முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சும்மா

வாரயிறுதிகளில் விடியற்காலையில் எழுந்தால் ஓய்வு நாட்களின் நீளம் கூடும் என்பது நண்பரின் பரிந்துரை. சும்மாயிருக்கும் இந்நாட்களில் இதைப் பின்பற்றுவதில்லை. காலை பத்து மணிக்கே எழுந்து காப்பியைக் குடித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மீண்டும் காப்பி குடித்து, மதிய உணவு முடித்து, சாயங்காலக் காப்பி குடித்து இரவுணவு உண்டு உறங்கப் போகும், ஒன்றும் செய்யாமல் இருக்கும் இத்தினங்களிலும் சாப்பாட்டு வேளைகளிலும், மற்ற பான வேளைகளிலும் ஆனதான ஒரு ஒழுங்கு இருக்கவே செய்கிறது. இடையில் டிவியில் இரண்டு தல்லிப்பொளிப் படங்கள், சுடோகு, லூயி லாமர், இணைய உலாவல்.

ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதில் இருக்கும் சோர்வு, ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. உண்மையில் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இப்படியாகத்தானே வாழ்க்கையைக் கழித்து, நேர உபயோகத்தின் நன்மைகளை உபன்யாசிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆசையில் மண்ணைப் போடுகிறது இந்த இரண்டாவது சோர்வு.

முதலிலேயே ஒன்றும் செய்வதில்லை என்று சங்கல்ப்பம் செய்துகொள்வதில் உண்மையான ஓய்வு தினமாக மனம் அதை வரிந்துகொள்கிறது. வங்கியில் வேலை, கரண்ட் பில் கட்டுதல், கடையில் பொருட்கள் வாங்குதல், வேறெங்கோ வண்டி எடுத்துக்கொண்டு போனது என்ற இப்படியான வேலைகளே உண்மையான வேலைகள் போலவும், டிவியில் இரண்டு பாடாவதிப் படங்கள் பார்த்ததை வேலையற்றதாகவும் உருவகப் படுத்திச் சோர்வுக்கான அஸ்திவாரம் போடும் மனது. யாரோ தத்துவக்ஞானி கடைத்தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை ஒருவர் கேட்கப் போக, "எவையெல்லாம் எனக்குத் தேவையற்றவை என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னதாகப் படித்த ஞாபகம்.

மொத்தத்தில் சும்மாயிருப்பதையும் உருப்படியாகச் செய்யமுடியவில்லை - சும்மாயித்தலின் காரணத்தை நமக்கோ பிறருக்கோ விளக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் கட்டுண்டிருப்பது மாயையன்றி வேறென்ன! நம்மைப் பற்றிய நமதும் பிறரதுமான தெற்றுத் தாரணைகளைத் திருத்தவே பாதி வாழ்க்கை கழிகிறது. இன்னுமொரு பாதி உணவிலும் தூக்கத்திலும் - இப்போதைப் போல.

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
எண்ணி ரெண்டுன்னாலும் ரெண்டாயிரத்தேழுல ரெண்டு முத்தான இடுகை எழுதியிருக்கீங்கங்கறத நான் பாக்காம விட்டுட்டேன். எங்கயோ போய் உலாவி திடீரென ஒரு பொறி தட்ட யளனகபகவத் தேடி வந்தப்போ இந்த ரெண்டும் சிக்குச்சு. எப்படி இருக்கீங்க கண்ணன்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...