முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்திய ஐடி புரட்சியில் என் பங்கு - ஓர் ஐடி குமஸ்தக் குஞ்சாமணிக் குளுவானின் வாக்குமூலம்

கணினியியல் முதுகலைப்படிப்பின் பகுதியாக பாடம் சம்பந்தப்பட்ட திட்டப்பணி (project) செய்யவேண்டி இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) மீத்திறன்கணினி மையத்தின் (SERC) தலைவராக இருந்த (அந்தப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்) பேராசிரியர் ராஜாராமன் அவர்களை நண்பனின் உதவியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளங்கலை கணினியியல் படிப்பில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுதான் பாடப்புத்தகமாக இருந்தது. பற்பல ஆய்வு மாணவர்களை முனைவர்களாக்கிய பெருமை வாய்த்தவர். அப்படியொரு மாஜி மாணவரான ஒரு முனைவர் / பேராசிரியரை அழைத்து என்னைக்காட்டி "இவனைச் சேர்த்துக்கொள்" என்றார். ஆசிரியர் கையால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கும் அந்த மாணவப் பேராசிரியர் என்னை ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காமல் சேர்த்துக்கொண்டார். ராஜாராமன் மென்மையான மனிதர்; மிகவும் அன்பாகப் பேசினார். என்னால் மறக்கமுடியாத  முதல் சந்திப்பு  அது. இன்றைக்குப் பிழைப்பு ஓடுவது அவர் போட்ட பிச்சை. இளங்கலை / முதுகலை என்று ஐந்தாண்டுகளில் 'படித்ததை'விட அந்த ஒன்பது மாதங்களில் நிறையக் கற்றுக்கொண்டேன். ஐந்து மாதங்களில் பல்கலைக்கு வேண்டிய வேலை முடிந்...

விறகுகள், மண்ணெண்ணெய், அப்புறம் கொஞ்சம் சாணி - நினைவலைகள்

உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் சித்திரங்கள் பகிரப்பட்டன. அதிலே சாணி தட்டும் பெண்ணின் படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது சிறுவயது நினைவுகளைக்கிண்டிவிட்டது. Inspired by @drvivekm 's #WomenatWork series, digging thru my archives to add to it 3: cow dung cake maker, #Kolkata pic.twitter.com/R8IhX4p9Sd — Arati Kumar-Rao (@AratiKumarRao) March 12, 2017 கூட்டுக்குடும்பத்தில் பாட்டியின் பராமரிப்பிலேயே சமையலறை இருந்தது. மாமா, பெரியம்மா, மற்றும் அம்மா ஆகியோர் வேலைக்குப் போய் அவரவர் பங்குகளைக் கொடுத்து ('என்னுடையதை நீ எப்படி எடுக்கலாம்?' என்று சோப்புக்கும் பற்பொடிக்கும் சண்டை போக) வீட்டுச் செலவு நடந்துகொண்டிருந்தது. இப்படியாக, உழைக்கும் பெண்களின்சித்திரம் சிறுவயதிலேயே எனக்குள் பதிந்துவிட்டிருந்தது. வீட்டுவேலைகள் போக பாட்டி வரசித்தி விநாயகர் கோயில் வாசலில் நின்று யாருடனேனும் பேசிக்கொண்டிருப்பாள். பேசிக்கொண்டிருந்தாலும் செட்டிபாளையம் சாலையில் போகும் மாட்டுவண்டிகளின் மேல் பாட்டி கவனமாக இருப்பாள். மாடுகள் சாணிபோட்டால் அதை ஓடிப்போய்ச் ...

101 கனவுகள் - 1. நேற்றை கனவு

யாரோ ஒரு பையன். அவனுக்கு நான் பூகோளப் பாடம் சொல்லிக்கொடுத்தில் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிட்டான். எனக்குக் காட்டுவதற்காக அவன் 'ரிப்போர்ட்'டை என்னிடம் கொடுத்தான். மீனாவின் கிறுக்கலுக்காக நான் அவளுக்குக் கொடுத்த 80 பக்க நோட்டு மாதிரி இருந்தது. பக்கங்களைப் புரட்டுகிறேன் - இவன் எவ்வளவுதான் வாங்கியருப்பானென்று பார்ப்பதற்காக. என்னவோ குறிப்புகள், கிறுக்கல்கள் என்று பக்கங்கள் தீர, மதிப்பெண் பட்டியல் வரவேயில்லை. அப்போது யோசித்தேன்: "இதுவே கனவு. இதிலே நாம் 'நினைத்த' மதிப்பெண் இருப்பதாக வரவேண்டுமெனில் கனவினின்றும் வெளிவர வேண்டும். அதனால் அந்தப்பக்கம் எனக்குக் கிட்டப்போவதில்லை. மேலும் உயரத்திலிருந்து விழுதல் போல இந்தத் தீராப் பக்கங்ககளைப் புரட்டுதல் என்பது கனவினின்றும் மனம் விழித்துக்கொள்ளச் செய்யும் ஓர் உத்தி" உடனே கண்விழித்து எழுந்துவிட்டேன்.

மருந்து

பெங்களூர் ஜெயநகர் மூன்றாம் பிளாக்கின் சாலைச் சந்திப்பில் (இங்கே எல்லாமே 'சர்க்கல்' தான்) நாகார்ஜுனாவுக்கும் மூலைப் பெட்டிக்கடைக்கும் நடுவே இருந்தது மஞ்சுநாதா (என்று நினைக்கிறேன்) ஃபார்மசி. பழைய பெயர்ப்பலகை. கடையினுள்ளே அப்போத்திக்கரிகள் காலத்து மேசை, கண்ணாடி/மரக்கூண்டுகளுக்குள் மருந்துகள் என்ற அமைப்பு. மேசையின் அருகிலே இருக்கையில் அறுபதை நெருங்கும் வயதுடையவர் என்று நாம் ஊகிக்கக்கூடிய பெரியவர். மெலிந்த தேகம், அதிக உயரமில்லை, வெளுத்த தலை முடி, சின்னதாக கிராப் வைத்திருப்பார். கையில் விரித்து வைத்த ப்ரஜாவாணி பத்திரிகையை படித்த வண்ணம் இருப்பார். ஒரு முறை அவசரமாக மாத்திரை வாங்க வேண்டியிருந்ததில் மருந்தகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தக் கடை தென்பட்டது - வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறதே என்று கடையில் மருந்தின் பெயரைச் சொல்லிக்கேட்டேன். பத்திரிக்கையினின்றும் தலையை எடுத்து சிரித்துக் கொண்டே சொன்னார் "இங்கே கிடைக்காது (அருகில் உள்ள பெரிய) மருந்தகத்தில் கிடைக்கும்". அப்போதிருந்த அவசரத்தில் ஓடிவிட்டேன். ஆனால் அங்கே ஒரு மருந்தகம் இருப்பதை மனம் குறித்துவைத்துக் கொண்டது. அப்ப...

அழகாயிருப்பது

உலகின் புகழ்பெற்ற படைப்பாளிகள் சிலரின் தினசரி ஒழுங்குகளை இங்கே கொடுத்திருக்கிறார்கள் . நானும் இம்மாதிரி ஏதாவதொன்று ஆக ஆசைப்படுவதால் ஆர்வத்துடன் படித்தேன். இதிலே எல்லாவற்றையும் விட என் கவனத்தைக் கவர்ந்தது விக்டர் ஹியுகோவின், தினசரி முடிதிருத்துபவரிடம் போகும் வழக்கம். கடந்த இரண்டாண்டுகளில் முடி வெட்டிக்கொள்ளப் போனால் ஒன்று, இரண்டு என்று மண்டையைக் காட்டி இலக்கம் சொல்வது பழகியிருந்தது. இயந்திரத்தில் அந்த இலக்கத்துக்கேற்ற வில்லையைப் போட்டு மழித்தால் பத்து நிமிடங்களில் வேலை முடியும். உபரியாகப் பல வசதிகளும்: இரண்டு மாதங்களுக்கு முடிவெட்டிக்கொள்ள வேண்டியதில்லை;  தூங்கியெழுந்தவுடன் பரட்டைத் தலையை ஒழுங்கு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாமல் காற்சட்டையை இழுத்து மாட்டிக்கொண்டு உடனே பால் வாங்கவோ, மகளைப் பள்ளிக்கூடத்தில் விடவோ ஓடலாம்; பயணங்களில் சீப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியதில்லை; கண்ணாடி பார்க்க வேண்டாம்; இரவுப்பயணங்களில் தூக்கத்துக்கு நடுவே தலையைக் கோதி சரிசெய்ய வேண்டாம்; இப்படிப் பல... இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வீட்டிலே இதற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. ("ஏன் இப்படிக் கரண்டீட்டு வர்ற...

தமிழில் கிரந்தம் தவிர்ப்பது பற்றி...

தமிழ் எழுதுவதில் இயன்றவரை கிரந்தம் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இது தமிழ் வெறியினாலோ பிறமொழிக் காழ்ப்பினாலோ உந்தப்பட்டதல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி தமிழல்லாத மொழிகளின் பல சொற்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது பல்லாண்டுகளாக இயல்பாக, பையப்பைய நடந்தது - யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது தெரிந்ததே. இம்மொழியின் தொன்மையையோ, செம்மைத் தன்மையையோ, பிற பெருமைகளையோ முதன்மைப்படுத்தாமல், ஒரு தனித்தன்மை வாய்ந்த, (பிறமொழிகளைப்போலவே) நம் தாய்மொழி என்கிற அளவில், நாம் மறந்துவிட்ட தமிழ்ச்சொற்களை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், அவற்றை நம் புறக்கணிப்பினின்றும் மீட்கவேண்டும் என்பதே என் குறிக்கோள். கிரந்தத்தை ஒழித்தலே நம் கடன் என்று எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முனைவதில் எனக்குச் சில மனத்தடைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது. நாம் நம் பெயர்களைப் பெருமையோடு தாங்குபவர்கள்; தமிழ்ப் பெயர்களையும் பிற பெயர்களையும் பெயருக்குச் சொந்தக்காரர் எழுதுவது போலேயே எழுதவேண்டும் - அது கிரந்தம் கலந்ததானாலும்.  எழுத்துப்பிழைகளையும் ( இருப்பதாக நாம் கருதினாலும்...

வெண்பா வாரம்

மரபுக் கவிதைகள் மேலே புதிய ஆர்வம். யாப்பிலக்கணத்தைப் பார்த்தால் 'கோலம் வரைந்தபின் இடப்பட்ட புள்ளிகள்' என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் (கவிதை) மரபை மீற விழைந்தவர்களுக்கு யாப்பு ஒரு ஆயத்த வடிவமாகவும் (template) கவிதை எழுதுதல் என்பது இந்த வடிவத்திலே சொற்களைச் சொருகி நிரப்புவதாகவும் இருக்கிறது. இதிலே 'சிருஷ்டி முகூர்த்தத்தின் லயம் தப்பாமல்' மனம் ஓடிய திக்கெல்லாம் ஓடி கவிதையைப் பிரசவிக்கும் உன்னத 'முகூர்த்தத்திலே' கணக்கு பிணக்கு சுணக்கு என்று தொடைகளைத் தேடி ஆயத்தவடிவத்தில் சொற்களை எப்போது சொருகுவது? அப்படிச் செய்வது கவிதையை மலினப்படுத்திவிடாதா? பிரமிள் எழுதியது: "பாரதி, யாப்பு அணிகளை மனசில் சப்பி, பிறகு குந்தியிருந்து வார்த்தைகளை அங்கங்கே கொட்டிப்பிரித்து 'பாட்டுக்கட்ட' வில்லை. காளமேகமோ யாரோ ஒரு தடவை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோழ நாட்டுத் திருக்குடந்தையைச் சேர்ந்த முன்குடுமிக்காரனின் எச்சில் சோறு தன் இலையில் அவன் பிசகால் விழுந்ததற்கோ எதற்கோ சுர்ரென்று கோபம் வர, சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குதிர்ந்த வாயா புலையா - திருக்...

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

செயமோகனின் கட்டுரையை முன்வைத்து: செயமோகனின் கட்டுரைகளில் காணப்படும் பொதுமைப்படுத்தல்கள், தம் சொந்தக் கருத்துகளை முடிவான உண்மைகளாக முன்வைத்தல், பேசுபொருள் எதுவானாலும் தன்னையே முன்வைத்தல், தற்பெருமை பேசுதல், என்பவற்றைக் கடந்து, என்னால் அவர் கருத்துகளை சமனான மனநிலையில் அணுக முடிவதில்லை. எழுத்துச்சிக்கனமின்மையும் அவரைப் வாசிப்பதில் எனக்கொரு இடரே. இவற்றைத் தாண்டி இக்கட்டுரையை முழுதும் படித்து முடித்தேன். செயமோகனின் நீண்ட கட்டுரையில் சில விசயங்களில் எனக்கு நல்ல உடன்பாடு உண்டு. அதில் முக்கியமானது இது: “பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.” கட்டுரையின் பல விசயங்களில் விமரிசனமுண்டு என்றாலும், அதை மேற்சொன்ன - எனக்குச் செயமோகனை வாசிப்பதில் உள்ள பிரச்சனை - சார்ந்தது என்பதால் அதைச் சொல்லப்போனால் இது செய...

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு

மார்சல் து சாம்ப்பின் ' அருவி ஊற்று' (Marcel Duchamp - "Fountain") என்கிற கலைப்பொருள் 1917 ல் நியூயார்க்கி ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கலைப்பொருள் வேறொன்றும் அல்ல - ஆண்கள் கழிப்பறைகளில் நாம் பார்க்கும் சிறுநீரேந்தி தான் இது. இதை ஒரு கலைப் பொருளாக்க இந்தக் கலைஞன் செய்தது அதை வழக்கத்திற்கு மாறான ஒரு கோணத்தில் இருத்தியதும், தன் கையொப்பத்தை (புனைப்பெயர்) இட்டதும், அதற்கு ' அருவி ஊற்று' என்ற தலைப்பிட்டதுமே.  கலைசார்ந்த ஒரு சோதனை முயற்சியாகவும், முதல் உலகப்போரின் முடிவில் ஐரோப்பாவில் தோன்றிய தாதாயிசம் என்னும் எதிர்கலையியக்கத்தைச் சார்ந்தும் இது புரிந்துகொள்ளப்பட்டது என்பது இணையத்தில் தேடினால் எளிதில் கிட்டிவிடும் தகவல்களே. (படம்: விக்கிபீடியா)  ***  1970-80 களில் (ஒரு தொன்மையான காலத்தைக் குறிப்பிடவோ, அதிரடியான தொடக்கத்தை இந்தப் பத்திக்குக் கொடுக்கவோ இந்த ஆண்டுகளைக் குறிப்பிடவில்லை) மனித எத்தனத்துடன் பராமரிக்கப்படும் மலப்புரையையே எங்கள் வீட்டில் உபயோகப் படுத்திவந்தோம். ஒரு சீமெந்து மேடைமேல் குத்தவைத்து உட்கார்ந்து கழிக்கும் மலம் கீழே விழுந்து ஒரு தளத...

சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்

நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம். யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொ...

’பருப்’பிசை

திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக...

எழவு

அதாகப்பட்டது , இவர் தன்னை சமூகப் போராளியாகவும், ஜனநாயக (பஹுஜன) விரோதியாகவும் காட்டிக் கொள்வதால், இவரின் பிரதி சந்தேகதிற்குரியதாகியும், அதற்கு இவர் பெற்ற புக்கர் பரிசானது இவர்தம் கருத்த சுருண்ட தலைமுடி மற்றும் செம்பொன் வண்ணக் கண்களைக் காட்டி மயக்கி வாங்கியதெனவும் ஆகின்றது தெரிந்ததே. இப்பவும் இவர் இந்தத் தகாத செயல்களைச் செய்வதில், இவரது தழுவிஎழுதும் படைப்புத் திறன் கூட பாதிக்கப்பட்டிருப்பது இவர் இன்னொரு புத்தகத்தைத் தழுவி எழுதாததிலிருந்து புலனாகிறது. மற்றபடி தழுவல் கொழுவல் சமாசாரங்களில் உண்மை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. ஆனால் விமரிசனங்கள் என்பன என்னைப் பொறுத்த வரையில் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை - அதாவது இந்த படைப்பாளியாகிய நபரைப் பற்றிய விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பது என்னுடைய இந்த சொத்தைப் பதிவிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் சொந்தக் காரியங்கள் சுமூகமாக நடக்கும் வரையில், எதைப்பற்றியும் தீவிரமான ஈடுபாடோ எதிர்ப்போ இல்லாத ஜனநாயக அணுக்கப் போக்கு இருந்தால் படைப்புத் திறனும் பெருகும், நாடும் சுபிக்ஷமாக இருக்...

சும்மா ...

வேலைத் திரக்கிலையோ இல்லை அந்த சாக்கிலையோ  - தினமும் மறக்காமக் கைத்தொலைப்பேசியில கூப்பிட்டு “சும்மா தான் மச்சான் அடிச்சேன்” ன்னு சொல்லற நண்பன் அழைப்பையே எடுக்க முடியல. அப்புறம் கூடடைந்து குஞ்சு குளுவான்களோட குலாவறதுல இன்ன பிற நட்புகள், சொந்தங்கள் யாருக்கும் ஒரு தொலைபேசியோ கடுதாசோ கூடப் போடுறதில்லை. இதுகூடப் பரவாயில்லை - பேருந்து நிலையங்கள், இல்லை பேரங்காடிகளின் முன்னால நடந்து போறவன நிறுத்தி கடன் அட்டை விக்கவோ, நிதி திரட்டவோ வேண்டி ‘எப்படியிருக்கீங்க இன்னைக்கு?” ன்னு கேக்கிறவன் கிட்டக் கூட ‘நான் அவசரமாப் போறேன்’ ன்னு சொல்லாமச் சொல்லி... இப்படி மனுசங்க கூடப் பேசறதுக்குண்டான வாய்ப்புகளை எல்லாம் விட்டிட்டு, புது ப்ளாகு மட்டும் நெறையத் திறந்து, ட்விட்டர் அக்கவுண்டு வைச்சு என்னத்தப் பண்ண? Posted via email from Kannan's posterous

கட்டற்ற...

இந்த வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து இன்னொரு முறை வாழ நேர்ந்தால் என்ன செய்வேன்? என்று கேட்டால் 'ஒண்ணையும் மாத்த மாட்டேன்' என்று ஒரு புனைச் சுருட்டும் காட்ட மாட்டேன். அசட்டுத் தனங்களின், ஏமாற்றங்களின், விரக்திகளின், தணியா வேட்கைகளின், மற்றும் இந்தமாதிரி பலவற்றின் தொகுப்பாகவே தெரிகிறது வாழ்க்கை. நம்மைப் பற்றிய நமதானதும் பிறரதுமான எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதே பக்குவப்படலின் ஒரு முக்கிய அலகாகத் தெரிகிறது இப்போது. இந்த அனுபவ ஞானத்தோடு இன்னொரு முறை வாழ்ந்தால் தான் என்ன கேடு? ~~~ சுசீலா, சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, கண்ணாயிரம் பெருமாள் என்று நீளும் "மன நிழல்களின்" பாரம்பரியத்தில் நானும் மாதவக் கைமள், கோவிந்தன் நம்பூதிரி என்று (ஏனோ மலையாளப் பெயர்களே நினைவுக்கு வருகிறது) ஒன்றிரண்டை அவிழ்த்து விடுவோமா என்று யோசிப்பதுண்டு. நீரும் நெருப்பும் - இரண்டு எம்.ஜி.ஆர் - ஒருவன் முரடன், ஒருவன் சாது. இல்லை - தெரியாமல் "பாரம்பரியம்" என்று வந்துவிட்டது. "அதைக் காப்பியடித்து" என்று வைத்துக்கொள்வது தான் சரி. ~~~ மேலே தட்டச்சுவது கடினமாக இருக்கிறது - தூக்கம் வருகிறது. கொஞ...

எம்.டி.ஆர்

சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது. எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்...

இன்னுமொரு புத்தக மீம்

ராம்கி அழைத்ததும் நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன். 1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் விவரம் தெரிந்து படித்த முதல் நாவல். 2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்? பள்ளி நாட்களிலிருந்து. 3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது? பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை. 4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்? பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வ...

எழுத்து ஊக்கிகள்

எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடு த் ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்தது ம் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்க...

சுஜாதா

கவர்ச்சியானதொரு உரைநடையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். சமகாலத்திய பேச்சுவழக்குடன் துள்ளலும் எளிமையும் நேரடியான சம்பாஷணை வடிவமும் அதன் அம்சங்கள். விளைவு - தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் செல்ல விசாலமானதொரு புதிய வெளி கிடைத்தது. இதற்கு இன்னும் புதிய சாத்தியங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன். நன்றியும் அஞ்சலிகளும் .

வாஷிங் மஷின் காதை

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு. ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின் மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு. எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத் தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா" அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு. அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும் ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது. இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட நாம புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும். (நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை...

சும்மா

வாரயிறுதிகளில் விடியற்காலையில் எழுந்தால் ஓய்வு நாட்களின் நீளம் கூடும் என்பது நண்பரின் பரிந்துரை. சும்மாயிருக்கும் இந்நாட்களில் இதைப் பின்பற்றுவதில்லை. காலை பத்து மணிக்கே எழுந்து காப்பியைக் குடித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மீண்டும் காப்பி குடித்து, மதிய உணவு முடித்து, சாயங்காலக் காப்பி குடித்து இரவுணவு உண்டு உறங்கப் போகும், ஒன்றும் செய்யாமல் இருக்கும் இத்தினங்களிலும் சாப்பாட்டு வேளைகளிலும், மற்ற பான வேளைகளிலும் ஆனதான ஒரு ஒழுங்கு இருக்கவே செய்கிறது. இடையில் டிவியில் இரண்டு தல்லிப்பொளிப் படங்கள், சுடோகு, லூயி லாமர், இணைய உலாவல். ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதில் இருக்கும் சோர்வு, ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. உண்மையில் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இப்படியாகத்தானே வாழ்க்கையைக் கழித்து, நேர உபயோகத்தின் நன்மைகளை உபன்யாசிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆசையில் மண்ணைப் போடுகிறது இந்த இரண்டாவது சோர்வு. முதலிலேயே ஒன்றும் செய்வதில்லை என்று சங்கல்ப்பம் செய்துகொள்வதில் உண்மையான ஓய்வு தினமாக மனம் அதை வரிந்துகொள்கிறது. வங்கியில் வேலை, கரண...