முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடைத்தாத்தாவின் கொடை

குடைத்தாத்தா என்று நாங்கள் (வீட்டின் சிறுவர்பட்டாளம்) பெயர் சூட்டிய மனிதர் ஒருநாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கோவை, மதுரை என்று ஊர் சுற்றும் 'பஞ்சு ஏஜென்ட்' வேலை என்றார். நான் அவரைப் பார்க்கும்போது அவருக்கு வயது அறுபது இருந்திருக்கும் - எனக்குப் பதிமூன்று. திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டேன். பழைய குடும்ப நண்பர் - மாதமொருமுறை கோவை வந்தால் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்வார். கையில் எப்போதும் ஒரு குடையும் நைந்துபோகும் நிலையிலிருக்கும் பையும் வைத்திருப்பார். பைக்குள் பல காகிதப் பொதிகள் வைத்திருப்பார். ஒரு பொதிக்குள் (பொதிக்குள் பொதியில்) நோட்டும் சில்லறையுமாக காசு வைத்திருப்பார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவ்வப்போது காசோ பொருளோ வீட்டிலே கொடுத்துவிடுவார்.

இவர் இசைப்பித்து பிடித்தவர். பல கலைஞர்களை எனக்கு அறிமுகம் செய்தவர். இசைக்கலைஞர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கூறூவார். நேரிலோ, ஒலிநாடாவிலோ கேட்கும் இசையில் இருந்திருந்தவாறு மூழ்கி விடுவார். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுவார் - உடல் சிறிதாகக் குலுங்கி அடங்கும். பேச்சுக்கொடுத்தால் அடுத்தநொடியில் இயல்பாகி விடுவார். வீட்டில் இது குறித்த எள்ளல் இருந்தாலும் "பாவம், நல்ல பாட்டு கேட்டால் கரைஞ்சுடும்" என்ற புரிதலும் இருக்கும்.

எனக்கு இது குறித்து வியப்புதான். எப்படி இசைக்குக் கண்ணீர் உகுக்கமுடியும்? அவ்வளவு தீவிர இலயிப்புக்குப் பின் சட்டென்று இயல்பு நிலைக்கு எப்படி வர முடியும்? இந்தக் குறுகுறுப்பே என்னைக் கருநாடக இசையை அணுகச் செய்தது. இவர் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிலர் பாட்டைக் கேட்கவாரம்பித்தேன். மதுரை மணி, எம்.டி. ராமநாதன், செம்பை, செம்மங்குடி, பட்டம்மாள், ஜெயராமன், என்று விளையாட்டாய் ஆரம்பித்தது எனக்கும் பித்தாக ஆகிவிட்டது. கோவையில் நடக்கும் சொற்ப கச்சேரிகளுக்குப் போகவாரம்பித்தேன். எந்த ஒரு இசைத்துணுக்கைக் கேட்கநேர்ந்தாலும் உடனே என்னிடம் "என்ன இராகம்" என்பார். சொல்லுவேன்; சரியானால் பாராட்டுவார்; தவறாயிருந்தால் சொல்லிக்கொடுப்பார். இசை என்னை உள்ளிழுத்துக்கொண்டது; ஆட்கொண்டது; பித்துப்பிடிக்கச் செய்தது.

நான் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். இசை பல இரசாயனங்களை எனக்குள் உற்பத்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. இன்னதென்று சொல்லமுடியாத, தன்வயமிழக்கவைக்கும் ஒரு போதை; பல வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்று இசை படுத்தியது. ஒரு சில  தருணங்களில் நானும் என்னையறியாமல் கண்ணீர் விடத் துவங்கினேன். குடைத்தாத்தா போல குலுங்கியழாவிட்டாலும் சில தருணங்களில் வாய்விட்டழுதுவிடுவேன் - அப்படியொரு சுகமான வேதனை மனநிலை அது.

இசை கேட்கும்போது குடைத்தாத்தா எப்படிப்பட்ட கட்டங்களில் குலுங்குவார் என்று முன்கூட்டியே ஊகிப்பேன். நான் பாடி அவரை அந்நிலைக்குத்தள்ள வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியது. "வசந்தமுல்லை போலே வந்து" பாட்டை சிறுவயதில் நன்றாகவே பாடிக்கொண்டிருந்தேன். "மந்திரக்கண்ணாலே தந்திரவலைவீசும்" என்று பாடியபோது தாத்தா கண்ணீர் விட்டார். எனக்கு மிக நிறைவாக இருந்தது.

குடைத்தாத்தாவைப் போலல்லாமல்  பலர் மத்தியில் என்வயமிழக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பேன். தாத்தாவின் இறுதிக்காலத்தில் மாமா சிலகாலம் அவரை வைத்துப் பார்த்துக் கொண்டார். அப்புறம் வேறு வழியில்லாமல் அவரை அவர் உறவினர்களிடம் அனுப்பிவைத்தோம். அதற்கப்புறம் விரைவிலேயே அவர் இறந்த செய்தி வந்தது.

இசைப்பதை விட இசையை கேட்டு அதில் ஆழ்ந்து அமிழ்ந்து இல்லாமல் போய்விட முடிவது பெரும் பேறு. இதை எனக்கு உணர்த்திய குடைத்தாத்தா எனக்குத் தந்தது பெருங்கொடை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன். *** மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்...

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...