முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு

மார்சல் து சாம்ப்பின் 'அருவி ஊற்று'(Marcel Duchamp - "Fountain") என்கிற கலைப்பொருள் 1917 ல் நியூயார்க்கி ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தக் கலைப்பொருள் வேறொன்றும் அல்ல - ஆண்கள் கழிப்பறைகளில் நாம் பார்க்கும் சிறுநீரேந்தி தான் இது. இதை ஒரு கலைப் பொருளாக்க இந்தக் கலைஞன் செய்தது அதை வழக்கத்திற்கு மாறான ஒரு கோணத்தில் இருத்தியதும், தன் கையொப்பத்தை (புனைப்பெயர்) இட்டதும், அதற்கு 'அருவி ஊற்று' என்ற தலைப்பிட்டதுமே.
 கலைசார்ந்த ஒரு சோதனை முயற்சியாகவும், முதல் உலகப்போரின் முடிவில் ஐரோப்பாவில் தோன்றிய தாதாயிசம் என்னும் எதிர்கலையியக்கத்தைச் சார்ந்தும் இது புரிந்துகொள்ளப்பட்டது என்பது இணையத்தில் தேடினால் எளிதில் கிட்டிவிடும் தகவல்களே.
(படம்: விக்கிபீடியா)

 ***

 1970-80 களில் (ஒரு தொன்மையான காலத்தைக் குறிப்பிடவோ, அதிரடியான தொடக்கத்தை இந்தப் பத்திக்குக் கொடுக்கவோ இந்த ஆண்டுகளைக் குறிப்பிடவில்லை) மனித எத்தனத்துடன் பராமரிக்கப்படும் மலப்புரையையே எங்கள் வீட்டில் உபயோகப் படுத்திவந்தோம். ஒரு சீமெந்து மேடைமேல் குத்தவைத்து உட்கார்ந்து கழிக்கும் மலம் கீழே விழுந்து ஒரு தளத்தில் குவியும். இந்தத் தளத்திற்கு வீட்டின் பின்னால் இருக்கும் சந்தில் இருந்து மலத்தை அள்ளுவதற்கு ஏதுவான ஒரு சாளரம் இருக்கும். இப்படிச் சேர்ந்த மலத்தை இந்தச் சாளரம் மூலம் தினமும் ஒரு குவளையில் அள்ளும் வேலை மாரியம்மாளுடையது. காலை யில் எட்டுமணியளவில் வெளியே இந்தத் தெருவில் இருந்து மாரியம்மாள் வீட்டில் இருப்போரை கூவியழைப்பார். அப்போது வீட்டிலுள்ளவர் யாரேனும் மலமேடையினின்றும் தண்ணீரை ஊற்றினால் ஒரு சீமாறு கொண்டு மலமிச்சங்களை மாரியம்மாள் கழுவி விடுவார். பத்துமணியளவில் மாரியம்மாள் ஒரு அலுமினியப் போசியுடன் வீட்டின் வாசற்புறத்தில் வரும்போது முந்தின நாள் சாப்பாட்டு எச்சங்க்களையும், நீரூற்றிவைத்த சோற்றையும் போடுவார்கள். இப்படியாக வேறு வீடுகளினின்றும் கிடைத்த பல பழையவைகளால் நிறையும் அந்தப் போசி. இது நான் 5 வயதிலிருந்து 10 வயதுவரை அறிந்த வழக்கம். அப்புறம் வேறு வீடு பார்த்துக் கொண்டு போனதும், அங்கே நாங்கள் பார்தேயிராத பீங்கான் கழிப்பறைகள் இருந்தது புதுவீட்டின் பெருமகிழ்ச்சி.

 ***

 இப்படியான மலப்புரைகளை உபயோகிக்கும்போது இருக்கும் பிரச்சனைகள் பல. மலம் கழித்தபின் கழுவும் நீர் மலத்துடன் சேர்ந்து எப்போதும் இருப்பதால் அது உலர்வதற்கான வாய்ப்பு இல்லை. மற்றுமல்லாமல், கூட்டுக்குடும்பத்தில் பலரும் புழங்குவதால் மலக்குவியல் உயிர்ப்புடனே எப்போதும் இருக்கிறது. நாற்றம் ஒருபுறமிருக்க, ஈக்கள் மொய்த்து ஒரு பெரிய சுகாதாரக் கேடு குடிகொண்டுள்ள இடமாகிறது அது. மலப்புரை நிரம்பிவிட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை வெளியே போக்குவரத்து உள்ள சாலையின் ஓரமாக இருக்கச் சொல்லுவார்கள். இப்படியாகப் பேருந்துகளையும், தெருவில் போவோர் வருவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தெருவோரத்தில் நான் மலம் கழித்த நாட்கள் பல. விபரம் தெரிந்த பின்னால், வீடு மாறிய பிறகு பாட்டி வீட்டுக்குப் போனால் மலம், சிறுநீர் கழிக்காமலே இருக்க முயற்சி செய்வேன்.

 ***

 அந்த நாற்றமும், பல வண்ணமயமான பீக்குவியலின் காட்சியும் இன்னும் எனக்குக் கொடுங்கனவுகளாக வருவதில் பல இரவுகளில் விதிர்த்தெழுகிறேன். சினிமாக் கொட்டகைகளின், பள்ளிக்கூடத்தின், உணவகங்களின், மற்றும் எல்லாப் பொதுவிடங்களிலும் காணக் கிடைக்கும் பராமரிப்பற்ற, நாற்றமும் கறையும் படிந்த பலப் பல கழிப்பறைகளும் கனவில் மாறி மாறி வருகின்றன. மலம் அள்ளும் சாளாரம் திறந்தே இருப்பதில் பின் சந்தில் திரியும் பன்றிகள் அவ்வப்போது மலத்தை உண்பதற்காகத் தலையை உள்ளே விடும்போது மேலெ மலமேடையினின்றும் திடுகிட்டிருக்கிறேன். இந்தக் காட்சிகளின், நினைவுகளின் பீதியில் மலத்தின், பொதுக் கழிப்பிடங்களின் மீதான அருவருப்பு கூடியே இருக்கிறது. எனக்கு ஒவ்வொரு நாளின் திட்டமிடுதலும் மலக்கழிப்பு சார்ந்தே இருக்கிறது. மலம் கழிக்காமல் வீட்டினின்றும் வெளியேறத் தயங்குகிறேன். அலுவலகத்திற்குத் தாமதமாகப் போவதும், வெளியூர் போக அதிகாலைப் பயணம் செய்யநேர்ந்தால் இரண்டு மணி முன்பாகவே எழுந்து மலம் கழிக்க முயற்சிப்பதும், பொதுவிடங்களின் மலக்காட்சிகளைத் தவிர்க்கும் பொருட்டே.

 ***

 உலக மாந்தரில் 40 சதவிகிகம் பேருக்குச் சுத்தமான, பாதுகாப்பான, நீர்க்குறைபாடில்லாத கழிப்பிடங்களுக்கு வசதியில்லை என்பது நம் காலத்தின் பேரவலம். அதைவிடப் பேரவலம் கைகளால் மலம் அள்ளுவதும், அதைச் சுத்தம் செய்வதும். மாரியம்மாள் போன்றவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள் என்பது நாமெல்லாம் வெட்கித் தலை குனியவேண்டிய நிலை.

நோயால் இறந்துவிடும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு மலம் சார்ந்த சுகாதாரக்கேடு இரண்டாவது காரணியாக இருக்கிறது. இன்றும் சரிவர பராமரிக்கப்படாத, சரியாக அகற்றப்படாத மனிதக்கழிவுகளால் குடிநீரில் மலக் கலப்பு அதிகரித்துள்ளது (சுட்டிகள் ஏதும் இல்லை - கூகிளில் தேடினால் எளிதில் கிடைக்ககூடிய தகவல்களே)

 முகநூலில் நூறுகோடி பேர் கணக்கு வைத்துள்ளார்கள் என்பதை விடவும் இருநூற்றைம்பது கோடி பேர் கழிப்பிடம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க, நாம் ஏதேனும் உடனடியாகச் செய்யவேண்டிய புள்ளிவிபரம். அதை கவனிக்காதவரை, முன்னேற்றம் என்பது பயனற்றதாகவே இருக்கும். மனிதனின் இன்றியமையாத இத்தேவையை நிம்மதியாகத் தீர்த்துக் கொள்வதே பெருஞ்செல்வச் செழிப்பு தருவதை விடவும் வசதியான வாழ்க்கை என்று நினைக்கிறேன்.

 *** 

1917ல் பீங்கான் சிறுநீரேந்தி அதன் முதன்மைப் பயன்பாட்டை நிறைவுசெய்து எதிர்கலையியக்கத்தின்/கலாச்சாரத்தின் குறியீட்டுப் பயனை அடைகிறது உலகத்தின் ஒரு மூலையில். 1980ல் அதே உலகத்தின் மற்றொரு மூலையில் வீச்சமடிக்கும் குழம்புடன் நைந்துபோன சோற்றை உண்டு வாழ்வதற்காக சீமெந்துத் தரையினின்றும் மாரியம்மாள் கைகளால் மலம் அள்ளிப் பிழைக்கிறார்.

 கலையென்ன, எதிர்கலையென்ன? தேங்காய்க் குலை

கருத்துகள்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
good to see you after a looong time Kannan. Hope everything is great with you. Great post.

Was looking to get in touch with you a few days ago.

could you drop me a line at

mathygrps at gmail dot com

Thanks Kannan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க