![]() |
| Photo by saeed karimi on Unsplash |
கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது.
உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?"
அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!"
வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?"
மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும் ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு)
"இதையெல்லாம் சேர்த்து இத்தன பெரிய ஒண்ணா வாங்கிக்கோ" என்று ஆசிரியர் அவன் கையில் ஆறு அடி கொடுத்தார்.
---
வாழ்க்கையின் ஆரம்பங்கள் ரம்மியமாய் இருப்பதன் காரணம் சலனமற்ற வெள்ளை மனதின் இந்தக் கற்பனை தானே? மனதில் மலரும் ஆயிரம் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் பதில்களும் இருந்தன. குழந்தைகளுக்கு இன்னும் இருக்கின்றன. அந்த சாத்தியங்களை எல்லாம் வயதும், 'பக்குவமும்' பாழடித்து விடுகின்றன. 'அலகிலா விளையாட்டின்' களிப்பிடமாக இருக்கும் உலகம் சுருங்கிச் சுருங்கி சொற்களை நெருக்கும் அடைசலான அறையாக ஆகிவிடுகின்றது.
மஜீதும் சுஹராவும் இருக்கும் உலகம் எவ்வளவு விசாலமானது! அங்கே ஒன்றும் ஒன்றும், இன்னும் பலவும் ஒன்றேயாக இருக்கும் சாத்தியம் இன்னுமிருக்கிறது. பஷீரின் இன்னொரு கதையில் கெட்டியோன் குருவி, கெட்டியோள் குருவியைக் கொத்தப்போகிறது. அப்போது ஆட்சேபம் தெரிவிக்கும் பூனையிடம் குஞ்ஞுப்பாத்திமா என்கிற இன்னொரு பத்து வயதுக்காரி அலுத்துக்கொள்ளுகிறாள்: "சொன்னாக் கேக்காது, பாரு".
மொழி மனிதர்களுக்கே (அதிலும், ஆண்களுக்கே) ஆனது என்று அவள் வயதான பின்னால் தெரிந்து கொள்வாள், ஆனால் அவள் வயதில் குருவிகளும், பூனைகளும், மரங்களும் செடிகளும் மலையாளம் பேசும்.
இதுபோல் பேசும், உயிருள்ள உலகை நினைக்கும்போது, பாரதியையும் நினைத்துக்கொள்கிறேன். அவன் ஒரு துண்டுக்கயிற்றிடம் பேசியவன்.
மனிதர்களிடம் இந்தக் குழந்தை மனது எப்போதும் இருந்தாலும், அது அடக்கிவைக்கப்பட்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை. பாரதியிடம் அது அடக்கப்படாமலேயே இருந்திருக்கவேண்டும்.
"ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு
தொங்குகிறது.
ஒரு சாண்கயிறு.
இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.
கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்
அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை."
இவையெல்லாம் 'உம்மிணி பலிய ஒன்னு' என்ற பெரிய ஒன்றான உலகத்தின் நிதர்சனங்கள்.

கருத்துகள்