முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நெறிப்படுத்தும் நட்பே,

என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே!

பெங்களூர் டயரி - 2

கடைசியில் நானும் ஒரு அகலப்பாட்டை (Broadband) இணைப்புக்கு மனுப்போட்டுவிட்டேன். ட்ராயின் (TRAI) விதிமுறைப்படி குறைந்தபட்சமாக 256 Kbps திறன் உள்ள இணைப்பே அகலப்பாட்டை இணைப்பு. ஆனால் இந்தச் சேவை வழங்கிகள் 48 Kbps திறனையே அகலப்பாட்டை என்று கூவி விற்கிறார்கள். இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு டயல்-அப் (Dial-up) முறையில் முக்கி முக்கி 10 Kbpsஇற்கும் குறைவான திறனை அனுபவித்தவர்களுக்கு 48 கொடுத்தாலே ராஜபாட்டை. பாரத் சஞ்சார் நிகமின் (BSNL) இணைப்புத்திறன் பற்றிப் பரவலாக நல்ல கருத்தே நிலவுகிறது. இப்போது மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு 256 Kbps என்ற திட்டம் வந்தபின்னால் தினமும் மூவாயிரம் மனுக்கள் அகலப்பாட்டை இணைப்புக்காய் இவர்கள் பெறுகிறார்கள். மொபைல் (Mobile) தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அகலாஇணைப்புச் (Fixed line) சேவை வழங்கிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இம்மாதிரி தரை (Land Line) இணைப்புக்களை மொபைல் இணைப்புக்கள் என்றோ எண்ணிக்கையில் மிஞ்சி விட்டன. அதுவும் அடிப்படையான தொலைபேசும் சேவைகள் மட்டுமல்லாமல், குறுஞ்செய்திகள், படக்குறுஞ்செய்திகள் (SMS, MMS) என்று பற்பல சேவைகள்களை மொபைல் இணைப்பு வழங்கு...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கோபச் சுழற்சி

மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது. இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது. இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறத...

என் தமிழ் எழுத்து மேம்பட...

"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார் பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது. என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது. சின்...

Procrastination

மனம் பார்க்க விரும்புவதையே கண் பார்க்கிறது. கொட்டை எழுத்தில் வருமான வரி Returns சமர்ப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு என்று இந்தச் செய்தித் துணுக்கில் படித்த போது, விபரங்களையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். அப்படிப் பார்த்திருந்தால் அந்நீட்டிப்பு குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு மட்டுமே என்ற உண்மை தெரிந்திருக்கும். இப்போது கடைசித் தேதியைத் தவறவிட்டாயிற்று. எல்லாம் ஒரு மெத்தனம் தான் - என்ன ஆனாலும் ஒரு மாதத்திற்காவது இதை நீட்டிப்பார்கள் என்று. வருமான வரியைச் சரியாகக் கட்டியும், உரிய நேரத்திற்கு இதைச் சமர்ப்பிக்காததில் அபராதம் கட்ட வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று! எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்...

ஒரு வாழ்க்கைக் குறிப்பு

திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தொடங்கி முன்னிரவு வரை அலுவலக அர்ப்பணிப்பு. காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் இது தான் சாக்கு. வேறெதற்கும் நேரமின்றி வேறெதிலும் நாட்டமுமின்றி உழலும் பொழுதுகள் .இன்று பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும் சம்பாஷணைகளை பின்னொருநாள் நடத்த நேரும்போது உறுப்பினர் குறையலாம். அன்பை, கவலையை, உரிமையை, பரிவை வீட்டில் இப்போது நிகழும் சின்ன ஊடாடல்களுக்குள் புகுத்துவது கடினம்; சொல்லாதவை தேங்கி கனக்கும் மனம். எல்லாம் இருந்தமைந்த பின்பு வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று, அலை ஓய்ந்தபின் கடலிலே குளிக்கும் ஆசை. மறந்துவிட்ட நண்பனின் திருமண அழைப்புக்கு மன்னிப்பு மடலேனும் எழுதலாமே என்று தோன்றும் போது வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு. இதுவும், தாடியில் தென்படும் நரைகளுமே ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின் அத்தாட்சிகள். தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை டிவி முன் குத்த வைத்து, 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக வாரயிறுதி வாரயிறுயாய்த் தீரும் வாழ்க்கை.

குழந்தை மனசுக்காரன்

'மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித் தர வேணும் தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடனாண்டே ! ' (கண்ணன் என் ஆண்டான்) ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது) இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார். ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள...

பிலாக்கணம்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது. பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்... மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன். ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்) வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை...

செத்த பாம்பு

நேற்று இரவு பொதிகையில் 'அலசல்' நிகழ்ச்சியில் அசோகமித்திரன் செவ்வி. 'அந்த'க் கேள்வியும் கேட்கப்பட்டது. ஏதோ வழவழாவென்று எதையோ சொல்லிவைத்தார், பாவம். நாய்ப் பேச்சிற்குப் பிறகு ஜெயகாந்தன் நிலைமையும் மோசமாகிவிட்டது. ஈழநாதன் ஜெயகாந்தனின் இந்தப் பேச்சை தூசு தட்டி எடுத்திருக்கிறார். ஜெயகாந்தனும் பாவம் தான். இலக்கியவாதிகள் இன்று இரு தளங்களில் இயங்குபவர்கள் என்று தோன்றுகிறது. நிஜமான, சுய உணர்வுடன் இயங்கும் ஒரு சகஜ நிலைத் தளம். இன்னொன்று, அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலையை, ஒழிந்த நேரத்தில் பயிலவும், அதனால் மனநிறைவும் ஓய்வும் பெறவோ, பின்னர் அதையே வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யவோ இயங்குவது - ஒரு கற்பனைத் தளம். அவர்களின் வாழ்க்கை நெறி, சமூக விழுமியங்கள் பற்றிய பார்வைகளை அவர்கள் படைப்புக்களில் அவ்வப்போது முன்வைப்பார்கள். வாசகனுக்கு ஒரு எழுத்தாளனின் இவ்வகை வெளியீடுகள் அந்த எழுத்தாளன் சார்ந்துள்ள நெறிகளை, விழுமியங்களைக் குறித்த ஒரு பார்வையை, காலப்போக்கில் உருவாக்கிக் கொள்ளப் பயன்படுகிறது. இது வாசகன் உருவாக்கிக் கொள்ளுகிற கருத்தேயன்றி எழுத்தாளன் சார்ந்த நெறி குறித்த துல்லியமான கணிப்பன்று. ...

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன். *** மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்...

கோபாலி...

தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு. இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. "ஆகா", என்று தன்னை மறந்து ஒரு வார்த...

Save Darfur!

ருவாண்டாவிற்குப் பிறகு, அதை விட பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டர்ஃபூர் பகுதியில் நடந்து வருகிறது. சுடான் அரசின் பின்பலத்தில் ஜஞ்சாவீத் என்ற கும்பல் கருப்பின சாதாரணர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாலியல் வன்முறைக்கும், ஆண்கள், சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகிறார்கள். இதுவரையில் பாலியல் வன்கொடுமை ஒரு இன அழிப்பிற்கு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவது நான் கேள்வியுறாதது. கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும். ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் பார்த்த பிறகே எ...

கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...

ஒரு அருவமான மிருகத்தைப் பற்றிய பதிவிது. எல்லா மென்பொருள் நிறுவனங்கள் போலவும், எங்கள் நிறுவனமும் தகவல் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது - அலுவலகத்தில் அடையாள அட்டை மாலையை எப்பொழுதும் கழுத்தில் தொங்க விடவேண்டும் என்பதில் இருந்து, வக்கீல், மருத்துவரிடம் கூட ரகசியங்களைச் சொல்லக் கூடாது என்று முத்திரைத் தாளில் கையொப்பம் வாங்குவது வரை. இது நிற்க. அலுவலக வாயிலில் அடையாள அட்டை மாலையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ள மரியாதையுடன் நினைவுறுத்தும் காப்பாளரிடம் அரை விநாடியில் துளிர்த்த கோபத்துடன் சொல்கிறேன் "அய்யா, உள்ளே சென்றதும் நெற்றியில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்கிறேன் இந்த அட்டையை". அவர் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல வந்ததைப் பொருட்படுத்தாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே நுழைகிறேன். எல்லாம் உள்ளிருக்கும் மிருகம் படுத்தும் பாடு. "எனக்குத் தெரியாதா?" "இவன் யார் சொல்ல?" என்று பலகுரல்களில் அது தன் அதிருப்தியை உணர்த்துகிறது. பல மணிநேரம் கால்கடுக்க நின்று, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலையின் monotony தரும் அயற்சி எனக்குப் புரியவில்லையா? கொடுத்த வே...

புத்தக 'மீம்' - பட்டியல்

மதியின் அழைப்புக்கு நன்றி. புத்தகப் பட்டியல் போடுவது எனக்கு ஒரு உவப்பான பொழுது போக்கு. கைவசம் உள்ள புத்தகங்கள் : 100 - 120 படித்ததில் பிடித்தது: 1. பாரதியார் கதைகள் (உரைநடை, நம்முடன் நேரடியாகப் பேசுவது போன்றது, பாசாங்கற்றது. பாரதியை இன்னும் புரியவைத்தது, நெருங்கச் செய்தது. புதுச்சேரியின் மீது இனம் புரியாத காதல் வரச் செய்தது) 2. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - செ. யோகனாதன் - தொ. ஆ. (அற்புதமான கதைகள். வேறொரு புலத்தில்,என் மொழி பேசி, என் போல் உடுத்து என்னைப் போல் சிந்திக்கும் ஈழத்தமிழரை, அவரது சந்தோஷங்கள், அவலங்கள் முதலியவற்றை நான் அதுவரை அறிந்திராத அருமையான மொழியில் [தமிழ் இத்தனை இனமமையா!] அறிமுகப்படுத்தியது) 3. மானுடம் வெல்லும், வானம் வசப்படும் - பிரபஞ்சன் ("தமிழில் ஒரு நல்ல சரித்திர நாவல் இல்லையென்ற வசை இனி என்னால் ஒழிந்தது" என்று பிரபஞ்சனே சொன்னதை ஓரளவு ஒப்புக்கொள்ள வைத்தது. பாண்டிச்சேரியின் மீது மேலும் காதல் கொள்ளச் செய்தது) 4. வாடிவாசல் - சி சு செல்லப்பா (என்ன சொல்லுவதென்று தெரியவில்லை) 5. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா (சுஜாதாவின் படைப்புக்களிலேயே இதைத் ...

தலைப்புச் சுருக்கம் (சோதனை)

நீளமான தலைப்பினால் தான் ப்ளாக்கர் விளையாடுகிறதா என்று செல்வராஜ் சோதித்துப் பார்க்கச் சொன்னார். போன பதிவை இருமுறை பதிந்தும் முகப்புப் பக்கத்தில் காணவில்லை. தலைப்புத்தான் காரணமாயிருக்கும் என்றே தோன்றுகிறது. தனிச்சுட்டியையும் overwrite செய்துவிடுமோ என்கிற பயத்தில், என்னுடைய போன பதிவு இங்கே முழுதாக. (மூன்றாவது முறையும் ஒரே பதிவை இடுவதைப் பொறுப்பீர்களாக) மறுபடியும் மோட்டார் சைக்கிள் டயரி - ஒரு புத்தக வாசிப்பு அனுபவம் "A good traveler has no fixed plans, and is not intent on arriving." ~LaoTzu (570-490 BC)~. Travel என்பதைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பயணம் அல்லது பிரயாணம் என்பது ஒரு இலக்கை நோக்கிச் செல்வதான செயலைக் குறிப்பது போல இருக்கிறது. சுற்றுலா என்பது நம் பள்ளிக்கூட 'இன்பச்சுற்றுலா' வை ஞாபகப் படுத்தி அதன் கனத்தைக் குறைக்கிறது. நான் பெங்களூரில் இருந்து கோவை செல்வதற்கே நிறைய ஆயத்தங்கள் செய்வேன்; டிரெயின், பஸ் டிக்கட் கிடைக்கவில்லையென்றால் 'தொத்திக் கொண்டு' போக முனைய மாட்டேன். "Unreservedல் போகும் அனுபவமே தனி" என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து, தவிர்க்க...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...

பெங்களூர் டெஸ்ட் - சொதப்பல் - கங்குலி: சில எண்ணங்கள்

பாலாஜியின் இந்தப் பதிவுக்கு ப் பின்னூட்டம் கொடுக்கப் போய் நீண்டு விட்டதால் தனியாகப் பதிவிட்டுவிட்டேன். பெங்களூர் ஆட்டத்தின் சொதப்பல் முதல் இன்னிங்க்ஸ் தான். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி ஓட்டமெடுப்பதில் ஆஸ்திரேலியா உட்பட எல்லா அணிகளும் ஐந்தாம் நாள் ஆடுகளத்தின் ஒடுக்குகளில் படுத்துவிடும் நிலைமை புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனாலும், லக்ஷ்மண் சொதப்பல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, கும்ப்ளேவை நிறையப் பந்துகள் ஆட வைத்தார். இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, ஜெயசூரியா கடைசி ஆட்டக்காரரை அடைகாத்து நூறு ஓட்டங்கள் பக்கம் சேர்த்தாரே! அதுவல்லவா ஆட்டம்! ஷேன் வார்னை அனாயாசமாக ஆடின லக்ஷ்மண் கனேரியாவின் பந்தில் பூச்சி பிடித்தார். பல நாள் கழித்துப் புதிதாக அணிக்கு வந்த அர்ஷத் கானிடம் பம்போ பம்பென்று பம்பினார்! மட்டையடி முனையிலிருந்து தப்பித்தால் போதுமென்று ஓட்டம் பிடித்தார் - இந்தப்பக்கம் கும்ப்ளே அந்த யமகாதகர்களின் பந்துவீச்சை சந்திக்க நேரிடும் என்றபோதும்! தம்மை நிரூபிக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இவ்வாறாகக் கோட்டைவிட்டார். பழம் போன்ற அவரது காலப்பிரமாணத்திற்கும், மணிக்கட்டை சுழற்றி ஆடும் பிரத்த...

ஒரு டாகுமெண்டரி படமும், சில எண்ணங்களும்

எனக்குச் சில சனி-ஞாயிறுகள் உருப்படியாய் அமைந்துவிடுவதுண்டு. இப்படியானவொரு ஞாயிறு அன்று பெங்களூரில் Molecules creations ஏற்பாடு செய்திருந்த Voicing Silence என்ற சர்வதேச டாகுமெண்டரி திரைப்பட விழா வில் ஒரு மூன்றரை படங்கள் பார்த்தேன். பதினேழு படங்கள் இதில் திரையிட்டார்கள். விழாவின் முடிவில் மூன்று சிறந்த முயற்சிகள் என்று மூன்று படங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் பார்த்த படங்கள் : 1. La Bicicleta - கனடா (கியூபாவின் போக்குவரத்துப் பிரச்சனைகளை கனடா நாட்டுச் சைக்கிள்கள் தீர்ப்பது பற்றி) 2. Under Attack - ஸுவீடன் (வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு) 3. 46 Degree Root of the Wind - அர்ஜண்டீனா (Tehuelches பழங்குடியினரின் சாகும் மொழி, கலாச்சாரம் பற்றியது) 4. Baghdad Rap - ஸ்பெயின் (அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பில் சாதாரணர்கள் சிக்கிச் சீரழிந்ததை பல ராப் பாடல் வரிகள்மூலமாகவும், கோரமான சில படங்களின் மூலமாகவும் காட்டுகிறது) இவற்றில் La Bicicleta என்ற படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. Bicycles Crossing Borders என்ற கனடா நாட்டு அமைப்பொன்று பழைய சைக்கிள்களைப் பழுதுபார்த்து, மிகவும் சகாய விலையில் ஹவான...

நீ....ண்ட இடைவேளைக்குப் பின்

இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது - வயதும் ஏறிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பல பொருட்களை வைத்து இதில் திணிக்க வேண்டியுள்ளது - மிகவும் ஆயாஸமாக இருக்கிறது. ஒன்றை அமுக்கித் திணிக்கும்போது இன்னொன்றோ, பலவோ அந்தப்பக்கம் பிதுங்கி வெளியேறி விடுகிறது. ரொம்பப் பிரயத்தனம் செய்து ஒரு மாதிரி கட்டும் நிலைமைக்கு வந்தால், கயிறு பற்றவில்லை, இல்லையென்றால் கையில் இருந்து வழுக்குகிறது. சரி, சில சாமான்களை விட்டு விடலாம் என்று கட்டப் புறப்பட்டால், மனது விட்டதையே நினைத்துச் சலிக்கிறது. நொந்துபோய்க் கொஞ்ச நாள் சும்மா விட்டால் சாமான்கள் கிடந்து எங்கும் இறைகிறது - இதைச் சேர்த்துப் பொறுக்குவது பெரும்பாடு. கவனம் சிறிதே தவறினாலோ, அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைதான். வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும், அதன் போக்கின் திசைதிருப்பிகளாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் தெளிவாக இலக்கு தெரிந்தாலும், நான் அதன் பக்கமாகத் திரும்ப துடுப்பை ஒருபக்கம் துழாவுகிறேன், விதி தன் துடுப்பை எதிர்ப்பக்கம் துழாவி, போக்கை மாற்றுகிறது. இலக்கை எட்டுவதை விட, பிரயாணத்தை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் நாட்க...