Sunday, May 12, 2019

உயிர்க் காதலன் இப்படிச் செய்தானே!

ஜாவளி என்கிற கருநாடக இசை / பாடல் வடிவம் பற்றிச் சொல்லுகையில், இவை சிற்றின்பத்தைத் தூண்டும் வகையில் அமைந்த, வெளிப்படையான வழக்குமொழியில் அமைந்த பாடல்கள் என்று பகுக்கிறார்கள். ஏதோ தீண்டத்தகாததாகவும், பெரிய தாக்கத்தை உண்டுபண்ணாததாகவும் கருதப்படும், மற்றும் கச்சேரிகளில் ‘துக்கடா’ வாகப் பாடப்படும் இவைகளை நான் நேசிக்கிறேன். மனிதர்கள் புனையும் எதுவும் மனித உறவுகளின் இழையைக் கொண்டிருப்பதில் வியப்பில்லைதானே?  தாய்-சேய், தந்தை-தமையன், ஆண்டான் - அடிமை, காதலன் - காதலி இப்படி ஏதோ ஒரு மனிதர் உறவைச் சொல்லியே அடியார்கள் பலரும் இறையைப் பாடியிருக்கிறார்கள்.

இயல்பான மனித உணர்வாக எல்லோரும் தத்தம் சொந்த அனுபவங்களுடன் பொருத்திப் பார்துக்கொள்ள ஏதுவானதும், அதனாலேயே மனதிற்கு நெருக்கமானதாக இருப்பதுமான  காதல், ஊடல், பிரிவாற்றாமை என்பவற்றை பெருமைபடுத்துவது (glorify)ஆகாதது என்று இருந்துவருகிறது. எப்போதும் உணரும், வாழ்ந்து திளைக்கும் இவ்வுணர்ச்சிகளை (இதைத் தனியாகப் பெரிதுபடுத்திப்பாட என்ன இருக்கிறது என்று) எதற்கு மிகையுணர்வின்பாற்படுத்துவது (to romanticize) என்று விட்டுவிட்டார்கள் போலும். எந்தக் கலையிலும் பெரும் பாடுபொருளாகக் காதல் இல்லாததும் (அவ்வாறு கொண்டிருக்கும் சினிமா போன்றவற்றை இகழ்வதும்) இறையுணர்ச்சி, பேரின்பம் முதலியன புனிதப் பிம்பம் பெறுவதும் எனக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. குறிப்பாகக் கருநாடக இசையில் இது மனிதர்களை விலத்திவைக்கும் போக்கிற்கும் இடமளிக்கிறது. இசையும், பாடல் வரிகளும், அவைதரும் பொருளும், இராகங்களில், தாளங்களில் கலைஞர்கள் செய்யும் வித்தைகள் மூலம் மனத்திற்கும், அறிவுக்கும் ஒருங்கே இன்பமளிக்கக் கூடியதாகவே தற்காலக் கருநாடக இசைவடிவம் இருக்கிறது. இதிலே பாடல்வரிகள் தமிழிலே இருத்தல் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடும் என்று ஒரு போக்கு இருந்தது. இப்போது எதற்கும் இருக்கட்டும் என்று ’தமிழ்’ப்பாடல்களும் பாடப் படுகின்றன.

மொழி, பாடுபொருள் என்று பலவகையியே புனிதத் தன்மையைக் காப்பாற்றுவதிலேயே இதனைப் போற்றுபவர்கள் குறியாயிருக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்யவேண்டும்? மனிதர் நேர்கொள்ளும் அன்றாட நடப்புகள் பாடுபொருளாவதிலே என்ன தவறு? தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இறைப்பாடல்களும் இருக்கலாம். இப்படியான புதிய வெளி ஜாவளிகள் மூலம் சாத்தியமாகிறது. தருமபுரி சுப்பராயர் இயற்றிய இந்தத் தெலுங்கு மொழி ஜாவளியைக் கேளுங்கள். (இதை எனக்குத் தெரிந்ததுபோல மொ(மு)ழிபெயர்த்திருக்கிறேன்)
”தோழி, என்னுயிர்க் காதலன் இப்படிப் படுத்துகிறானே!
இதோ வருகிறேனென்று தேனொழுகப் பேசிவிட்டுப் வேறு பெண்ணுடன் போய்விட்டானே!
முன்பென்னோடு பழகி என் கள்ளங்களை அறிந்தவன் (என்னை) மறந்தானே!”

பிரிவாற்றாமையைக் குரலிலும் பாவனையிலும் பாடலினூடே ஓடும் ஏக்கத்தைச் சரியாகப் பரிமாறுகிறார் இப்பாடகி. இவ்விசை நம் செவிகளிலிருந்து இதயம் நுழைந்து உணர்ச்சிகளின் மையத் நரம்பொன்றை மீட்டுகிறது.. பிரிவுத்துயரில் ஆழ்த்திவிட்டானானலும் அவனைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் காதல் இன்னும் வழிந்தோடுகிறது! அவன் மேல் சற்றும் கோபமில்லை; இன்னும் அவன் தன்னிடமிருந்து விலகிச் செல்லுவது ஏனென்று புரியவில்லை; ஆற்றாமை நம்மையும் பீடிக்கிறது. இந்தப் பெண்ணின் துயர் எப்படியும் தீர்ந்துவிடாதா என்று மனது ஏங்குகிறது. இதற்கு உருகினால் என்ன கேடு வந்துவிடப்போகிறது?

இதுபோன்ற பாடல்களை மிகுதியும் கச்சேரிகளில் பாடினால் என்ன? வேதம் - புராணம் - காவியம் என்ற வடமொழிப் பகுப்பிலே இப்படிச் சொல்லுவார்கள்: வேதம் அரிய உண்மைகளை ஆசிரியன் போல போதிக்கிறது. புராணங்கள் இவற்றை இன்னும் நெருக்கமான மொழியிலே தாய் தந்தையரின் அறிவுரைகள் போலச் சொல்லுகின்றன; காவியங்கள் அதைவிட நெருக்கமான மொழியில் காதல்த் தலைவி, தலைவனிடம் உரைக்குமுகமாகச் சொல்லுகின்றன. இதிலே நன்மை தீமைகளை, ஒழுக்கங்களை, காவியங்கள் போலக் காதல் மொழியிலே சொன்னால்தான் என்ன? அதற்குக் கருநாடக இசை இடையீடாக இருந்தால் இன்பத்திற்குக் குறைவுமுண்டோ?

No comments: