முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழிமாற்று இலக்கியங்களும் உரைநடையின் பரிணாமமும்: தமிழுக்கு எங்கே வாய்ப்பு நழுவியது?

Clicked by Magesh (https://www.flickr.com/photos/mageshb/)

சமீபத்தில் நான் பார்த்த/கேட்ட ஒரு நேர்காணலில் மலையாள எழுத்தாளர் ஒருவர் சொன்னார்:

 "என்னை மிகவும் பாதித்த புத்தகம் ரோமெயின் ரோலாந்து எழுதிய 'ஜீன் கிறிஸ்டோப்' (Jean-Christophe) என்ற நாவல்தான்." 

இதை அவர் மலையாளத்திலேயே படித்திருக்கிறார். டி.சி. புக்ஸ் (DC Books) இதனைப் பதிப்பித்திருக்கிறது. மலையாளிகள் சொல்லும் உலக இலக்கியங்களை எல்லாம் அவர்கள் மலையாளத்திலேயே படித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வயிறு எரிகிறது.

இந்த ஆதங்கத்திலிருந்தே மொழி குறித்த சில வரலாற்றுத் தேடல்கள் எனக்குள் தொடங்கின. குறிப்பாக, நவீன உரைநடை உருவாக்கத்தில் மலையாளத்திற்கும் தமிழுக்குமான பயணங்கள் எப்படி வெவ்வேறாக அமைந்தன என்பது பெரும் ஆர்வமூட்டும் ஒரு பேசுபொருளாக இருக்கிறது.


மேற்கண்ட தலைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடவும் விருப்பம் இருக்கிறது. 


அதற்கான முதற்படியாக, முதல் 'படி'யாக இப்படி என் எண்ணங்களைக் கோர்த்துக்கொள்கிறேன். இதை ஒரு முறையான (formal)  மொழியில் எழுதிப் பார்க்கவும் ஆசை - அப்படியே முயன்றிருக்கிறேன். 

***

மலையாள நவீனமாக்கலின் வித்து

மலையாளத்தின் மொழிமாற்று இலக்கியத்திற்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே வந்த வடமொழி ஆக்கங்களின் மொழியாக்கங்கள் பெரும் வளம் சேர்த்தன. 1925-ல் நாளப்பாடு நாராயணன் மேனோன், விக்தர் ஹுகோவின் 'லே மிசராப்ளே' நாவலை 'பாவங்கள்' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். அதே 1930-40 களில் வள்ளத்தோள், குமாரனாசான் போன்ற கவிஞர்கள் இராமாயணம், மகாபாரதம், காளிதாசன் படைப்புகள் போன்றவற்றை மொழிமாற்றம் செய்தார்கள்.

சமஸ்கிருதத்தின் பிடியில் (மணிப்பிரவாளம்) இருந்த மலையாளத்திற்கு, அம்மொழிக்கேயான தனித்துவத்தையும் பாணியையும் உருவாக்கிக்கொள்ள இந்த மொழிமாற்றங்களும் அவற்றின்பேரில் நடந்த விவாதங்களும் அடிகோலின. Stylistics, foregrounding பற்றி அன்றைக்கே (1940-களில், வேறு பெயர்களில்) ஆய்வு நூல்கள் வந்துள்ளன. சொற்களின் வரிசை பொருளின் அழுத்தத்திற்கு ஏற்ப மாறலாம் என்றும், 'நாடகம் பார்த்தல்' என்பதில் 'ஐ' என்கிற வேற்றுமை உருபைக் களைவது குறித்தும் அன்றைக்கே யோசித்துச் செய்திருக்கிறார்கள்.

(மலையாளப் பேராசிரியர் எம்.என். காரசேரியின் உரைகளையே இங்கே மலையாளம் குறித்த தகவல்களுக்குத் தரவுகளாகக் கொண்டுள்ளேன். செறிவான, தெளிவான இவ்வுரைகள் இணையத்தில் எங்கும் காணக்கிடைப்பன)


மலையாளத்தின் மொழிமாற்று இலக்கியங்களுக்கு அடிப்படையாய் இருந்தது பைபிளின் மொழிமாற்றமும் அச்சுப்பதிப்புமே. 19-ஆம் நூற்றாண்டில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்த பெஞ்சமின் பெய்லி (Benjamin Bailey), சாமானிய மக்களும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிக எளிய மலையாள உரைநடையை அவர் உருவாக்கினார். மலையாளிகள் இந்தப் புது மொழியை அப்படியே வரிந்துகொண்டார்கள். புதிய அமைப்புகளை உள்வாங்கிக் கொள்வதில் அந்த மொழிக்கு ஒரு நெகிழ்வுத்தன்மை இருந்தது.

20 ஆம் நூற்றாண்டின் மொழிபெயர்ப்புகள் இந்த மொழியையே அடியொற்றி வந்தன. இந்த ஆக்கங்கள் மற்றும் அவற்றின் விமரிசனங்கள் மூல மொழியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாற்று மொழியான மலையாளத்திலும் நேரும் மாற்றங்களை நவீனமயமாக்கலாக அணுகின. 

தமிழில் நிகழ்ந்தது என்ன? 

ஆரம்பகால மொழிபெயர்ப்புகளும், ஐரோப்பியர்களின் வருகையும் தமிழுக்கும் மலையாளத்திற்கும் ஒரே மாதிரியான கருவிகளையே (அச்சு இயந்திரம், உரைநடை, அகராதி) வழங்கின. ஆனால், அவை இரு மொழிகளிலும் ஏற்படுத்திய மாற்றம் வெவ்வேறானது.

தமிழுக்குத் தனக்கென ஒரு நீண்ட செவ்வியல் மரபும், தொல்காப்பியம் போன்ற வலுவான இலக்கண அடித்தளமும் இருந்தது. எனவே, தமிழ் நவீனமடையும்போது வேற்று மொழி நடையை உள்வாங்குவதை விட, வேற்று மொழிச் சொற்களை விலக்கி, தன்னுடைய தூய்மையான வேர்களை நோக்கித் திரும்பும் 'மீட்டெடுத்தல்' பாதையை (தனித்தமிழ் இயக்கம்) தேர்ந்தெடுத்தது.

தமிழின் நவீனமாக்கல் இலக்கியப் படைப்பாளிகளினாலேயே நேர்ந்திருக்கிறது என்பது என் பாமர நம்பிக்கை. வேதாகம மொழியின் மேற்கத்திய தொடரியல் (syntax) மற்றும் அதன் செயற்கையான தொன்மை மரபு காரணமாகத் தமிழர்கள் அந்த நடையைத் தங்கள் இலக்கியப் பாரம்பரியத்திற்கு அந்நியமானதாகவே கருதி நிராகரித்திருக்கலாம். நம் சிக்கல் அப்புது மொழியின் தொடரியல் பற்றியதே ஒழிய, சொற்களைப் பற்றியதல்ல என்பது என் அனுமானம்.

தொடரும் அந்நியத்தன்மையும் விடுபட்ட கண்ணிகளும் 

இதன் விளைவு? 


மலையாளத்தில் இன்று இயல்/பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஆனால் தமிழில், இயல் மொழிக்கும் இலக்கிய மொழிக்குமான தொலைவு நிலைத்துவிட்டது. இயல்மொழி ஆக்கங்கள் 'கொச்சை'யாகக் கருதப்பட்டன. இன்றும் எழுத்து மொழி (சங்க இலக்கியங்கள், மரபுக்கவிதைகள்) அந்நியமான ஒன்றாகவே இருக்கிறது. இளைய தலைமுறை இவற்றை ஊன்றிப் படிக்குமா என்கிற கேள்வி எழுகிறது.


பேச்சு மொழியும் எழுத்து மொழியும் வெவ்வேறாக இருப்பது "செடியின் தண்டும் இளம் தளிரும் போல" என என் நண்பன் சொன்னான். ஆனால், தண்டும் வளர வேண்டும் - வளரும், தடித்துப் பருமனாகும் அல்லவா? 


ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் காலத்து மொழிக்கும் 20-ஆம் நூற்றாண்டுப் படைப்புகளுக்கும் ஒரு இயல்பான, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி (gradual transition) இருக்கிறது. ஆனால் நமக்கு பழைய இலக்கியங்களுக்கும் நவீனப் புதினங்களுக்குமான அந்தத் தொடர் இழை இல்லை.

தமிழர்களாகிய நாம் பழைமையை மார்தட்டிக்கொள்வதையே தொழிலாகச் செய்துவிட்டோமோ? இதன் காரணமாகத் தமிழ்ச் சமூகம் இழந்திருப்பது எவ்வளவு?


மொழிபெயர்ப்புகள் மலையாளத்திற்கு உலக இலக்கியத்தின் வாயிலைத் திறந்தன; மொழிநடையை மரபின் கட்டுகளிலிருந்து விடுவித்து, சமூக-தத்துவ விவாதங்களைத் தூண்டின. தமிழில் இத்தகைய ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பு இயக்கம் இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு.


தமிழில் மொழிமாற்று இலக்கியங்களின் இந்த வெற்றிடம் குறித்து, ஒரு முறையான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் தற்போதைய நோக்கம். மொழியியல் மற்றும் மொழி வரலாறு பெரும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. இந்த முற்றுப்பெறாத, முடிவில்லாத விவாதத்தை இன்னொரு நாள் தொடர்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...