முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ....ண்ட இடைவேளைக்குப் பின்

இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது - வயதும் ஏறிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பல பொருட்களை வைத்து இதில் திணிக்க வேண்டியுள்ளது - மிகவும் ஆயாஸமாக இருக்கிறது. ஒன்றை அமுக்கித் திணிக்கும்போது இன்னொன்றோ, பலவோ அந்தப்பக்கம் பிதுங்கி வெளியேறி விடுகிறது. ரொம்பப் பிரயத்தனம் செய்து ஒரு மாதிரி கட்டும் நிலைமைக்கு வந்தால், கயிறு பற்றவில்லை, இல்லையென்றால் கையில் இருந்து வழுக்குகிறது. சரி, சில சாமான்களை விட்டு விடலாம் என்று கட்டப் புறப்பட்டால், மனது விட்டதையே நினைத்துச் சலிக்கிறது. நொந்துபோய்க் கொஞ்ச நாள் சும்மா விட்டால் சாமான்கள் கிடந்து எங்கும் இறைகிறது - இதைச் சேர்த்துப் பொறுக்குவது பெரும்பாடு. கவனம் சிறிதே தவறினாலோ, அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைதான்.

வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும், அதன் போக்கின் திசைதிருப்பிகளாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் தெளிவாக இலக்கு தெரிந்தாலும், நான் அதன் பக்கமாகத் திரும்ப துடுப்பை ஒருபக்கம் துழாவுகிறேன், விதி தன் துடுப்பை எதிர்ப்பக்கம் துழாவி, போக்கை மாற்றுகிறது. இலக்கை எட்டுவதை விட, பிரயாணத்தை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் நாட்கள் அதிகம் ஓடுகின்றன என்று தெரிகிறது.

இந்த வருடத்தில் நான் செய்ய நினைத்தவை( டாப் - 5), மற்றும் அதன் நிலவரம் கீழ்வருமாறு:

1. நேரத்தோடு அலுவலகம் வந்து நேரத்தோடு வீடு போய்ச் சேர்வது : - காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு வரப் பழகிக்கொண்டேன். ஆனால் நினைத்தபடி வீடு போய்ச்சேர முடியவில்லை
2. பண்டிகைகள், பிறந்தநாள் மாதிரி நாட்களில் குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் இல்லங்களுக்குச் சென்று சமயம் செலவிட வேண்டும் என்று:- சென்ற புத்தாண்டின் போது 2 கிலோ இனிப்பு வாங்கிகொண்டு ஒரு குழந்தைகள் காப்பகத்திற்குப் போனால், குழந்தைகளை விளையாட வெளியே அழைத்துச் சென்றிருந்தனர். கொஞ்சம் நன்கொடையும், இனிப்பும் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அதற்கப்புறம் பண்டிகை நாட்களில், வீட்டில் "கவுந்தடிச்சுப்" படுத்திருந்தேன்.
3. இருக்கும் புத்தகங்களைப் படித்துத் தீர்க்காமல், மேலும் புத்தகங்கள் வாங்கிச் சேர்ப்பதில்லை என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன் :- இதை இந்தமாதம் வரையில் "அடுத்த மாதம் முதல்" என்று தள்ளிப் போடு, நிறையப் புத்தகம் வாங்கிவிட்டேன், சிலவற்றை இன்னும் திறந்தே பார்க்கவில்லை.
4. புதிய மொழி ஒன்றைக் (ஜெர்மன் அல்லது பிரஞ்சு மொழி) கற்க வேண்டும் என்று நினைத்தேன் - அப்புறம், சமஸ்கிருதத்தில் கரைகண்ட என் அப்பா வீட்டில் இருந்தும், அவரிடம் ஒன்றும் கற்றுக் கொள்ளாமல் வெளியில் என்ன கிழிக்கப்போகிறேன் என்று விட்டுவிட்டேன். இன்னும் அப்பாவிடம் அரைமணி உட்கார நேரம் கிடைக்கவில்லை.
5. வாழ்க்கையில் ஒரு நேர்த்தி வர யோகாசனம் பயில வேண்டும் என்று நினைத்தேன். காலை முதல் மாலை வரை அலுவலக குளிர்பதனத்தில், இருக்கையை அரக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு, வீட்டில் டிவியின் முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி குந்திவிடுவதால், சிலநேரம் பனியன் போட்டுக்கொள்ளும்போது கூட தசை பிடித்துக்கொள்கிறது.RSI (Repititive strain Injury) யின் காரணத்தால், நல்ல புத்தி வந்து, கடந்த நான்கு மாதங்களாக யோகாசனம் பண்ணுகிறேன்.

இனி அடுத்த வருடம் சொந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில், கொஞ்சமேனும் லோகோபகாரமாக ஏதாவது செய்ய எண்ணம். உங்கள் எல்லோருக்கும் வரும் புத்தாண்டு மேம்பட்டதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வாழ்த்துக்கள்.

வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ!

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க்கையில் பல நிகழ்வுகளுக்கிடையே ஒரு கட்டினைத் தேடும் முயற்சியை, தவிப்பை நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள் கண்ணன். வரும் புத்தாண்டில் உங்கள் முயற்சியில் இன்னும் சிறிது வெற்றியடைய வாழ்த்துக்கள். முழு வெற்றி என்பது கிட்டுவது சிரமம் என்றாலும் அந்த இலக்கை நோக்கிய நம் பயணம் அயராமல் தொடரவேண்டும் தான்.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி செல்வராஜ்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தனிமை, முதுமை, வெறுமை…

முன்பொரு முறை பார்த்திருந்தாலும், நேற்று மீண்டும் கண்ணில் தட்டுப்பட்ட இந்த ‘ஆவண’ப்படத்தைப் பார்த்ததும் நெஞ்சைப் பிசைகிறது. சிதிலமாகிக்கொண்டிருக்கும், தன்னைவிட வேகத்தில் வயதாகிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு நிழல் போல இங்குமங்கும் உலாவும் கிழவர். புத்தகங்களும், துண்டுக்காகிதங்களும், மடித்து ரப்பர்பேண்ட் கட்டிய வெள்ளைத்தாள்களும் எங்கும் இறைந்திருந்தாலும், அங்கிருக்கும் (பூட்டிய) அலமாரிகளிலும், அடுக்கிவைக்கப்பட்ட பல ரகமான பழைய பெட்டிகளிலும், மேசைப்புறத்தும், இருக்கைகளிலும், எங்கும் அதே — குறிப்புக்காகிதங்கள் செருகிய புத்தகங்கள், பலவிதமான துண்டுக்காகிதங்களால் நிறைந்த கோப்புகள், காகிதங்கள், காகிதங்கள்… உபயோகிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பொருட்கள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் — செருப்பு, பெட்டி, துணிகள், புத்தகங்கள், அலமாரி, சீப்பு, கடிகாரம், இத்தியாதி — இவையெல்லாம் நாம் போன பின்னாலும் இருக்கப்போகின்றன என்பது புதிய புரிதலான வினோதமாக இருக்கிறது. எனக்கு யாருமில்லை நான் கூட.. யாருக்கும் யாருமில்லை என்பது தான் நிதர்சனம். நாம் அனுபவிக்கும் வேதனைகளை நாம் தனித்தே நேரிடவேண்டியிருக்கிறது. முதுமை க...

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.  உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"  அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!" வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"  மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு) "இதை...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...