முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதைத்தின்றால் தெளியும் பித்தம்?


- மரபணு மாற்று உயிரினங்கள் (Genetically Modified Organisms – GMO – .மா.) பற்றிய என் சிந்தனைகள், மற்றும் கருத்துகளைப் பதிவு செய்ய விழைகிறேன்இதைப் பற்றிய நிபுணத்துவக் கருத்துகள் சொல்ல எனக்குத் தகுதியில்லை. ஆனால் எதையும் (குறிப்பாக உணவுப்பொருட்கள்) சரியாகப் புரிந்துகொண்டு எனக்கானவற்றைத் தெரிவு செய்யும் நுகர்வோனாக இதைப் பற்றிய சச்சரவுகள் என்னைப் பாதிப்பதுடன், குழப்பமான மனநிலையிலேயே வைத்திருக்கின்றன.





முதலில் பலரைப்போலவே எனக்கும் மரபணு மாற்று உயிரினங்களில் நம்பிக்கையில்லை என்பதைப் பதிவுசெய்யவேண்டும்.  இதைச் சொல்லும்போதே .மா. களின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டிற்கு உதாரணம் ஆகிறேன் - அறிவியல் அறியாதோரின் அடித்தளமற்ற பயத்தின் விளைவே உலகளாவிய .மா. எதிர்ப்புக்குக் காரணம் என்கிற குற்றச்சாட்டுதான் அது

ஆகவே இதன் எதிர்ப்பாளர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தையும் .மா. வின் ஆதரவாளர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் சில அறிவியல் மற்றும் சூழலியல் சார்ந்த ஐயங்களும் இருக்கின்றன. இவற்றைப் (எனக்காகவும், பொதுவாகவும்) போக்கவேண்டிய கடமை அறிவியல், மற்றும் இதிலிருந்து பொருள் ஈட்டும் வணிகப் புலங்களுக்கு உண்டுசில ஐயங்கள் இங்கே:
  1. .மா. உயிரினங்கள் அவற்றை அறிமுகப்படுத்தப்படும் சூழல்களில் எப்படி இயங்கும்? அந்தச் சூழல் மண்டலத்துடன் (ecosystem) இயைந்த அமைப்புத் தன்மையைப் பெறுமா, அல்லது அச்சூழல்களின் சொந்த இனங்களுக்கும் (native species) மண்வளத்திற்கும் (.மா.பயிராயிருந்தால்) ஊறு விளைவிக்குமா? இது போன்ற தொலைக்கால பாதிப்புகளைச் சரிவரப் புரிந்துகொள்ளவும், அறிவியல் ரீதியாகச் சோதனை செய்யவும் தொழில் நுட்பங்கள் இருக்கின்றனவா? ஒரு வந்தேறியினத்தினால் அச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக உணர்ந்து கொள்ளப் பல சுழற்சிகள் தேவைப்படும் போது, சில பல .மாஉயிரினங்களைச் சட்டென்று அறிமுகப்படுத்தவோ, அவற்றை இயல்பாக பாவிக்கத் துவங்கவோ எப்படி முடியும்?
  2. மா களின் தொலைக்கால பாதிப்புகள் (உடல்நலம், மற்றும் சூழலியல் சார்ந்தவை) அறியப்படாதவையாகவே இருக்கின்றன என்பதே அறிவியற்சமூகத்தின் ஒருமித்த (அல்லது ஒருமித்தமின்மையாக கருத்தாக இருக்கிறது. இப்படியிருக்க, அறிவியல் சார்ந்த / அறிவியலுக்கு எதிரான என்கிற நிலைப்பாடுகளை இருதரப்பினரும் எப்படி எடுக்க முடியும்?
  3. ம.மா.பயிர்களின் விதைகளுக்குப் பெரும் விலை வைத்தும், அவ்விதைகளின் பயன்பாட்டிற்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights), மற்றும் ராயல்டியும் கோரியும், விவசாயிகளின் சொத்தான விதைகளைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்  (அதிலும், சரியாகச் சோதனை செய்யாத விதைகளை ஏழைநாடுகளுக்கு அனுப்பி ‘களப்பரிசோதனை’ செய்வதாகக் குற்றம் சாட்டப்படும்) பெருநிறுவனங்கள் செய்வது சரியா?


இதற்கெல்லாம் ம.மா.உ  ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

  1. ம.மா.பயிர்கள் விவசாயத்திற்குப் புதிதல்ல. வெவ்வேறு பயிர்களை ஒட்டி புதிய பயிர்களைத் தங்கள் விவசாயச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கிறார்கள். இப்போது பரிசோதனைக்கூடத்திற்குள் செய்யப்பட்ட விதைகளை மட்டும் ஏன் வெறுக்க வேண்டும்?
  2. ம.மா.உயிரினங்கள் ஆழ்ந்த அறிவியலாராச்சியின் விளைவாக வந்தவை. அவற்றை வெற்றுக் கூச்சலினாலும், பயத்தினாலும் மட்டுமே எதிர்கொள்வது அறிவியற்சிந்தனையின்பாற்பட்டதல்ல.
  3. இன்னும் சில வருடங்களில் உலக மக்கட்தொகை ஆயிரம் கோடியை (10 பில்லியன்) எட்டப்போகிறது. ஆனால் மேலதிக விளைநிலங்கள் இல்லாமலிருப்பதுடன், இருக்கும் விளைநிலங்களின் வளங்களையும் இழந்து வருகிறோம். ம.மா.பயிர்கள் நோயெதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், அதிக விளைச்சலும், அதிக நீர்ச் சிக்கனமும், மண்வளப்பாதுகாப்பும் தருவதனால், இந்த அதிக மக்கட்தொகையின் உணவுத்தேவைகளை நாம் எதிர்கொள்ள முடியும். மேலும், புற்றுநோய் தொடங்கிய பல நோய்களை விளைவிக்கும் இரசாயனப் பூச்சிகொல்லிகளை குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம், எல்லோருக்கும் நன்மையே விளைகிறது.


இவை தவிர, இருதரப்பினரும் தம் எதிரணியின்மீது வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு, அவர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகச் சொல்வதுதான். ம.மா.உயிரினங்களின் ஆராய்ச்சி, மற்றும் அது சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெருநிருவனங்கள்  (பீட்டி பருத்தி [Bt Cotton] மற்றும் பீட்டி கத்திரிக்காய் போன்றவற்றைச் செய்யும் மான்சாண்டோ [Monsanto] நிறுவனம் ஓர் எடுத்துக்காட்டு)  ஒருபுறம். ஏழ்மை ஒழிப்பு, மற்றும் உலகளாவிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழிகோலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பெரும் முதலீடு செய்துவரும் பில் கேட்சு & மெலிண்டா கேட்சு அறநிறுவனம்  (Bill Gates & Melinda Gates Foundation) போன்ற அறநிறுவனங்கள் மறுபுறம். இது போன்ற நிறுவனங்களின் நிதியுதவி கொண்டு பரப்பப்படும் பிரச்சாரமே ம.மா.உ ஆதரவு என்று எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  மான்சாண்டோவை  விடப்பலமடங்கு பொருளீட்டும் எக்சான்மொபில் (ExxonMobil)  போன்ற நிறுவனங்கள் நினைத்தால் பெருமளவு முதலீடு செய்து படிம எரிபொருட்களுக்கு (fossil fuels) ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய முடியுமே, ஆனால் அப்படிச்செய்ய முடியவில்லையே? புவிவெப்பமடைதலுக்கு படிம எரிபொருட்களே காரணம் என்ற கருத்தை மாற்ற அதனால் முடியவில்லையே? அப்படியிருக்க மான்சாண்டோவின் பிரச்சாரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்? (அதனால் அவர்கள் அதைச்செய்வதில்லை என்பது ஆதரவாளர்கள் வாதம்)

இதன் எதிர்ப்பாளர்களும் அரசு சாரா பன்னாட்டு நிறுவனங்களின் பொருளுதவி கொண்டே ம.மா.உ வுக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதிலே அறிவியல் தொடர்பான ஆக்கபூர்வமான விவாதங்கள், தரவுகளைக் காண்பது அரிதாக இருக்கிறது. இருதரப்பிலும் இந்தப் பிரச்சாரப் போரில் (Propaganda war) ஈடுபட்டிருப்போர் அதிகமும் அறிவியல் பின்னணியற்றவர்கள் என்பதும் கவலைக்கிடமான ஒன்றுதான்.  இதிலே இடையில் சிக்கித் தவிப்பது சாதாரணராகிய நாம்தான்.  நாட்டின் உணவுப்பற்றாக்குறையைப் போக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏழைநாடுகளின் அரசுகள் இந்தச்சச்சரவில் எந்த நிலையை எடுக்கவேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யும்? இதுபோன்ற பல குழப்பங்களுக்கும் வழிவகுக்கக்கூடியதுதான் இந்தப் போர்கள்.

இந்தியாவைப் பொருத்த வரையில், தொண்ணூறுகளின் பீட்டி பருத்தியின் அறிமுகம் எதிர்பார்த்த நல்ல விளைச்சலைக் கொடுக்கவில்ல என்பதையே தரவுகள் நிரூபிக்கின்றன. முதலில், பீட்டி பருத்திக்கான (அதிக) நீர்தேவையையும், விவசாய முறையையும் நம்மூர் விவசாயிகள் அறிந்திருக்கவில்லை. மேலும், இந்தியச் சூழலுக்கு பீட்டி பருத்தி பொருந்தி வரவில்லை என்பதையே குறைந்த விளைச்சல் நமக்கு அறியத்தருகிறது. இதிலே விதைகளின் அதிக விலையும், விளைச்சலின்மையும் விவசாயிகளைக் கடனாளிகளாக்கி தற்கொலைக்கும் தூண்டியிருக்கின்றன. ஏனெனில், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் விதைச்சந்தையில் கிடைத்த உள்ளூரின பருத்திவிதைகள் இப்போது இல்லாமல் போய்விட்டன. இதனால் விளைச்சல் தராத பீட்டி வகைகளையே விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்கிப் பயிரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும், பீட்டி பருத்தி விதையின் எதிர்ப்புத்தன்மை ஒருவகையான காய்ப்புழுவுக்கு எதிராகவே பருத்தியைக் காப்பாற்றியது. மற்ற பூச்சிகளின் தாக்குதலுக்கு மேலும் இரசாயனப் பூச்சிகொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. பீட்டி பருத்திப் பயன்பாட்டினால் விவசாயிகள் பூச்சிகொல்லிகளை மாதமொருமுறை அடித்தால் போதுமானது என்கிற கூற்றும் பொய்யாகிப்போனது.

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் பெருகிய  விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ம.மா.விதைகளே காரணம் என்கிற பரப்புரை மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், விவசாயிகளின் அவலத்திற்குப் பொய்த்துவிட்ட பீட்டி பருத்தியும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் வசதியாக இந்தியாவின் ஊழலையும், விவசாயிகளுக்குச் சரியான காப்புரிமையின்மையையும் சுட்டிக்காட்டி இந்தப்பழியினின்றும் தப்பித்துக்கொள்கின்றன.

---



தொழில் நுட்பமும் அறிவியலும் நமக்கு வாய்த்த அருமையான கருவிகள். அவற்றை மானுட உயர்வுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். அவை பேராசை பிடித்த எந்த நிறுவனத்திற்கோ தனிமனிதருக்கோ அவர்களின் பிரச்சாரத்திற்குத் துணைபோகும் ஒன்றாக இருக்கக் கூடாது. இப்போதிருக்கும் பேரிடர்களும் (புயல், வெள்ளம், புவிவெப்பம், முதலிய) நோய்களும் மனிதர்களின் காட்டழிப்பின் விளைவே. கடந்த ஐம்பதாண்டுகளாக நம்மைத் தாக்கிவரும் புதிய நோய்க்கிருமிகள் பல ஆயிரம் வருடங்களாக வேற்று உயிரினங்களில் (நோய்க்கூறற்று) இருந்து வருபவை என்றும், இக்கிருமிகளும் மழைக்காடுகளின் பல்லாயிரக் கணக்கிலான உயிர்ப்பல்வகைமையின் அம்சங்கள் என்றும் ஓர் ஆராய்ச்சி நிறுவுகிறது. இந்நோய்கள் காட்டழிப்பினாலும், மனிதரின் காடுகளை கைவசப்படுத்தும் போக்காலும் மனிதருக்குத் தாவியாதவும் அந்த ஆராய்ச்சி சொல்லுகிறது. மேலும், காட்டழிப்பு மூலம் பெரும் கரியமிலக் கிடங்கை இல்லாமல் செய்கிறோம் என்பதும், மண்ணின் உறுதியின்மைக்கும், வெள்ள அபாயத்திற்கும் வழிவகுக்கிறோம் என்பது தெரிந்ததே.

எனக்கிருக்கும் கேள்வி, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கொண்டு ஏன் நாம் காடுகள் மற்றும் சூழலின் மறுசீரமைப்புக்கு ஏதும் செய்யாமலிருக்கிறோம்? மாறாக, மேலும் காட்டழிப்பின் (காட்டழிப்பு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே) மூலம் ஏற்படும் இடர்களைக் களைய ம.மா.உ போன்ற சரிவரச் சோதனை செய்யப்படாத தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, அவற்றின் பக்க விளைவுகளை (மேலும் நோய், சூழல்ச் சீர்கேடு, முதலியன) எதிர்கொள்ள மேலும் சோதனைகளற்ற தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்கிறோம். இது ஒரு பெரும் அழிவின் சுழற்சி இல்லையா? பிரச்சனைகளின் மூலத்தைத் தெரிந்துகொண்டே, ஆனால் அவற்றின் அறிகுறிகளை மட்டுமே எதிர்த்துப் போராடுவதில் என்ன நன்மை விளைந்துவிடும்?

இப்போது சீக்கா (Zika) கிருமிகளை எதிர்க்க வேண்டி புதிய ம.மா. கொசுக்களை அறிமுகம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இந்த ம. மா. கொசுக்கள் கிருமிகளைப் பரப்பும் கொசுக்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும்போது அந்தப் புதிய கொசுக்கள் மடிந்துவிடுகின்றன. ஆனால் சீக்காவின் அபாயகரமான விளைவுகளை மனத்தில் கொண்டு இந்த முறையை அவசரமாகச் செய்தல் சரியான நடவடிக்கையா? இதனால் உண்டாகும் பக்க விளைவுகளை என்ன செய்வது? மேலும் இம்மாதிரியான சோதனைகளைச் செய்ததன் விளைவாக ஏற்பட்ட பக்க விளைவுகளை நாம் மறந்துவிட்டோமா? (ஆஸ்திரேலியாவில் எலிகள் மற்றும் முயல்களை கட்டுப்படுத்துமுகமாக அறிமுகப்படுத்தப்பட்ட பூனை முதலான அச்சூழலுக்குச் சொந்தமில்லாத உயிரினங்கள் புதிய சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகள்)

அமெரிக்காவில் ‘சூப்பர் கௌ’ என்கிற அதிகச் சத்துக் கொண்ட பெருத்த (நிறையச் சதை கொண்ட) ம.மா.மாடுகளைச் செய்கிறார்கள். இவற்றை உண்பதனால் ஏற்படும் தொலைக்கால விளைவுகளை நாம் அறிவோமா?  இன்று இந்தியா உட்படப் பல நாடுகளினின்றும் ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்கள் கால்நடைத்தீவினமாகவே பயன்படுத்தப் படுகின்றன. தானியப் புரதங்களை விலங்குப் புரதமாக மாற்றும் மாடுகளை நாம் உண்பதற்கு பதிலாக அத்தானியங்களை நாமே உண்ணலாமே என்றும் ஒரு தரப்பினர் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

---

இதையெல்லாம் சொல்கிற நேரத்தில் மரபணு ஆராய்ச்சிகளின் முன்னேற்றமும், மரபணு ஆய்வின்மூலம் புற்றுநோய் முதலான கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக்கும் முனைப்பும் மிக முக்கியமானவை. மீண்டும், பல சாத்தியங்கள் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எவற்றில் முதலீடும் கவனமும் செலுத்தவேண்டும் என்கிற புரிதல் அவசியம்.

பொதுவில் ம.மா.உ ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனக்கு ஆத்திகர்கள் மற்றும் கடவுள் மறுப்பாளர்களின் சச்சரவை நினைவூட்டுகிறது. அதே நேரம், ‘கடவுள் இருக்கிறாரா என்று தெரியாது, ஆனால், இருந்தால் நன்றாக இருக்கும்’ என்ற நடிகர் கமலஹாசனின் கருத்தும் இந்த இடத்தில் பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது. ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ என்றிருக்கும் சூழலில், ம.மா.உ நமக்கு இப்போதும் எப்போதும் நல்லவற்றையே செய்யும் என்று அறிவியல் உலகம் உறுதியளித்தால் அவற்றைப் பயன்படுத்துவதில் என்ன சுணக்கம் இருக்கமுடியும்? ஆனால் அப்படியொரு காலம் வரும் வரை இருக்கும் வளங்களைக் காப்பாற்றிக்கொண்டும், மறுசீரமைத்துக் கொண்டும் இருப்பதே பாதுகாப்பானது என்று தான் நினைக்கிறேன்.

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

---

இதை எழுத உதவிய கட்டுரைகளுக்கான சுட்டிகள்:

  1.  Propaganda wars: ‘pro-science’ GMO, chemicals boosters funded by climate change deniers
  2. The War on Genetically-Modified-Food Critics: Et tu, National Geographic
  3. Seeds of Doubt – An activist’s controversial crusade against genetically modified crops
  4. And meanwhile in Vidharbha – P. Sainath on Bt cotton and farm suicides
  5. GM cotton: suicide seeds?
  6. Abnormally large ‘super cows’ being manufactured by Frankenscientists for beef production
  7. Genetically Modified Mosquitoes: What Could Possibly Go Wrong?
  8. Why Killer Viruses Are On The Rise
  9. The Anti-GMO Movement Has A Social Justice Problem

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...