பேப்பர்மிட்டாய் என்றொரு பண்டம்; வட்டமாக, சற்றே கெட்டியான காகிதம் போன்ற திண்மையுடனும், அசட்டுத்தித்திப்புடனும் இருக்கும் இதை 10 காசுக்கு வாங்கிச்சாப்பிட்டிருக்கிறேன். உங்களுக்கும் இதைத் தெரிந்திருக்கலாம்.
அன்றைக்கு நான் உடுத்தியிருந்த உடை அம்மாதிரியான பண்டத்தால் ஆனது. தெருவில் நடந்துபோகிற வழியில் பிய்த்துத்தின்றுகொண்டே நடந்தேன். நாவில் பட்டுக் கரைந்து, அதே லேசான இனிப்புடன் - பெரிய சுவையில்லையானாலும் தின்பதை நிறுத்த முடியவில்லை. நடுவில் ஏதோ மெல்லமுடியாத பகுதி வந்ததும் வாயிலிருந்து கையிலெடுத்துப் பார்த்தேன். தின்பண்டத்தால் ஆன உடையில் நிஜ சரிகை வைத்து எந்த மடையன் தைத்தது? வாயில் மீதமிருந்த, சவைத்த சரிகையைத் துப்பினேன்.
அப்போதுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் - பார்த்தால் பாதி உடையை தின்றுவிட்டிருக்கறேன். அப்போதுதான் உடையைச் சரியாக கவனிக்கவும் செய்தேன். நீல வண்ணத்தில் அடர்நீலப் பூக்களுடன், பழுப்பு சரிகை போட்ட சேலையைத் தான் கட்டிக்கொண்டிருந்திருக்கிறேன். தின்றுமுடித்துபோக மீதியை இடுப்பில் துண்டு மாதிரித்தான் கட்டிக்கொள்ள முடிந்தது.
முன்னெப்போதும் நிர்வாணக் கனவுகளில் வருவது போல “ஒரு ஜட்டியாவது போட்டுக்கொண்டு வீதியில் இறங்கியிருக்கலாமே” என்ற அங்கலாய்ப்பில்லாமல் முடிந்ததே என்று நினைக்க நினைக்க இந்தக் கனவும் கலைந்தது.
கருத்துகள்