முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நமக்கான பிரத்யேக இடங்கள்

கண்ணே கண்ணம்ம!

ஆறடி நிலமே சொந்தமடா என்று தத்துவார்த்தமாகப் பாடினாலும், நமக்கான பிரத்யேக இடங்கள் நமக்கே சொந்தம். இவைகளை அளக்க முடிவதில்லை. பேருந்து இருக்கைகளிலும், இன்ன பிற உட்காருமிடங்களிலும் ஒடுங்கி உட்கார்ந்ததில் ஒல்லியான உடம்புக்காரனாக இருக்கிறேன். இனி இதை ஒரு மரபணுச் செய்தியாக அடுத்த தலைமுறைகளுக்கும் அனுப்பச் சித்தமாகிவிட்டது உடம்பு. இனி வருவோரெல்லாம் எங்கும் உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதலை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான இடமே எனது தேவை. ஆனால நாம் இயங்க, உழல, சூக்குமமான இடங்கள் தாராளமாகத் தேவைப் படுகின்றன.

நம் சிந்தனைகள், கோட்பாடுகள், அன்பு, காதல், விருப்பு-வெறுப்புகள், சுதந்திரம், சுயமரியாதை போன்றவற்றை இந்த இடத்திலே சேமித்திருக்கிறோம். யாரும் இந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் நாம் இயங்குவதற்கு நெருக்கடியாகிவிடுகிறது; மூச்சு முட்டுகிறது. அது நம்மை இயல்பாக இருக்கவிடுவதில்லை. மலர்களும், புட்களும், வண்ணத்துப் பூச்சிகளும் தத்தம் இயல்பான இடங்களிலே இருப்பதில் தானே மிளிர்கின்றன? என் இடம் என்வசமிருப்பதினாலேயே நான் நானாகிறேன். நம் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பும், மற்றவர் இடங்களைப் புரிந்துகொள்வதில் தானே இருக்கிறது?

நட்பும், காதலும், திருமணமும் இந்தப் பிரத்யேக இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான அனுமதிச் சீட்டுக்கள் இல்லை என்பதை நீ அறிவாய். ஆனாலும் சில நேரங்களில் நம் இடங்களை இவைகளின் (நட்பு, காதல்) பொருட்டு விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று சிறுபிள்ளைத்தனமாக ஏங்குதலும், கோபித்துக் கொள்ளுதலும் இயல்பே. ஆனால்...

நான் உன்னை முழுமையாக நேசிக்கிறேன். உனக்கே உனக்கான இடத்தை அங்கீகாரம் செய்கிறேன்; அதை மதிக்கிறேன்.

தோழமை என்பது இதுதானே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

திகட்டல்

நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா? ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு. இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டில...