Friday, June 10, 2005

கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...

ஒரு அருவமான மிருகத்தைப் பற்றிய பதிவிது.

எல்லா மென்பொருள் நிறுவனங்கள் போலவும், எங்கள் நிறுவனமும் தகவல் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது - அலுவலகத்தில் அடையாள அட்டை மாலையை எப்பொழுதும் கழுத்தில் தொங்க விடவேண்டும் என்பதில் இருந்து, வக்கீல், மருத்துவரிடம் கூட ரகசியங்களைச் சொல்லக் கூடாது என்று முத்திரைத் தாளில் கையொப்பம் வாங்குவது வரை.

இது நிற்க.

அலுவலக வாயிலில் அடையாள அட்டை மாலையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ள மரியாதையுடன் நினைவுறுத்தும் காப்பாளரிடம் அரை விநாடியில் துளிர்த்த கோபத்துடன் சொல்கிறேன் "அய்யா, உள்ளே சென்றதும் நெற்றியில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்கிறேன் இந்த அட்டையை". அவர் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல வந்ததைப் பொருட்படுத்தாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே நுழைகிறேன். எல்லாம் உள்ளிருக்கும் மிருகம் படுத்தும் பாடு. "எனக்குத் தெரியாதா?" "இவன் யார் சொல்ல?" என்று பலகுரல்களில் அது தன் அதிருப்தியை உணர்த்துகிறது.

பல மணிநேரம் கால்கடுக்க நின்று, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலையின் monotony தரும் அயற்சி எனக்குப் புரியவில்லையா? கொடுத்த வேலையயைச் செவ்வனே செய்கின்ற அவர்கள் மேல் எரிந்து விழுந்து அவர்களுக்கு உடலயற்சியுடன் மனவயற்சியும் ஏற்படுத்த வேண்டுமா? எப்படியானாலும் கடமையுணர்ச்சியுடன் பணியாற்றியவரிடம் கோபமாகப் பேச எனக்கு என்ன உரிமை / தகுதி இருக்கிறது? இதையெல்லாம் நான் வெட்கத்தோடு நினைத்துக் கொள்ளுகின்ற நேரம் மிருகம் உறங்கிவிட்டிருந்தது...

என்ன பண்ணித் தொலைக்க? தேவர்மகன் கமல் மாதிரி உள்ளுக்குள் இருக்கும் மிருகம் எப்போது தூங்குகிறது, எப்போது விழித்திருக்கிறது என்று தெரிந்தால் அதை ஒரு கட்டுக்குள் வைக்கலாம்...

3 comments:

அல்வாசிட்டி.விஜய் said...

முதலில் நானும் செக்யூரிட்டி மக்கள் நிப்பாட்டி அடையாள அட்டையை கேட்கும் போது இப்படி தான் தோன்றியது.

உலகில் மற்ற இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டிய போது தான் இது உலகத்தின் எல்லா தொழில் நுட்ப அலுவலகங்களுக்கும் பொருந்தும் என தோன்றியது.

சிங்கப்பூரில் அடையாள அட்டை மறந்து சென்று விட்டாலோ, பல நாள் பார்த்து குட்மார்னிங் வைக்கும் செக்யூரிட்டி அன்பரே அன்று தெரியாதவர் போல கேள்விகள் கேட்க அலுவலகத்தின் உள்ளே செல்ல என்னுடைய மேலதிகாரியின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் சகஜம் தான்.

Moorthi said...

நான் வியாபார நிமித்தமாக மற்ற பல நிறுவனங்களுக்கும் சென்று வர நேரிடும். அப்போது வாயிலில் நம்மை சல்லடை போட்டுச் சலித்துவிட்டு இருக்கும் அடையாள அட்டையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு நாய்க்குக் கட்டும் பட்டிபோல ஒன்றை மாட்டிவிடுவார்கள்.

அதாவது பரவாயில்லை. எங்கள் நிறுவனத்திலோ வேலை முடிந்து போகும்போது ஒவ்வொருவரையும் திருட்டுப்பயலைப் பார்ப்பதுபோல பார்த்து சோதனை செய்து.. அதை ஏங்கேக்குறீங்க. சிலவற்றை நினைத்தால் மனது கனக்கத்தான் செய்யும்.

Kannan said...

விஜய்,
மூர்த்தி,

உங்கள் கருத்துக்கு நன்றி