முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கௌரியம்ம புறத்தாயி"

பல்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பு ‘படித்துக்கொண்டிருந்த’ போது தங்குவிடுதியில் இருந்த மலையாளி மாணவனிடம் என் மலையாள அறிவைப் பீற்றிக்கொள்ளும் விதமாக ஊர் விசேடங்களை எனக்குத் தெரிந்த மலையாளத்தில் கேட்டேன். அவன் சொன்னான்:


 “கௌரியம்மயெப் புறத்தாக்கி”. 


எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சர், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் (அப்போது) மேலாக மக்கள் பணியாற்றிய கே. ஆர். கௌரியம்மயைப் பற்றித்தான் சொல்கிறான் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. 1994ல் அவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினின்றும் விலக்கப்பட்டார்.

எனக்கு அரசியல் சாய்வோ, முதிர்ச்சியோ இல்லாமலிருந்த காலம். என்னையொத்த பலருக்கும் அந்த வயதில் தீவீர அரசியல் நிலைப்பாடுகள் தோன்றவாரம்பித்திருக்கலாம். எனக்கு அவ்வாறில்லாமல் இருந்ததற்கு என்னுடைய மத்தியவர்க்கக் குடும்பச்சூழல் காரணமாயிருக்கலாம். அன்றைக்கு எப்படியோ சிரித்து சமாளித்துக்கொண்டாலும், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரைக்  கட்சியிலிருந்து நீக்கியதை பெரிய செய்தியாக என் வயதொத்தவன் சொன்னது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.  “கௌரியம்மயெப் புறத்தாக்கி” என்பது மனதில் அப்படியே தங்கிவிட்டது. அதை ஒரு நகைச்சுவையாகப் பலரிடம் பகிர்ந்திருக்கிறேன் ("நான் ஏதோ எனக்குத் தெரிந்த கன்னடத்தில் 'சென்னாகிதீரா?' என்று கேட்கப்போக, அவன் இதுதாண்டா சாக்கென்று கன்னடத்தில் 'ஹள்ளி-கிள்ளி, ஹௌது-பௌது' என்று பொளந்து கட்டிவிட்டான்" - என்பது போன்ற அனுபவப் பகிர்தல் சந்தர்ப்பங்களில் என்னுடைய அனுபவக் கதை நல்ல வரவேற்பைப் பெற்றது).

1990ல் வெளியான லால் சலாம் என்ற திரைப்படத்தைப் (1994 க்கு அப்புறம்) பார்க்க நேர்த்தபோது, அத்திரைப்படம்  கேரள கம்யூனிஸ்ட் இயக்கம், மற்றும் தலைவர்களின் சரித்திரம் சார்ந்த  புனைவு  என்றும், சகாவு சேதுலட்சுமி என்கிற கதாபாத்திரம் கௌரியம்மையைக் குறிக்கிறது என்று  தெரிந்தது. பின்னால் என் மலையாள நண்பர்களிடம் அவரைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டேன்.  இத்திரைப்படத்தை முதலில் பார்த்த போது, நான் எதிர்பார்த்த பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லையென்ற ஏமாற்றம் இருந்தது. நானும் என் தம்பியும்  விளையாட்டாக (அப்படத்தில் வரும் வசனம் ஒன்றை வைத்து) "பீடியுண்டோ சகாவே, தீப்பெட்டியெடுக்காம்" என்றும் "தீப்பெட்டியுண்டோ சாகவே, ஒரு பீடியெடுக்காம்" என்றும், பீடி, தீப்பெட்டியை மாற்றி வேறு பலவற்றை வைத்து - இன்று வடிவேல் காமெடி வசனங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதுபோல் - கேலியாகப் பேசிக்கொள்வோம். 


ஆனால், இத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க எதுவோ தூண்டியது. ஒரு கம்யூனிஸ்ட் 'கல்ட்' நிலையை அது அடைந்திருந்தது என்று போகப் போகத்தான் புரிந்தது. சுதந்திரத்துக்கு முன்னான கேரளம் நிலவுடைமைக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்ததும் (1922 என்கிற படத்தையும் முன்னர் அறியாத வயதில் பார்த்திருந்தேன் - நம்பூதிரிகளின் முன்னால்  மாராப்பு அணிந்து செல்லக்கூடாது என்பது தொடங்கிய பல சாதிய அடக்குமுறைகளை சித்தரித்தது) அவர்களை எதிர்த்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், பொதுவுடைமைக் கொள்கைகளை முன்னிறுத்தியும் பணியாற்றிய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் முதலாளிகளின், மற்றும் பொது சமுகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டது; அவ்வியக்கத்தினர் ஒளிந்தும் பதுங்கியும் செயல்பட்டது; சுதந்திரத்திற்குப் பின்னல் அவ்வியக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது என்பதெல்லாம் விளங்கியது. 

திரைப்படத்தில் பார்த்த சகாவு சேதுலட்சுமி செல்வம் நிறைந்த 'தரவாட்டில் ' பிறந்தாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து பணியாற்றுகிறாள். பெண்களுக்கென்ற கட்டுப்பாடுகள் எதுவும் அவளைத் தடுப்பதில்லை - தனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யும்  / பேசும் சுதந்திரத்தை அவள் விரும்புகிறாள். இயக்கத்தில் சகாவான ஆண்டனியிடம் காதல் வயப்படுகிறாள் - அவர்கள் தினமும் அவள் வீட்டில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் இரவு நெடுநேரம் வரையில் அவள் படுக்கையறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். சேது இயக்கச் செயல்படுகளில் மூழ்குகிறாள். மறியல் தொடங்கிய போராட்டங்களில் பங்குகொள்கிறாள், சிறை செல்கிறாள்; இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக முன்னேறுகிறாள். 

திரைப்படம் மூலமான புரிதலானாலும், அக்காலக் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரின் கொள்கைப்பிடிப்பும், அவர்கள் தாம் சார்ந்த இயக்கத்தின்பால் காட்டிய தீவிர பிடிப்பு, தன்னலம் தாண்டி பிறருக்காக உழைக்கும், அவ்வுழைப்பையே வாழ்க்கையின் குறிக்கோளாக்கிக்கொண்ட  பரந்த பொது  நோக்கு, கட்டுக்கோப்பான இயக்க / கட்சி அமைப்பு, இவையெல்லாம் பிரமிப்பு தருவதுடன்,  ஒரு கனாக்காலம் போல, கைவிட்டுப்போன நல்ல வாழ்க்கை பகுதிகளைப்  போல ஓர் ஏக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

அனால் இந்தச் சித்திரம் மிகையின்றி கௌரியம்மைக்கும் பொருந்தும் (கதை முழுதும் புனைவானாலும்). கௌரியம்ம சட்டம் பயின்றவர்; வழக்குரைஞராகப் பணியாற்றியவர்; பெண்களுக்கு அன்றைக்கு மறுக்கப்பட்டிருந்த, பெண்கள் அதிகம் இல்லாத அரசியல் உள்ளிட்ட வெளியில் காலூன்றி, பணியாற்றி வெற்றிபெற்றவர். பலமுறை கேரளச் சட்டமன்றத்த்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல அமைசரவைகளில் அமைச்சராகப் பணியாற்றியவர்.

97 வயதில் அவர் மனோரமா டிவிக்கு அளித்த பேட்டி இங்கே. (வயதால் கனிந்திருந்தாலும், மனவுறுதி மாறாமல் இருக்கிறார். இன்னும் மக்கள்ப்பணியாற்ற விழைவும்  உற்சாகமும் கொண்டிருக்கிறார்) :


 

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் தன்னிறைவான இந்தியக் கனவு  எப்படியிருந்திருக்கும்? அந்நியர் ஆக்கிரமிப்பை சாதியால் பிரிந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து 

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? "

என்று எதிர்த்து, சுதந்திரம் பெற்ற பின்னால் இந்த ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்றாயிருப்போம் என்று கனவு கண்டிருப்பார்களோ? உண்மையான சுதந்திரம் சாதிப்பாகுபாடுகளைக் களைந்தாலே சாத்தியம் என்று உணர்ந்திருப்பார்களோ?

எப்படியானாலும், சுதந்திரத்திற்கு முன்னான இயக்கத்தவர்களின்  அர்ப்பணிப்பையும், எல்லோருக்கும் நன்மை என்கிற விழைவினையும் மறுப்பதற்கில்லை. கௌரியம்மா 1919ல் பிறந்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்தாரா என்று தெரியாது, அனால், எல்லோருக்குமான அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார்.  இந்தக் காலத்தில் வாழ்ந்த, தம்மாலான பொதுச் சேவையை (தலைவர்களாகவோ, தொண்டர்களாகவோ, இயக்கம் சார்ந்தோ, அன்றியோ) செய்தவர்களின் தலைமுறை இல்லாமல் போய்விட்டது.  கைவிட்டு எண்ணிவிடக்கூடிய மனிதர்களே இன்னும் உயிரோடிருக்கிறார்கள். இவர்கள் உழைப்புக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? இவர்கள் கனவுகளுக்கு இன்று என்ன விலை? 

அதே சாதீயப்பாகுபாடுகளுடன், இருப்போர், மற்றும்  இல்லாதாருக்குமான ஆகப்பெரும் பொருளாதார இடைவெளியின் காலத்தில் இருக்கிறோம். தன்னிறைவான இந்திய 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கபோகிறது. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்ற நிலை இல்லாவிட்டாலும், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைகூட இல்லை! காடுகளை அழித்திருக்கிறோம்; பரந்துபட்ட மக்கள் நலனை இன்னும் முக்கியமாய் கருதுவதில்லை. எதிலும் ஒரு நடுத்தரத்தன்மையையே பெரிய பேறாக நினைக்கத்தொடங்கிவிட்டோம். இதற்காகத்தான் தம் வாழ்க்கையைக் கணிசம் பேர்கள்  தியாகம் செய்தார்கள் என்று நினைக்க மனம் கலங்குகிறது.

மூத்த பத்திரிக்கையாளர் பி சாய்நாத் இன்னும் உயிரோடிருக்கும் சுதந்திரப்போராட்டத் தியாகிகளைத் தேடி அவர்களின் தற்கால வாழ்வையும் கருத்துக்களையும் ஆவணப்படுத்தி வருகிறார். ராமச்சந்திர ஸ்ரீபதி லத் பாவு என்கிற மராத்தியத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் சொல்கிறார்: "நாங்கள் தன்னிறைவுக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்டோம்; தன்னிறைவை அடைந்து விட்டோம்"

101 வயது நிரம்பிய கே. ஆர். கௌரியம்ம மே 11, 2021 அன்று உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.




-------


பிற்சேர்க்கை: கேரள அரசியல் குறித்த தகவல்கள் என் நண்பர்கள் மூலமாகவும், நான் பார்க்கும் சொற்ப காட்சியூடகங்களிலிருந்தும் தெரிந்துகொண்டது. மேலே சொன்னவற்றில் தகவல் பிழைகள் இருக்கலாம் - பொறுக்கவும். ஜெயமோகனின் இந்த அஞ்சலிக் கட்டுரை  விரிவானதுடன், சரியான  தகவல்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...