முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு டாகுமெண்டரி படமும், சில எண்ணங்களும்

எனக்குச் சில சனி-ஞாயிறுகள் உருப்படியாய் அமைந்துவிடுவதுண்டு. இப்படியானவொரு ஞாயிறு அன்று பெங்களூரில் Molecules creations ஏற்பாடு செய்திருந்த Voicing Silence என்ற சர்வதேச டாகுமெண்டரி திரைப்பட விழாவில் ஒரு மூன்றரை படங்கள் பார்த்தேன். பதினேழு படங்கள் இதில் திரையிட்டார்கள். விழாவின் முடிவில் மூன்று சிறந்த முயற்சிகள் என்று மூன்று படங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நான் பார்த்த படங்கள் :
1. La Bicicleta - கனடா (கியூபாவின் போக்குவரத்துப் பிரச்சனைகளை கனடா நாட்டுச் சைக்கிள்கள் தீர்ப்பது பற்றி)
2. Under Attack - ஸுவீடன் (வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு)
3. 46 Degree Root of the Wind - அர்ஜண்டீனா (Tehuelches பழங்குடியினரின் சாகும் மொழி, கலாச்சாரம் பற்றியது)
4. Baghdad Rap - ஸ்பெயின் (அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பில் சாதாரணர்கள் சிக்கிச் சீரழிந்ததை பல ராப் பாடல் வரிகள்மூலமாகவும், கோரமான சில படங்களின் மூலமாகவும் காட்டுகிறது)

இவற்றில் La Bicicleta என்ற படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. Bicycles Crossing Borders என்ற கனடா நாட்டு அமைப்பொன்று பழைய சைக்கிள்களைப் பழுதுபார்த்து, மிகவும் சகாய விலையில் ஹவான்னாவுக்கும் கியூபாவின் பல பகுதிகளுக்கும் கொடுக்கிறது. தவணை முறையில் இவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் உள்ளது.போக்குவரத்துப் பிரச்சனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்று ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டேன்.

காலையில் வேலைக்குச் செல்லும்போது பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார் ஒருவர். இன்ன நேரத்திற்கு வரும் என்று சொல்ல முடியாதபடிக்கு, மோசமான போக்குவரத்து வசதி - சில மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும். பஸ் சில நாட்கள் வராமல் கூடப் போகலாம்! இப்படியான சூழலில் அவர் குடும்பத்திற்கு ஒரு சைக்கிள் கிடைக்கிறது. அந்தச் சைக்கிள் அவர்கள் குடும்பத்திற்குள் கொண்டுவரும் மகிழ்ச்சி, ஒழுங்கு - நம்பவே முடியவில்லை. ஒரு சைக்கிள் வாங்க முடியாத அளவிற்கா ஒரு சராசரிக் குடும்பம் இருக்கும்? நம்பகமானதொரு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க முடியாமல் ஒரு அரசாங்கமா?

சைக்கிள்கள் வாகன நெரிசல்களுக்கும், புகை ஏற்படுத்தும் மாசுக்கும் எவ்வளவு அருமையான மாற்று! பள்ளிக்கூடம் போகும்போது, மாமாவின் பி எஸ் ஏ சைக்கிளை "ஓவராய்லிங்" (overhaul) செய்து ரிக்ஷா டயர் போட்டு ஹாண்டில் பிடிகளில் ஜிலுஜிலு வால் வைத்த உறை மாட்டி (சுஜாதா கதைகளில் வரும் வைய்யாளிக் குதிரை மாதிரி) சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தேன்.அதற்கும் முன்னால் 40 பைசா சேர்த்த உடனே ஒரு "அவர்" அரை இஞ்ச் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுவதில் ஒரு பரமானந்தம்! (ஒரு முறை டியூப் படீலென்று வெடித்து, கடையில் யாருமில்லாத போது சத்தப் படுத்தாமல் சைக்கிளை வைத்துவிட்டு ஓடிவந்ததில் இருந்து அரை இஞ்ச் சைக்கிள் ஓட்டுதல் நின்றது)

பெங்களூரில் இப்போதெல்லாம் நடந்து போகவே சிக்னல்களில் நின்றாக வேண்டிய நிலை. மாலை ஆறு மணிக்கு இந்தச் சாலைகளில் எந்த வாகனமும் ஓட்ட முடியாது. இதற்காகவே எட்டு மணிவரை அலுவலகத்தில் உட்கார்ந்திருந்து விட்டுக் கிளம்புவேன். (எட்டு மணிக்கும் நெரிசல் தீராது, ஆனாலும் ஒருமாதிரி ஓட்டிப் போய்விடலாம்). இப்போது சில நாட்களாக வண்டி எடுத்து வர முடியாத நிலை. இந்த நாட்களில் தான் நேரத்திற்கு எங்கும் போய்ச்சேர முடியாததன் அவஸ்தை புரிந்தது.

நகரப் பேருந்துப் போக்குவரத்து கடந்த இரண்டு வருடங்களாக லாபம் ஈட்டுகிறது. சந்தோஷம் - நுகர்வோர்களுக்கென இன்னும் வசதிகள் செய்து கொடுக்கலாம். நெரிசல் நேரங்களில் சௌகரியமாக நின்றுகொண்டு போகும் வசதி செய்துகொடுத்தாலே போதும். அதேபோல ஆட்டோக்களின் மீட்டர்களைக் கொஞ்சமேனும் கவனிக்க வேண்டும் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதியில் ஓடக்கூடியது. அந்த வகையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுவது பெங்களூரில் வழக்கொழிந்து போகாமல் இருப்பதில் நிம்மதி. நகரச் சாலைகளை உபயோகிப்பவர்கள் எல்லோரும் இன்னும் விட்டுக்கொடுத்து accomodative ஆக இருக்கவேண்டும்.

கியூபாவிற்கு சைக்கிள்கள் மூலம் கொஞ்சம் விமோசனம் வரலாம். நம்மிடம் இல்லாததென்ன? இப்போதெல்லாம் மோட்டர் பைக், கார்களை ஊர்ச்சந்தை போலக் கூவி விற்கிறார்கள், தவணை முறை, கடன்கள் என்றெல்லாம் வேறு. சரி, இந்நகரச் சாலைகள் பெரிய போக்குவரத்து நெரிசல்களைச் சமாளிக்க வல்லதல்ல. இருக்கும் வசதிகளைக் கொண்டு, விட்டுக் கொடுத்து சாலைகளை ஒரு புரிதலுடன் பங்கிட்டுக்கொண்டால் நேரத்தோடு வீட்டிற்கோ, வேலைக்கோ போய்ச் சேரலாம் இல்லையா? இல்லாமையைச் சமாளிப்பது அளவுக்கதிகமான இருப்பைச் சமாளிப்பதை விட எளிது போல...

இப்போதைக்குச் சைக்கிள் ஒன்று வாங்கலாமா என்ற யோசனை எழுந்துள்ளது.

கருத்துகள்

Boston Bala இவ்வாறு கூறியுள்ளார்…
உடலுக்கும் நல்ல பயிற்சிதான். ஆனால், அலுவல் சென்றவுடன் சோர்வாக உணரலாம்?!
Kangs(கங்கா) - Kangeyan Passoubady இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா சொன்னிங்க - நான் சைக்கிள் ஒட்டியது ஞாபகத்துக்கு வருகிறது. எனது கல்லூரியில் நானும், எனது நண்பனும் மட்டுமே விடாப் பிடியாக மிதிவண்டியில் சென்றது நினைவுக்கு வருகிறது. USAவில் மிதிவண்டி முடியாத காரியம். (6 Months Winter.. Remaining days, you will get killed if you are not properly driving the cycle, due to the cars speed)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாபா - நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனாலும், பஸ் நெரிசலை விட, சைக்கிள் ஓட்டி வந்து பழகிவிட்டால், அயர்ச்சி குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

கங்க்ஸ் - நகரத்தின் உள்வட்டத்தில் சைக்கிள் ஓட்டுவது எளிதில்லை தான்.
Agnibarathi இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Agnibarathi இவ்வாறு கூறியுள்ளார்…
Hi Kannan,

New BLOG started vijayam seiyyavum.
Agnibarathi இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Agnibarathi இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan, Meendum oru BLOG thuvakki ullen. I need members in this blog to support me. Thayai koornthu seravum... http://soundaryam.blogspot.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...