மகிழ்ச்சியான தருணங்களை அவை நிகழும்போது நான் அனுபவிப்பதில்லை. கிடைக்கும்பொழுது ஆனமட்டும் புல்லை விழுங்கிவிட்டுப் பின்னால் அசைபோடும் மாடு போலச் சில தருணங்களைச் சுவைக்காமல் விழுங்கிப் பின்னால் ஒரு தனியான பொழுதில் எல்லாவற்றையும் மீட்டு நினைவுகளைச் சுவைப்பதில் மகிழ்ச்சி. அப்படியே நேசத்தோடு கழித்த நல்ல பொழுதுகளையும் விழுங்கிவிடுகிறேன். இதை நினைவிலிருந்து மீட்டெடுப்பதில் துளியும் மகிழ்ச்சியில்லை இப்போது. நீ புறப்பட்டுப் போனபின் சுவாசக் காற்றுப் பிரிந்த வெறும் கூடு போல உன்னுடன் புழங்கிய இடமெல்லாம் உயிரற்றுக் கிடக்கிறது.
முன்னாளில் பேசிய கடும் வார்த்தைகளை விடுத்து வாஞ்சையுடன் இன்னும் அன்பைப் பரிமாறியிருக்கலாம் - இனி அதற்கான வாய்ப்பு என்று கிடைக்குமோ...சிறுபிள்ளைத்தனமான கோபங்களை விடுத்து நம்மிடையே பேசிக்கொள்ளாத அந்தப் பொழுதுகளை அன்பான வெற்றுப் பேச்சாலேனும் நிரப்பியிருக்கலாம். இந்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுவிட்டு, கையசைத்து வழியனுப்பும் ஒரு மணிநேரப் பொழுதில் எவ்வளவுதான் நாம் செய்துவிட முடியும்? பிரிவையும் விட இந்தத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மேலும் துயரைத் தருகின்றன.
காலம் நின்றுவிட்டதாய்த் தோன்றினாலும் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன - இவ்வுலகம் அவசர கதியில் இயங்கும் ஒன்று. அம்மாவைக் காணாமல் அழும் பிள்ளைக்குப் பொம்மைகள் கொடுத்து கவனத்தைத் திருப்புவது போல இனி வேறு பல விஷயங்களில் மனத்தை ஆழ்த்துவதில் துயரம் மறக்கும். ஆனால் என் மனத்தில் நீ இட்ட அன்பின் வித்து வேரூன்றித் தழைத்துச் செடியாய், மரமாய் வளரும். பின்னொரு நாள் நிழலும், பறிக்கப் பறிக்கத் தீராத கனிகளும் கொடுக்கும்.
என் அன்பான "ரெட்டை வால்" சகியே! போய் வா. நாம் மீண்டும் சந்திக்கும் வரை இவ்வன்பை அடைகாத்திருப்பேன்.