Skip to main content

101 கனவுகள் - 6. இராமநாதம்

MD இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன்!

பாட்டில் இலயித்திருந்து, தாளத்தை மனத்திலிருத்தி எப்போதாவது கையில் தட்டிக்காட்டுவது அவர் வழக்கம். இதை மலைப்புடனேயே பார்த்திருக்கிறேன் - இதைத் தேர்ந்த இசைக்கலைஞர் அனைவரிடமும் கவனித்திருக்கிறேன். 

எனக்கோ, வலுவாகத் தொடையில் தட்டித் தாளம் போட்டாலும் பாட்டு தாளத்தில் நிற்காது. நான் சற்றும் பொறுமை இல்லாதவன். சோம்பேறி வேறு. சிறுவயதில் நன்றாகப் பாட வந்தது. எந்தப்பாட்டைக்கேட்டாலும் அதை அப்படியே திருப்பிப் பாடிவிடுவேன்.

நாட்பட குரலைப் பழக்குதல் பாடுதலுக்கு இன்றியமையாதது என்று புரிந்தது. நானோ கள்ளக்குரலில் பாடியே பல நாட்கள் சமாளித்து விட்டேன். குளியலறையில் உரக்கப் பாடுவது தவிர வேறொன்றும் இப்போது செய்வதில்லை. இதில் உள்ள பிரச்சனை நீண்ட நேரம் பாடினால் தொண்டை வரண்டு வலி கண்டு விடுவதுதான். 

எப்படிக் குரலைப் பழக்குவது? பெரியவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் - வாயைத் திறந்து பாடச் சொல்லி. முடியவில்லை, முயலவும் இல்லை. 

இப்போது இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அலட்சியமாக அவர் பாட்டுக்கு அவ்வப்போது கையில் தாளத்தைப் போட்டுக்கொண்டிருந்தேன். அலட்சியம் வெளித்தோற்றத்தில் இருந்தாலும் மனது பதற்றமாக தாளத்தில் ஒருமிக்க முயன்றுகொண்டிருந்தது. 

MDR பாட்டை நிறுத்திவிட்டு நான் அவ்வாறு தாளம் போடுவது ஏனென்று கேட்டார். நான் “நீங்கள் மட்டும் தாளம் போடாமல்  இப்படிச் செய்கிறீர்களே?” என்று அவர் மாதிரியே நான் பாடும் “ஸா ம நி க ம ஜசுதாமய” வை ஸ்வராக்ஷரமாக இழுத்துப் பாடிக்காட்டினேன். அவர் சிரித்துக்கொண்டார்.

அப்புறம் நான் ஏதோ சினிமாத்தனமாகச் சொன்னேன்:

“என்கிட்ட உங்களுக்குக் கொடுக்கும்படியான தக்‌ஷிணை ஏதுமில்லை. ஆனாலும் ரெண்டு சந்தேகம் கேட்டுக்கணும்”

அவர் “தக்‌ஷிணை” பற்றி நான் சொன்னதை ஏதோ அசட்டுத்தனமானதாகப் புறந்தள்ளிவிட்டுக் கேள்வியைக் கேட்கச் சொன்னார்.

நான் கேட்டேன்:

“நீங்க இப்படி ஒடம்பே தாளமா இருக்கீங்க. எனக்குப் பாட்டு தாளத்தில நிக்கிறதில்ல. இந்தப் பக்குவத்த எப்படி அடையறது?

அப்புறம், குரலை வாத்தியமா எப்படிப் பழக்கறது?”

MDR சிரித்துக்கொண்டு பதில் சொல்ல ஆயத்தமானார். நானோ மனத்தின் ஒருமையெல்லாம் திரட்டி ஒன்றி கவனிக்கத் தயாரானேன்.

அந்த கவனக்குவிப்பில் கண்விழித்து எழுந்து விட்டேன். MDR இடம் யாரும் அப்படி நேரடியாக கேட்டிருப்பார்களா என்று தெரியாது. கனவாக இருந்தாலும் பதிலைக் கேட்காமல் விட்டதன் துயரம் எழுந்த பின்னும்...

(மே 20 இராமநாதன் பிறந்தநாள். 'இசைக்கலைஞர்களின் இசைக்கலைஞர்' இங்கே ஒரு பாடலை அவருக்கே உரித்தான நிதான கதியில் பாடுகிறார் - கௌரி மனோகரி இராகப்பாடல். இதற்குச் 'சின்னசிறு திலகம் வைத்து, சிங்காரமாய்ப் புருவம் தீட்டி' அலங்காரம் செய்து உலவ விடுகிறார். காலம் இவர் பாட்டுக்கு இயைந்து பைய நகர்கிறது.)


Comments

Popular posts from this blog

உடையாத் தளைகள்

ஆஸ்பத் திரியில்
அம்மா கிடப்பு
சுருண்டொரு சாணித்
துணியது போலே
தேய்த்துக் குளித்தால்
அழுக்கது போகும்
ஒழுக்கம் விழுப்பம்
கற்க கசடற
மரபுக் கவிதை
அரபுக் குதிரை
ரோகம் பயங்கரம்
தேகம் இதுசுமை

குறே புஸ்தகங்ஙள், ச்சில ரிக்காடுகள், குறச்சு கள்ளு - ஒரு ஸாயான்னம்!

பக்கத்துவீட்டுமலையாளிநண்பர்நூல்வெறியர். பிடித்தநூலாசிரியரின்படைப்புகளையெல்லாம்தேடித்தேடிவாங்கிப்படித்துவிடுவார். அதிலும்தாட்டியானஉறைப்பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர். அப்படியானசேமிப்புகளில்அண்மைக்காலமாகபழையவைனைல்ரெக்கார்டுகளைவாங்கிச்சேர்க்கஆரம்பித்திருக்கிறார்.
ஒருமாலைநேரம்அவர்வீட்டுக்குபியருடன்புத்தகங்களைவேடிக்கைபார்க்கவெனநானேகேட்டுஅழைப்புவாங்கிக்கொண்டேன். போனதற்குஉடனேஒருஐ.பி. சிங்கரின்புத்தகம்இனாமாகக்கிட்டியது (அதேபுத்தகத்தின்ஹார்டுகவர்பதிப்பைஅவர்வாங்கிவிட்டார்). லேசில், இல்லை, எப்படியானாலும்புத்தகங்களைஇரவல்தருவதில்லைஎன்றும், பழையபுத்தகங்களைவாங்கியபழையபுத்தகக்கடையிலேயேதிரும்பவிற்றுவிடுவதுஎன்றும்கறாராகஇருப்பவரிடமிருந்துவந்தபுத்தகம்அரியதுதான். அன்றையபுதியஅறிமுகமாக The Limerick என்றபுத்தகத்தைகல்கத்தாவில்பழையபுத்தகக்கடையில்வாங்கியதையும், அங்கிருந்துவரும்வழியில்சிலர்அதைப்பற்றிவிசாரித்ததையும்சொன்னார். ஆயிரத்திற்கும்மேற்பட்ட, அதுகாறும்பிரசுரமாயிருந்தலிமரிக்குகளின்தொகுப்புஅது. அதன்தொகுப்பாசிரியரான Legman எழுதிய Rationale of the dirty joke என்றகடினஅட்டைப்புத்தகங்களையும் ( இ…

ஜெரி அமல்தேவ் - "மலரும் நினைவுகள்"

ஒருதலைராகம் வந்த நேரம் (கோவை கீதாலையா தியேட்டரில் 450 நாள் ஓடியது - அதனால், வந்த வருடம் என்று சொல்லவேண்டும்) படுத்த வாக்கில் இருக்கும் ஒலிநாடாக் கருவியை எங்கள் குடும்ப நண்பரொருவர் இரவல் தந்திருந்தார். கூடவே கொஞ்சம் நாடாக்களும் - அதிலே 60 நிமிடம் ஓடக்கூடிய நாடாவொன்றில் ஒன்றேகால் பக்கம் ஒருதலைராகம் பாடல்கள். மீதி முக்கால் பக்கத்தில் ஒருதலைராகம் நாயகன் சங்கர் நடித்து (பாசில் முதலில் இயக்கி, மோகன்லால் அறிமுகம் பெற்ற) பாடல்கள் பிரபலமடைந்த மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் பாடல்களைப் ‘பதிவு’ செய்திருந்தார்.
இரண்டுவார இரவலில் நாள்முழுதும் அதே நாடாவை தேய்த்திருக்கிறேன். வாசமில்லா மலரிது, ரீனா மீனா, கூடையில கருவாடு, குழந்தைபாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று நாடாவில் வந்தபடி வரிசைக்கிரமமாகப் பாடுவேன் ("ஏண்டா உனக்கு வாயே வலிக்காதா?”). தொடரும் மலையாளப்பாட்டுகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை (மொழி அப்போது வசப்படவில்லை). ஆனால் மெட்டுகள் மனத்தில் அப்படியே தங்கிவிட்டன.
இன்றைக்கு ஏசியாநெட்டில் ஒரு நிகழ்ச்சியில் சங்கர். பழைய நினைவுகளை அவர் பகிர்ந்து…