்படி நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டாதவர்களிடம் கூட அதை அவர்களின் இயல்பாக ஏற்றுக்கொண்டு நாம் நட்பு பாராட்டிவிடுவது அதனினும் நன்று.
வானம்பாடி இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதமான கருத்து கண்ணன்.
தாணு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்து. ஓரளவு கவிதை போலவே உள்ளதை, கவிதை நடையிலேயே எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
( நல்ல நட்பு குறைகளையும் சுட்டிக் காட்டும்!!!)
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக இருக்கிறது கண்ணன்.

தாணு- எனக்கென்னமோ இப்படி எழுதியிருப்பது பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் கவிதையில் சொல்லவேண்டும் என்று இல்லைதானே?

-மதி
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு கண்ணன்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுரேஷ், சுதர்சன், தாணு, மதி மற்றும் தங்கமணி: உங்கள் பின்னூட்டங்கள் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. உங்களுக்கு நன்றி.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
'கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்' என்பது போல அழகாகக் கூறியிருக்கிறீர்கள் :)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலா...
Pavithra Srinivasan இவ்வாறு கூறியுள்ளார்…
Hello Mr. Kannan,

I'm a fan of your blog-posts - of your post about ThiJaa, in particular. :-) Your latest post is so very thought- provoking. Bravo!

[I'm writing in english, because there's some problem with my Tamil fonts set-up)
Could you please give me your email id?
நளாயினி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா நல்லதொரு சுய விமர்சனம். பாராட்டுக்கள்