முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பி(ப)டித்த வலைப்பதிவுகள்

ஆரம்பம் இங்கே

ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்...

கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன:

நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும்
இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர்
கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில்
பொன்னான காற்று
தாராப்பூர் பன்னிரண்டு

இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை.

***

இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்:

1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை)

கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. "

முழுக் கட்டுரையும் இங்கே

"பழகப் பழகவரும் இசைபோலே தினம் படிக்கப் படிக்க வரும் கவிபோலே" - இவர் எழுதியெழுதிச் சிறக்க வாழ்த்துக்கள்.

2. சுகா என்கிற சுப்பிரமணியன் கார்த்திகேயன் வந்திருக்கிறார். இந்தப் பதிவு பிடித்திருந்தது. இவர் pencil sketches செய்கிறார். தெருவில் அனாதையாய் விடபடும் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் தொண்டு அமைப்பிற்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாய் வழங்கினால், நம் உருவப் படத்தை வரைந்து தருகிறார். இம்மாதிரியான சிறு செயல்கள் என்னைபோலப் பலபேருக்கு ஒரு ஊக்கியாகவும், பொதுவில் வாழ்க்கைமேல் நம்பிக்கை கொள்ளச் செய்வதாயும் இருக்கிறது. இவருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.

3. அப்புறம் நான் வரவேற்கும் இன்னொரு வலைப்பதிவர் மும்பையிலிருந்து வலைப் பதியும் 53 வயதுக்காரர் மணிமலர் மணியன் . 50 வயது நிரம்பிய (சொற்ப எண்ணிக்கை) வலைப்பதிபவர்கள் பெரும்பாலும் இடைவெளி விடாமல் எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் ஆர்வம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. மணியனுக்கு வாழ்த்துக்கள் - இவரது அனுபவப் பகிர்தல் நமக்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

***

டிசே
கண்ணன்
செல்வராஜ்
...

கருத்துகள்

மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கண்ணன்,
என் பதிவை குறிப்பிட்டிருப்பதை கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள்.
எனது இடுகைகளை விட எனது வயதே தங்களை ஈர்த்திருப்பதாக தெரிகிறது :)
நீங்களும் வகைப்படுத்தலில் ஆட்கொள்ளப் பட்டுவிட்டீர்களே :))
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மணியன்,

ஆ! கையும் களவுமாய் மாட்டிக்கொண்டேனே! :-)

வரவேற்புரை ஆற்றும் போது சிலதைச் சொல்வதில்லையா? அதுதான்; "இடுகைளை விட" என்பதற்கு இங்கே(வரவேற்புரையில்) இடமில்லை. (குப்புற விழுந்தாலும்...)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பொருளுள் சிக்கிய மொழியை விடுவித்தல்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்: “வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.” இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள். ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேச...