திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தொடங்கி முன்னிரவு வரை அலுவலக அர்ப்பணிப்பு. காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் இது தான் சாக்கு. வேறெதற்கும் நேரமின்றி வேறெதிலும் நாட்டமுமின்றி உழலும் பொழுதுகள் .இன்று பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும் சம்பாஷணைகளை பின்னொருநாள் நடத்த நேரும்போது உறுப்பினர் குறையலாம். அன்பை, கவலையை, உரிமையை, பரிவை வீட்டில் இப்போது நிகழும் சின்ன ஊடாடல்களுக்குள் புகுத்துவது கடினம்; சொல்லாதவை தேங்கி கனக்கும் மனம். எல்லாம் இருந்தமைந்த பின்பு வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று, அலை ஓய்ந்தபின் கடலிலே குளிக்கும் ஆசை. மறந்துவிட்ட நண்பனின் திருமண அழைப்புக்கு மன்னிப்பு மடலேனும் எழுதலாமே என்று தோன்றும் போது வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு. இதுவும், தாடியில் தென்படும் நரைகளுமே ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின் அத்தாட்சிகள். தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை டிவி முன் குத்த வைத்து, 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக வாரயிறுதி வாரயிறுயாய்த் தீரும் வாழ்க்கை.
கண்ணன் தட்டினது!