
கலைசார்ந்த ஒரு சோதனை முயற்சியாகவும், முதல் உலகப்போரின் முடிவில் ஐரோப்பாவில் தோன்றிய தாதாயிசம் என்னும் எதிர்கலையியக்கத்தைச் சார்ந்தும் இது புரிந்துகொள்ளப்பட்டது என்பது இணையத்தில் தேடினால் எளிதில் கிட்டிவிடும் தகவல்களே.
(படம்: விக்கிபீடியா)
***
1970-80 களில் (ஒரு தொன்மையான காலத்தைக் குறிப்பிடவோ, அதிரடியான தொடக்கத்தை இந்தப் பத்திக்குக் கொடுக்கவோ இந்த ஆண்டுகளைக் குறிப்பிடவில்லை) மனித எத்தனத்துடன் பராமரிக்கப்படும் மலப்புரையையே எங்கள் வீட்டில் உபயோகப் படுத்திவந்தோம். ஒரு சீமெந்து மேடைமேல் குத்தவைத்து உட்கார்ந்து கழிக்கும் மலம் கீழே விழுந்து ஒரு தளத்தில் குவியும். இந்தத் தளத்திற்கு வீட்டின் பின்னால் இருக்கும் சந்தில் இருந்து மலத்தை அள்ளுவதற்கு ஏதுவான ஒரு சாளரம் இருக்கும். இப்படிச் சேர்ந்த மலத்தை இந்தச் சாளரம் மூலம் தினமும் ஒரு குவளையில் அள்ளும் வேலை மாரியம்மாளுடையது. காலை யில் எட்டுமணியளவில் வெளியே இந்தத் தெருவில் இருந்து மாரியம்மாள் வீட்டில் இருப்போரை கூவியழைப்பார். அப்போது வீட்டிலுள்ளவர் யாரேனும் மலமேடையினின்றும் தண்ணீரை ஊற்றினால் ஒரு சீமாறு கொண்டு மலமிச்சங்களை மாரியம்மாள் கழுவி விடுவார். பத்துமணியளவில் மாரியம்மாள் ஒரு அலுமினியப் போசியுடன் வீட்டின் வாசற்புறத்தில் வரும்போது முந்தின நாள் சாப்பாட்டு எச்சங்க்களையும், நீரூற்றிவைத்த சோற்றையும் போடுவார்கள். இப்படியாக வேறு வீடுகளினின்றும் கிடைத்த பல பழையவைகளால் நிறையும் அந்தப் போசி. இது நான் 5 வயதிலிருந்து 10 வயதுவரை அறிந்த வழக்கம். அப்புறம் வேறு வீடு பார்த்துக் கொண்டு போனதும், அங்கே நாங்கள் பார்தேயிராத பீங்கான் கழிப்பறைகள் இருந்தது புதுவீட்டின் பெருமகிழ்ச்சி.
***
இப்படியான மலப்புரைகளை உபயோகிக்கும்போது இருக்கும் பிரச்சனைகள் பல. மலம் கழித்தபின் கழுவும் நீர் மலத்துடன் சேர்ந்து எப்போதும் இருப்பதால் அது உலர்வதற்கான வாய்ப்பு இல்லை. மற்றுமல்லாமல், கூட்டுக்குடும்பத்தில் பலரும் புழங்குவதால் மலக்குவியல் உயிர்ப்புடனே எப்போதும் இருக்கிறது. நாற்றம் ஒருபுறமிருக்க, ஈக்கள் மொய்த்து ஒரு பெரிய சுகாதாரக் கேடு குடிகொண்டுள்ள இடமாகிறது அது. மலப்புரை நிரம்பிவிட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை வெளியே போக்குவரத்து உள்ள சாலையின் ஓரமாக இருக்கச் சொல்லுவார்கள். இப்படியாகப் பேருந்துகளையும், தெருவில் போவோர் வருவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தெருவோரத்தில் நான் மலம் கழித்த நாட்கள் பல. விபரம் தெரிந்த பின்னால், வீடு மாறிய பிறகு பாட்டி வீட்டுக்குப் போனால் மலம், சிறுநீர் கழிக்காமலே இருக்க முயற்சி செய்வேன்.
***
அந்த நாற்றமும், பல வண்ணமயமான பீக்குவியலின் காட்சியும் இன்னும் எனக்குக் கொடுங்கனவுகளாக வருவதில் பல இரவுகளில் விதிர்த்தெழுகிறேன். சினிமாக் கொட்டகைகளின், பள்ளிக்கூடத்தின், உணவகங்களின், மற்றும் எல்லாப் பொதுவிடங்களிலும் காணக் கிடைக்கும் பராமரிப்பற்ற, நாற்றமும் கறையும் படிந்த பலப் பல கழிப்பறைகளும் கனவில் மாறி மாறி வருகின்றன. மலம் அள்ளும் சாளாரம் திறந்தே இருப்பதில் பின் சந்தில் திரியும் பன்றிகள் அவ்வப்போது மலத்தை உண்பதற்காகத் தலையை உள்ளே விடும்போது மேலெ மலமேடையினின்றும் திடுகிட்டிருக்கிறேன். இந்தக் காட்சிகளின், நினைவுகளின் பீதியில் மலத்தின், பொதுக் கழிப்பிடங்களின் மீதான அருவருப்பு கூடியே இருக்கிறது. எனக்கு ஒவ்வொரு நாளின் திட்டமிடுதலும் மலக்கழிப்பு சார்ந்தே இருக்கிறது. மலம் கழிக்காமல் வீட்டினின்றும் வெளியேறத் தயங்குகிறேன். அலுவலகத்திற்குத் தாமதமாகப் போவதும், வெளியூர் போக அதிகாலைப் பயணம் செய்யநேர்ந்தால் இரண்டு மணி முன்பாகவே எழுந்து மலம் கழிக்க முயற்சிப்பதும், பொதுவிடங்களின் மலக்காட்சிகளைத் தவிர்க்கும் பொருட்டே.
***
உலக மாந்தரில் 40 சதவிகிகம் பேருக்குச் சுத்தமான, பாதுகாப்பான, நீர்க்குறைபாடில்லாத கழிப்பிடங்களுக்கு வசதியில்லை என்பது நம் காலத்தின் பேரவலம். அதைவிடப் பேரவலம் கைகளால் மலம் அள்ளுவதும், அதைச் சுத்தம் செய்வதும். மாரியம்மாள் போன்றவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள் என்பது நாமெல்லாம் வெட்கித் தலை குனியவேண்டிய நிலை.
நோயால் இறந்துவிடும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு மலம் சார்ந்த சுகாதாரக்கேடு இரண்டாவது காரணியாக இருக்கிறது. இன்றும் சரிவர பராமரிக்கப்படாத, சரியாக அகற்றப்படாத மனிதக்கழிவுகளால் குடிநீரில் மலக் கலப்பு அதிகரித்துள்ளது (சுட்டிகள் ஏதும் இல்லை - கூகிளில் தேடினால் எளிதில் கிடைக்ககூடிய தகவல்களே)
முகநூலில் நூறுகோடி பேர் கணக்கு வைத்துள்ளார்கள் என்பதை விடவும் இருநூற்றைம்பது கோடி பேர் கழிப்பிடம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க, நாம் ஏதேனும் உடனடியாகச் செய்யவேண்டிய புள்ளிவிபரம். அதை கவனிக்காதவரை, முன்னேற்றம் என்பது பயனற்றதாகவே இருக்கும். மனிதனின் இன்றியமையாத இத்தேவையை நிம்மதியாகத் தீர்த்துக் கொள்வதே பெருஞ்செல்வச் செழிப்பு தருவதை விடவும் வசதியான வாழ்க்கை என்று நினைக்கிறேன்.
***
1917ல் பீங்கான் சிறுநீரேந்தி அதன் முதன்மைப் பயன்பாட்டை நிறைவுசெய்து எதிர்கலையியக்கத்தின்/கலாச்சாரத்தின் குறியீட்டுப் பயனை அடைகிறது உலகத்தின் ஒரு மூலையில். 1980ல் அதே உலகத்தின் மற்றொரு மூலையில் வீச்சமடிக்கும் குழம்புடன் நைந்துபோன சோற்றை உண்டு வாழ்வதற்காக சீமெந்துத் தரையினின்றும் மாரியம்மாள் கைகளால் மலம் அள்ளிப் பிழைக்கிறார்.
கலையென்ன, எதிர்கலையென்ன? தேங்காய்க் குலை
கருத்துகள்
Was looking to get in touch with you a few days ago.
could you drop me a line at
mathygrps at gmail dot com
Thanks Kannan