முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு
முழத்துணி வாங்கித் தர வேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித்
தரவும் கடனாண்டே ! '
(கண்ணன் என் ஆண்டான்)

ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது)

இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார்.

ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள்ளது. வித்தியாசமான விடயங்கள் கூறிக்கொண்டு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் (புதிய கோணங்கி), ஒரு மார்கழி காலைக் குளிரில் திருச்சாழல் பாடி வரும் பண்டாரம், இப்படி பலதரப் பட்டவரை கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் இருத்தி அவர்களிடம் அவர்கள் வாழ்க்கை, இதர விடயங்கள் குறித்துக் கதைப்பது இவருக்கு வழக்கம். இயல்பில் மனித வாஞ்சை மிக்கவராக இருந்தவர் என்று தெரிகிறது. "எளிமை கண்டிரங்குவாய்" என்பது அவர் வாழ்வில் நடைமுறை.

இப்படியாகத்தானே அவர் மேற்படி ரிக்ஷாவில் வரும்போது ரிக்ஷாக்காரருடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். ரிக்ஷாக்காரர் புலம்பிய புலம்பலில் "நம் தேவையை விட அவன் தேவை அதிகம் என்று தோன்றியது" என்று சொல்லி, தன் மாதச் சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார். மாமா அந்த ரிக்ஷாக்காரரைத் தேடிப் பிடித்து, அவர் செலவு செய்தது போக மீதியை மீட்டுக் கொடுத்தாராம்.

இதைப் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஆண்டான் பாடலில், தனக்கு நாலுமுழத்துணி போதுமென்றும், அதற்கே வழியில்லாத நிலை இருந்தாலும் தானம் கொடுக்க வேட்டி வேண்டும் என்று கேட்க என்ன மனது வேண்டும்! மேலும் பாருங்கள்:

'பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமைய்யே
அண்டை அயலுக்கென்னால் உபகாரங்கள்
ஆகிட வேண்டுமைய்யே!'

பொருள் இல்லார்க்கு (பாவனைகள்) எதுவும் இல்லை. எளிமை இருக்குமிடத்தே தான் மனிதமும் மிளிர்கிறது. தனக்கே ஒன்றும் இல்லாத போது, மற்றவருக்குக் கொடுக்க வேண்டித் தனக்குத் தருமாறு எப்படி ஒருவன் கேட்க முடியும்? வேட்டி இருந்தால், பொருள் இருந்தால் அவனும் அவன் பெண்டு பிள்ளைகளும் வயிராற உண்டு சுகமாக இருக்கலாமே!

தன் வீட்டின் இல்லாமை தெரிந்திருந்தும், வறியவன் ஒருவன் புலம்பக் கேட்டவுடன் தனக்கென்று ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் தயங்காமல் கொடுத்தவன் பைத்தியக்காரன் இல்லை, குழந்தை மனதுக்காரன்!

கருத்துகள்

Sud Gopal இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.

எங்கேயிருந்து தான் இந்த மாதிரிச் செய்திகள் உங்கள் கண்களுக்கு மட்டும் மாட்டுதோ தெரியலை கண்ணன்.

கலக்குவதைத் தொடரவும்.
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
நெகிழ்ச்சியான பதிவு. ஒரு சிலர் பாரதி தன் குடும்பத்தை அவ்வளவாகக் கவனிக்காமல் பிறரது - மனிதராயினும் குருவிகளாயினும் - நிலைமை கண்டு இறைஞ்சி தன் கையில் இருப்பதைத் தந்துவிடுவதைக் குறை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் தன் குடும்பத்தாரையும் பிற மனிதர்களையும் ஒரே படியில் வைத்து ஒரே மாதிரியாகப் பார்த்து யார் தேவை அதிகமாக இருக்கிறதோ அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வது எளிதான விஷயமில்லை.

அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்?
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சுதர்சன்,

இது ஹிந்துவில் ஒரு ஞாயிறு அன்று இணைப்புப் பக்கத்தில் ஒரு முழுப் பக்கம் வந்ததாக ஞாபகம். அந்த வகையில் எல்லார் கண்ணுக்கும் இது மாட்டியிருக்கும் :-)

யாராவது இதன் சுட்டியை மீட்டுக் கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.


பத்ரி,

//அதைச் செய்வதற்கு என்னவொரு மனநிலையும் தைரியமும் வேண்டும்? //

உண்மை!
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
kannan,

nijamavE kalakkaRIngka, BOSS !
vAZththukkaL, oru arumaiyAna pathiviRku ! Pl. keep it up.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாலா,

மிக்க நன்றி!
Chandravathanaa இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
yOsikka vaiththathu kannan.

Thanks.

-Mathy
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்திரவதனா,

நீங்கள் இங்கே அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.

மதி,

வாருங்கோ, ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க இந்தப் பக்கம் ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...