முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.டி.ஆர்

சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது.

எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்கு இசை உலகம் மற்றும் இசை ரசிகர்களின் மத்தியிலே. பக்தி, ஆன்மீகம் என்கிற மிகையுணர்ச்சிகளின் தாக்கத்துக்கு உட்பட்ட இம்மரபிசையிலே கலைசார்ந்த ஆக்க வெளியீடுகளும், தேடுதல்களும் இரண்டாம்பட்சமாகவே இருந்து வருகின்றன.

இதிலே கலையை போஷிக்கிற, மேன்மைப்படுத்துகிற, அருமையான சிருஷ்டித்தன்மை கொண்டவராக இருந்த ராமனாதன் புறக்கணிக்கப் பட்டது என்னை பாதித்தது. இந்தப் புறக்கணிப்பே எனக்கு அவர்மேல் இன்னும் மரியாதையும், அவரைப்பற்றிய தகவல்களை அறிய ஆவலையும் ஏற்படுத்தியது. மரபார்ந்த வழைமைகள் மாறுதலுக்குட்படுத்தப்படும் போது ஏற்படுகிற எதிர்ப்பும், புறக்கணிப்புமே ராமனாதன் எதிர்கொண்டது. ”தனி வழி நடப்பவனின் எல்லா துக்கங்களையும் அவமதிப்புக்ளையும் எம்.டி.ஆர் அனுபவித்திருக்கிறார்” என்கிறார் சுகுமாரன். உண்மை. அவரைப் பற்றைய எதிர்மறையான எல்லாக் கருத்துகளும் எனக்கு அவர்மேல் மதிப்பையே ஏற்படச் செய்கின்றன.

”அவன் பாடும்போது ஒரு நெலைக்கண்ணாடியத் தான் முன்னாடி வைக்கணும்” என்று பாட்டி சொல்கிறபோதும், கச்சேரிக்கு வாசிக்கவென்று அழைக்கவரும்போது ”இழு இழுன்னு இழுப்பான். இவனுக்கு வாசிக்க முடியாது” என்று மிருதங்கக் கலைஞன் ஒளிந்து கொள்ளும் கதை கேட்டபோதும், ”அவர் பாடுகிற சுருதிக்கு வயலின் கம்பியெல்லாம் தளர்த்தி, தொளதொளன்னு, சத்தமே வராது”, மற்றும் “அவர் பாட ஆரமிச்ச ஒடனே மொதல் வரிசையில ஒரு குழந்தை பயந்து அழுதது” என்ற எள்ளலுக்கும் மனத்தில் மதிப்பே.

ஒரு பெரிய தொகையைச் செலவழித்திருக்கிறேன் - அவர் பழைய கச்சேரிகள் பலவற்றைச் சேமிக்கவென்று. இப்போது நாற்பதற்கும் மேற்பட்ட கச்சேரிகளை வட்டுகளில் சேமித்திருகிறேன். நினைத்தபோது ஒரு கச்சேரியை கேட்பது என்றிருப்பது வசதியான வாழ்க்கையின் உச்சம் போலிருக்கிறது. ”’மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது’ என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு” என்று சுகுமாரன் எழுதியதை அறிந்து கொள்ள எம்.டி.ஆரின் ஒரு பழைய நிகழ்ச்சி ஒளி-ஒலி வடிவில் வைத்திருக்கிறேன். நெளிநெளியாகப் போகும் மங்கலான படத்தை மீறி அதை ரசிக்கிறேன். இது ஒரு பெரிய பொக்கிஷம்.

“ராமனாதனின் இசையும், நல்ல விஸ்கியும் உயிர்வாழப் போதுமானது” என்கிற மாதிரி ஒரு கேரளத் திரைப்பட இயக்குனர் சொல்வாராம். என்னவிருந்தாலும் மலையாளிகள் ரசனை மிகுந்தவர்கள்...

தனிமையின் வழி - சுகுமாரன், உயிர்மை பதிப்பகம்

கருத்துகள்

Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. வெங்கட் சாமிநாதனின் கட்டுரை ஒன்றில் இவரைப்பற்றிய குறிப்பினை படித்து பிரமித்து பலமுறை தேடியுள்ளேன். உங்கள் கட்டுரை இந்த புத்தகத்தினை படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நன்றி.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்தோஷ்,

மன்னிக்கவும் - கொஞ்சம் குளறுபடி ஆகிவிட்டதென்று நினைக்கிறேன். "தனிமையின் வழி" சுகுமாரன் கட்டுரைகளின் தொகுப்பே; எம்.டி.ஆர் பற்றிய புத்தகம் அல்ல. நான் குறிப்பிடும் கட்டுரை நீங்கள் எனக்கு அனுப்பியது. அதை மீண்டும் படித்ததன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு. சுகுமாரன் கட்டுரையில் எம்.டி.ஆர் பற்றிய இரண்டு நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைத் தேட வேண்டும்.

-கண்ணன்
பரத் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அறிமுகத்திற்கு நன்றி!!
பரத் இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.youtube.com/user/mdramanathan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தோற்றோர், நேசிப்போர், வெல்வோர்

  எவ்வளவு நல்ல உலகம் இது! இங்கே இறப்பது எவ்வளவு இனிமையானது! வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்ற (ஒரு) கவிஞன் மரணத்தில் வென்றான். அவன் போகிறபோக்கில் சொல்லிப்போனது இது — என்று ஒரு மலையாள மேடைப் பேச்சில் கேட்டேன். பேச்சு, தோற்றவர்களைப் பற்றியதானது. அதாவது, வெற்றி/தோல்வி என்று நாம் வகுத்திருக்கும் விதத்திலே ‘தோற்றவர்கள்’. பேச்சாளர் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழாவில் இப்படிப் பேசினார். அவர் பேச்சின் சாராம்சம், வெளிச்சத்தின் மறுபுறமும் நாம் நோக்க வேண்டும் என்பதே. John Ruskin-ன் “Unto the last” என்ற நீண்ட கட்டுரையையே காந்தி சர்வோதயம் என்று மொழிபெயர்த்தார். “மண்ணில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகிற்கு நல்க ஏதேனும் ஒரு நன்மை இருக்கிறது” என்பதும் உபபாடம். இன்று சர்வோதயம் பற்றித் தெரிந்துகொண்டேன்…

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...