முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனது நிறையச் சாப்பாடு

பிரபஞ்சனின் சிறுகதையொன்றில் ஒருவர் கடையில் இட்லி வாங்கிச்சாப்பிடுகிறார். பரிமாறுபவர் கேட்பார்,

 “முதலில் சட்னியா, இல்லை சாம்பாரா? எதை ஊற்றட்டும்?” 

 பாத்திரத்தினூடாகப் பிரபஞ்சனே (வரிகள் நினைவிலிருந்து)   சொல்லுவார்: 

“ இந்தக் கேள்வியே பிடித்திருந்தது. சட்னிக்கும் சாம்பாருக்கும் வெவ்வேறு சுவைகள். இரண்டையும் ஒரே நேரத்தில் ஊற்றிக் கலந்து சாப்பிடுவது எனக்குப்பிடிக்காது” 


உணவைப் பரிமாறுவது சிலருக்கே கைவந்த கலை. 


நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத போது அது நிகழும்:  ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு கடையில், கடனுக்காகத் தலையைக் காட்டின திருமணச் சாப்பாட்டுப்பந்தியில், இப்படி ஏதோ ஓரிடத்தில் சுவையானதுடன் மனதுக்கு நிறைவான சாப்பாடு சில பரிமாறுபவர்களின் தயவால் அமையும்.


'உஸ்தாத் ஓட்டல்' திரைப்படத்தில் திலகன் பேசும்  ஒருவரி  வசனம் நினைவுக்கு வருகிறது: “வயிற்றை நிரப்ப யாராலும் முடியும், ஆனால் சாப்பிடுபவர்களின் மனது நிறைய வேண்டும். அதுதான் சரியான கைப்பக்குவம்”


(படம்: நண்பன் மகேஷ்பாபு எடுத்தது) 



உறங்கும்போதும், உண்ணும் போதும் மனிதர்கள் குழந்தைகள் போலாகிவிடுகிறார்கள். கால்களைப்  பின்னிக்கொண்டும், கையை மேசைமேல் ஊன்றியும், குனிந்தும் நிமிர்ந்தும், அமர்ந்தும், நின்று கொண்டும் மனிதர் சாப்பிடும் போது அவர்களை எப்போதும் வியப்புடன் பார்த்திருக்கிறேன். பாசாங்குகளும்,  வேடங்களும்,  ஒப்பனைகளும் இல்லாமல் மனிதரைப் பச்சையாய் பார்க்க நேருவது இத்தருணங்களில் தான்.   அவ்வேளைகளில் அவர்களை அணைத்துக்கொள்ள வேண்டும் எனத்தோன்றும். இதை முழுதாக உணர்ந்துகொண்டதன், உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடாகச் சிலர் உணவைப் பரிமாறும்போது, அது ஒருவிதமான தாயன்போடு அமைகிறது என்று நினைக்கிறேன். 


சிறுவயதில் பிரைமரி காம்ப்ளெக்ஸ் இருந்ததால் அடிக்கடி போத்தனூர் ஜிடி மருத்துவமனையில் எனக்கு ஊசி போட்டுக்கொள்ளும், இல்லையென்றால் இரத்தம் பரிசோதிக்கும் திருவிழா நடக்கும். அரைமணிநேரம் அழுது புலம்பி அங்கிருக்கும் தாதியர்கள் அனைவருக்கும் தலைவலி வரச்செய்யும் அந்நாட்களில், மருத்துவமனை வாசலில் அனந்தராமன் கடை ஓட்டுப்பக்கோடா தான் அன்றைய  ஒரே நல்ல அம்சமாக அமையும். 


அனந்தராமன்  போத்தனூர் இரயில் நிலையம் கொடிகட்டிப்பறந்த அறுபதுகளில் அங்கிருந்த உணவகத்தில் மேற்பார்வையாளராக இருந்தவர். போத்தனூர் அந்நாளில் இரயில் கோட்டத் தலைமை நிலையமாக இருந்தது. இது  கோவையின் பிரதான நிலையமாக இருந்ததல்லாமல் இங்கே இரயில்வேயின் சமிக்ஞைக் கருவிகளுக்கான பணிமனையும், பயிற்சி நிலையமும், பெரிய ‘லோக்கோ ஷெட்டும்’  இருந்த. அப்புறம் இந்தக்கோட்டமே இடம் மாறிப் பாலக்காடு கோட்டமாக ஆனபிறகு போத்தனூர் நிலையம் களையிழந்து விட்டது. (கோவையின் முதல் தபால் நிலையம் 1886ல் போத்தனுரிலேயே நிறுவப்பட்டது என்பது உட்பட போத்தனுர் விசேடங்கள் அநேகம் )


அதற்கப்புறம் அனந்தராமன் ஜிடி ம.மனை வாசலில் ஒரு தள்ளுவண்டியில் கடைவிரித்தார். சுவற்றை ஒட்டி நிற்கும் வண்டி; அச்சுவற்றிலிருந்தே ஒரு தார்பாயைக் கொண்டு வண்டியை மூடியிருப்பார். வண்டிக்குள் ஒரு கண்ணாடிப் பேழை - மர மூடி கொண்டது. கடையை மூடித்திறக்கும் பலகை வெளியில் நின்று சாப்பிடும் மேசையாகப் பயன்பட்டது. 


தினமும் காலையில் ஆறரை மணிக்கு மிதிவண்டியில் ஒரு தூக்கில் இட்லி மாவு, இன்னுமிரண்டில் சாம்பார் மற்றும் சட்னி, மற்றும் பால் ஆகியவற்றை வீட்டிலிருந்து எடுத்து வருவார். கண்ணாடிப் பேழைக்குள் தூக்குகள் அமரும். 


செவ்வக வடிவில் வெட்டிய வாழையிலையில் சூடான இட்லியைப் பரிமாறுவார். காலையிலேயே வெற்றிலை குதப்பும் வாயுடன் இருப்பார். அவர் பரிமாறும் விதமும் சாம்பாரை ஊற்றும் இலாகவமும் அந்தச் சாம்பாரின் சுவையும் இன்றும் பசியைத் தூண்டக்கூடிய. நீர்க்க இருக்கும் சாம்பாரில் சிறிய காய்கறித்துண்டுகள் அரிதாகக் கிட்டும். சிறிய இட்லிகள் - யாரும் நான்காவது சாப்பிட்டால் தான் ஏதும் உண்டதுபோல் இருக்கும். 


ஊரில் அப்பகுதியில்  இருக்கும் எளியவர் அனைவரும் அங்கேயே சாப்பிடுவர். ம.மனைக்கு வரும் சிலர் தேநீர் அருந்துவர். (கடையில் ஒரு பாய்லர் உண்டு) வீட்டில் அவ்வப்போது இங்கிருந்துதான் சிற்றுண்டி. காலையில் இரண்டு பாத்திரங்களைக் கையில் கொடுத்து “பன்னண்டு இட்லி வாங்கிட்டு வா அனந்தராமன்ட்ட” என்று அம்மா அனுப்புவாள். அன்றைக்கு நாலாணாவுக்கு விற்ற இட்லியின் விலை உணவகங்களில் 75 பைசா முதல் ஒரு ரூபாய் வரை இருந்திருக்கலாம். சாயங்காலங்களில் ஓட்டுப்பக்கோடாவும் தேநீரும் மட்டும் கிடைக்கும்.


நல்ல உணவை எவரும் வாங்கும் விலையில் தந்த அனந்தராமன்  அப்படியே எனக்குத்தெரிந்து இருபது வருடங்கள் கடையை நடத்தினார். விலைவாசிக்கு ஏற்ப இட்லியின் விலையும் கூடினாலும் மற்றவிடங்களைவிடக் குறைவாகவே இருந்தது. என்னைப் போலவே அங்கே வழக்கமாகச் சாப்பிட்ட அனைவரும் இவரின் பரிமாறும் கனிவைத் தெரிந்துகொண்டிருந்தார்கள் என்றே நினைக்கிறேன்.


விலை, சுவையை விட அவர் முகமும் பரிமாறும் விதமுமே இன்னும் மனதில் நிற்கிறது. இன்றைக்கு எத்தனையோ விதங்களில் சமைத்த உணவை ‘அழகுபடுத்திக்’ கொடுக்கிறார்கள். சாப்பிடத்தூண்டுவது இந்த அழகுதானா? கைக்கு அடக்கமான,    செவ்வக  வாழையிலையில் வைத்த இட்லி போன்ற அழகும், அவர் சாம்பார் கரண்டியை ஒருவிதமாகப் பிடித்திருக்கும் அழகும், அந்தக்கரண்டி சாம்பார் தூக்கில் படும் ஒலியின் அழகும் அதற்கப்புறம் கடைகளில் ('கடைகளில்' என்பதை ஒரு பாதுகாப்புக்குச் சேர்த்துக்கொள்கிறேன்) சாப்பிட்ட எதிலும் இல்லை. வேறெதுவும்  இவ்வளவு நாட்களாக மறக்காமல் நினைவிலும் இல்லை. 


மனது நிறையச் சாப்பிடுவது என்னவென்று அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிந்ததே மீதம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...