முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...

கணினியுடன் இப்போதெல்லாம் ரொம்ப சிநேகம் பாராட்டுகிறேன். கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு RSI வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்)


இருந்தும், தமிழில் தட்டச்சுவதைத் (இப்போதெல்லாம் பழைய காலம் மாதிரி யாராவது 'எழுது'கிறார்களா?) தவிர்க்க இயலவில்லை. தமிழ் தட்டச்சுதலும், படித்தலும் நன்றாய் தான் உள்ளது. மட்டுமல்லாமல், உணர்ச்சியற்ற இந்த இயந்திரங்களுடன் என் வாழ்க்கையில் ஒரே முறை வரும் இளமை முழுவதையும் செலவழித்துவிட்டு நிற்கிறேன் - மென்மையான உணர்வுகள் மரத்து, ரசனை மங்கியிருக்கும் நிலையில், என் கணினி தமிழ் கற்றுக் கொண்டு, நான் தொலைத்ததை மீட்டுக் கொடுப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இதனாற்றான் (நல்லா எலக்கணமாதான் இருக்கு... உக்கும்...) இதுநாள் வரை அந்நியமாய்த் தெரிந்த என் கணினியும் இப்போது என்னிடம் தோழமை பாராட்டுவது போலத் தெரிகிறது. இதை நான் வெளியில் எங்காவது பார்த்தால், இனி நிச்சயம் ஒரு பரிச்சியப் புன்னகைப்பேன்.

இது நிற்க.

வலைப்பதிவு புதிதாய் ஆரம்பிப்போர்க்குக் கட்டளைகள், அங்கு எழுதக் கூடியது, கூடாதது, அதன் வடிவம், உட்பொருள், மற்ற வலைஞர்கள் கையாளும் நடை, உத்தி, மற்ற சம்பிரதாயங்கள் குறித்து வலையில் மேய்ந்து தெரிந்து கொண்டேன். அதில் எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, தேவையில்லாததை உடன் மறந்துவிட்டேன். இங்கு எனக்குத் தோன்றுவதை எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறேன். எழுதும் பொருள் எப்படியானாலும், இப்போதைக்கு தினமும் ஏதாவது எழுதினால் அதுவே போதும் என்றும் இருக்கிறேன். தமிழில் ஏறக்குறைய எல்லோருடைய வலைப்பதிவுகளுக்கும் ஒரு trip அடித்துவிட்டேன். (அதில் எனக்குப் பிடித்த பதிவுகளில் சில வலைச்சுட்டிகளை, இடது பத்தியில் இடலாம் என்றிருக்கிறேன்) சீனியர்களான அவர்கள்களுக்கெல்லாம் ஒரு அரைமண்டி நமஸ்காரம் போட்டு ஆரம்பிக்கிறேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன். *** மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...