MD இராமனாதன் தோடியில் ஒரு விருத்தம் பாடுகிறார். பாடும்போதே அவ்வப்போது பாடலின் கவியின்பத்தை விளக்குகிறார். முடிவில் அவையில் ஒருவர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கிணங்கி இராமனாதன் ஆங்கிலத்தில் அதை விளக்குகிறார்.
அவை குலுங்குகிறது.
ஒருவர் சொல்லுகிறார் "Sir, the meaning was as beautiful as your Thodi!" அதற்கு ஒரு குழந்தைச் சிரிப்பு சிரிக்கிறார் MDR!
'“மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது” என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு’ என்று கவிஞர் சுகுமாரன் தனது MDR சந்திப்பு குறித்து ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வந்தது.
YouTube சுட்டி இப்போது வேலை செய்யவில்லை :( இருந்தால் அந்த தோடி விருத்தத்தின் கடைசி ஒரு நிமிடமும் இராமநாதனின் பாடல் விளக்கத்தையும் கேட்டிருக்கலாம். அப்புறம் என்னை மிகவும் பாதித்த அந்த பத்து நொடி உரையாடலும்...
கலைஞனிடம் இப்படி நெருங்கி அவன் கலையைப் பற்றிச் சிலாகித்தலும் கலைஞன் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுதலும்...
படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் முற்றிலும் மாறுபட்ட மனிதனாகிவிடுகிறான் என்று நான் நினைப்பேன். கலையைப் பற்றிய கலைஞனின் ஊடாடல்கள் படைப்பின் மூலமே நிகழ்கின்றன.
மேடையில் பாடும்போது சபையினர் கைத்தட்டலாம், பாராட்டலாம்; ஆனால் அவையாவும் கலைஞனிடம் பெரும் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. சுருங்கச் சொன்னால் பாம்பு இரையை விழுங்கும் நேரத்தில் எவ்வளவு பலவீனமாகவும், பாதிப்புக்கு ஆளாகும் நிலையிலும் இருக்கிறதோ அப்படியே படைப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் நிலையும் என்றே தோன்றும்.
இராமநாதன் மேடையில் பாடும்போதே சபையினரிடம் சாதாரணமாகப் பேசக்கூடியவர். ஆனால் அது இரசிகருடனான உரையாடல் அல்ல. அவர் கலைவெளிப்பாட்டின் ஓர் அங்கமே.
ஆனால் இங்கே கலையைப் பிரசவிக்கும் ‘பச்சையான’ தருணத்தில் ஒருவன் சாமர்த்தியமாக கலையைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னதும், மிகவும் அரிதான இந்த ஊடாட்டத் திறப்பில் கலைஞன் அதை அங்கீகரித்ததும் ஏனோ என்னைக் கண்கலங்கச்செய்தது...
கருத்துகள்