பண்டிகைகளில் எனக்குப் பிடித்தது நவராத்திரி. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பண்டிகையில் எனக்குப் பிடித்தது, பண்டிகைகள் வருவதை உணர்த்துவது - அதை ஒட்டி வீட்டில் செய்யப்படும் பக்ஷ்ணாதிகளே. சாதாரண நாட்களில் செய்யாத (ஏனாம்?) அருமையான தின்பண்டங்களை இந்த விசேடங்களின் போது தான் பண்ணுவார்கள். கிடைப்பதற்கு அரிதாக இருப்பதனால் தான் நான் இப்படி அலைகிறேன் என்று சொல்லுபவர்களின் வாயில் எங்கள் வீட்டு நெய்யப்பத்தை அடைப்பேன். பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகள் (உள்ளே இனிப்பு பூரணம் வைத்தது), கோகுலாஷ்டமி முறுக்கு, கார, மற்றும் வெல்லச் சீடைகள், கார்த்திகை தீபத்தன்று மேற்சொன்ன நெய்யப்பம், அவல், நெற்பொரி உருண்டைகள், காரடையான் நோன்பு அடை, இதெல்லாம் ப்ராசீனமான பண்டங்கள். இப்போதெல்லாம் தீபாவளி ஒரு cosmopolitan status அடைந்திருப்பதால், அன்று குலாப் ஜாமூன் என்கிற வடநாட்டுத் தின்பண்டம் எல்லாம் செய்கிறார்கள். ஆனால் வழமையாக இந்தச் சமயத்தில் வேட்டி சட்டையுடன்,கையோடு ஒரு சாக்கில் பெரிய கரண்டிகள் (ஜாரணி?) பொதிந்து எடுத்து வந்த ஒருவர் வீட்டில் தோன்றுவார். இவருக்கு அடுப்பை ஒழித்துக் கொடுத்து, கடலை மாவு, சர்க்கரை, நெய், முந்திரி, ஏலம், குங்குமப்பூ இத்யாதிகள் கொடுத்தால், ஜிலேபி, பாதாம் அல்வா, மிக்சர் முதலியன செய்து தந்துவிட்டு நடையைக் கட்டுவார். மீதி ஓட்டுப் பக்கோடா, ரவா லட்டு, மைசூர்பாகு மாதிரி ஐட்டங்களைச் செய்வதற்கு வீட்டில் போதுமான திறமை இருக்கும். இதற்கு முக்தாயமாக தீபாவளி மருந்து.
ஆனால், நவராத்திரியில் முக்கால்வாசி சுண்டல் தான் பண்ணுவார்கள் - இதில் இனிப்பாகச் செய்பவை, காரமாகச் செய்பவை என்று பிரிவுகள். கொண்டைக் கடலை, பட்டாணி, கடலைப் பருப்பு கார வகை; பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு இனிப்பு வகை. கையில் ஒரு மஞ்சள் துணிப்பையுடன் கிளம்பி தினமும் போன வீடுகளுக்கே போய் பார்த்த பொம்மைக் கொலுவே பார்க்கும் எங்கள் போன்ற பொடிசுகளுக்கு gun powder செய்து வைத்திருப்பார்கள். இதுதான் எல்லா நாளைக்கும். இது பொட்டுக் கடலை, சர்க்கரை சேர்த்து இடித்த பொடி - ஒரு பிடி வாயில் போட்டீர்களானால் மார் அடைக்கும். ஆனாலும் அதிலும் ஒரு சுவையே.
ஆக, இந்தத் தின்பண்டங்கள் போக, இச்சமயத்தில் நடக்கும் மற்ற சுவாரசியமான விஷயம் கொலுப்படிகள் கட்டி, பொம்மைகள் இருத்துவது. வீட்டில் இரண்டு brooke bond மரப்பெட்டிகளில் வைத்திருக்கும் பொம்மைகளை எடுப்பது முதற் கட்டம். என்னமோ எளிதென்று நினைக்காதீர்கள் - அப்போதெல்லாம் மண் பொம்மைகளே மிகுதி; இப்போது தான் paper pulp ல் நிறைய கிடைக்கிறது. வைக்கோல், பழைய துணி சுற்றி வைத்திருக்கும் இவற்றை ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும். அப்போது பெட்டிக்கு உள்ளேயிருந்து குதித்தோடும் எலிக்குப் பயந்தவர்கள் இந்த வேலைக்கு வராமல் இருப்பதே உத்தமம். இந்த எலிகளை அவைகளின் வீட்டில் இருந்து காலி செய்யும்போது அவை விட்டுச் செல்லும் rose கலர் எலிக்குஞ்சுகள் பார்க்க மிகவும் அழகு.
இப்படியாக ஒரு இராப்பொழுது கழியும். அதே நேரத்தில், வீட்டில் உள்ள மேஜை, பெட்டிகள், பலகைகளுக்கு வேலை வந்துவிடும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, கொஞ்சம் செங்கல் எல்லாம் சேர்த்து, நவீன architects வெட்கும் அளவிற்கு, ஒன்பது படிகள் கட்டுவார்கள். இதில் நானும் என்னுடைய consultancy ஐ வற்புறுத்தி ஏற்க வைப்பேன். இப்போதெல்லாம், வேலை முடிந்ததும் கழற்றி வைத்துக்கொள்கிறாற்போல் கொலு stand வந்து விட்டது. ஆனாலும், வீட்டின் தட்டுமுட்டு சாமான்களை வைத்துப் படி கட்டும் thrill இற்கு முன்னால் இதெல்லாம் waste என்பேன் நான்!
சரி, பொம்மைகளை எடுத்தாயிற்றா? இனி மெதுவாக, சுற்றி இருக்கும் துணிகளை அவிழ்த்து, ஒரு damage assessment செய்யவேண்டும். கிருஷ்ணனின் விரலில் ஒன்று உடைந்து உள்ளேயே விழுந்திருக்கும்; துர்கைக்கு மூக்கு இருக்காது;கிளிஞ்சல் பறவையின் இறக்கை ஒடிந்திருக்கும். இந்த உடைந்த பாகங்களை எடுத்து, quickfix கொண்டு இதை ஒட்டும் வேலை அடுத்தது. அங்கே படிகள் ஒருவழியாக ஆடாமல் நின்ற பிறகு, நல்ல வெள்ளை வேட்டியை மேலே விரித்து pin பண்ணினால், படி வேலை முடிந்தது. பேப்பர் மாலைகளால் அலங்காரம் அடுத்தது. பற்பல வண்ணங்களில் கிடைக்கும் இவைகளை நானா பக்கங்களிலும் தொங்கவிட்டு, நடுவில் கிளுகிளு பேப்பரில் செய்த பூப்பந்தை ஒரு பல்பின் மேல் சுற்றி, சாண்ட்லியர் மாதிரி நடுவில் தொங்க விடுவதுடன் அலங்காரம் முடிந்தது. (இதற்கு electrician நானில்லாமல் வேறு யாராம்?)
அடுத்தது பொம்மைகளைத் துடைத்து படிகளில் வைப்பது - இதில் நாம் சித்தாள் வேலை தான் செய்ய முடியும். எதை எங்கே வைக்கவேண்டும் என்று முடிவு செய்கிற மேஸ்திரி வேலை பெரியவர்களுக்கே உரித்தானது. ஆனால், நமக்கே நமக்கென்று ஒரு வேலை - கீழே park கட்டுவது. இதற்கென்று plastic ல் ஆன மிருகங்களின் பொம்மைகள் இருக்கும். வெளியிலிருந்து மண் கொண்டுவந்து, நவதானியங்கள் விதைத்து, நடுவே மிருக பொம்மைகள் வைத்து, ஒரு வனாந்தரம் மாதிரி பண்ண எனக்கு பிடிக்கும். இதன் நடுவில் ஒரு குளம் கண்டிப்பாய் உண்டு. இந்த நவதானியங்கள் முளை விடுவதைப் பார்க்க ஒரு ஆவல், இது காடு மாதிரி வளர்ந்தவுடன் கிட்டும் சந்தோஷம் தனி தான்.
இப்படியெல்லாம் involvement உடன் போய்க்கொண்டிருந்த இது இப்போது ஏனோ எனக்கு சோர்வே தருகிறது. எதற்கு strain பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அம்மாவிடம் கோபித்துக்கொண்டேன் - நான் ஒரு நாள் வெளியே போய்விட்டு வருமுன் படியெல்லாம் கட்டி முடித்ததற்கு. ஆனால் அவர்களின் enthu குறையவில்லை. இப்போது என் பங்கை என் அக்காள் மகன் செய்கிறான். இவனுக்கும் அம்மாவிற்கும் நேற்று சண்டை - இவர்கள் கொலு முன் போடும் (பாதாம் கொட்டை, காப்பிக்கொட்டை, பருப்பு வகைகள், பூ , கலர்ப் பொடி முதலியவற்றின் துணையுடன்) grafitti யின் outline சரியாக வரவில்லையென்று. பின்னெ, தலைவர் பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆச்சே! நான் சுண்டல் கூட enthu வாகச் சாப்பிடுவதில்லை.
கருத்துகள்
கண்ணா நீங்க ஒரு புண்ணியகாரியம் பண்ணனும்னு நெனச்சா என்ன மாதிரி முருக்கு, காரத்துல்ல எண்ணெய், கொழுக்கட்டைல தேங்காய், அதுல்ல நெய்னு... குறைசொல்லாமல், அம்மாவையும், மருமகனையும் அவங்க இஷ்டப்படி கொலுவைக்க, பதார்த்தம் பண்ண விடுங்க:)
நான் இப்போது வீட்டில் செய்வது ஒரு token protest மட்டுமே. இதற்கு பயந்தாவது mega வாக ஏதாவது செய்யாமல் இருப்பார்கள். கூட மாட வேலை செய்ய நான் இருந்தால் தேவலை தான் - ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது.
மற்றபடி எல்லாருக்கும் நான் சொல்லிக் கொள்வது:
அதிமேதாவி மாதிரி நான் நவராத்திரி பற்றி இவ்வளவு late ஆக பதிந்துவிட்டு, தமிழமணம் பக்கம் போனால் இதைப் பற்றியே ஒரு 3 பதிவுகள் ஏற்கெனவே வந்துவிட்டிருப்பது தெரிந்தது! பொறுக்கவும்.
அதில் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்தது!
http://agaramuthala.blogspot.com/2004/10/blog-post_17.html
நவராத்திரி குறித்த உங்கள் நினைவலைகள் பிரமாதம். பாராட்டுகள்.
எனது நினைவலைகளில் நான் குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்களைத் தாங்களும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து, அனுபவப் பதிவுகள் ஒரே மாதிரியாகப் பலருக்கும் இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. இதுவே, ஆட்டோகிரா·ப் போன்ற படங்களின் வெற்றிக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
சுந்தர்