முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசைவிழா - சில எண்ணங்கள்

இன்னுமொரு இசைவிழா இங்கே. கருநாடக மரபிசை பலருக்கும் மனிதர் மனிதரை விலத்தி வைக்கும் மேட்டிமைக் குறியீடாகவே திகழ்கிறது. இந்த உறுத்துதல் இருக்கும்வரை என்னால் முன்போல இவ்விசையில் திளைக்கமுடியுமென்று தோன்றவில்லை.

பக்தி, மதம் மற்றும் இசைமும்மூர்திகளென அறியப்படுவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் என்று இசைக்குப் புறம்பான, "புற" விஷயங்களே முதன்மைப் படுத்தப் படுகின்றன என்பது இசையால் எல்லாம் ஒன்று என்கிற கொள்கையை நானே கேள்விக்குட்படுத்தும்படி செய்துவிட்டது.

இன்னொன்று, இம்மரபிசை மனோதர்மம் என்கிற மனவோட்டத்தைப் பிரதிபலிக்கிற, முன்னேற்பாடுகள் எதுவுமற்றவொரு கலை வெளிப்பாடு என்பதுவும் கேள்விக்குறியதே என்று எனக்குப் படுகிறது. இதிலே பாடப்படும் ராகங்களின் இலக்கண எல்லைகள் மேற்சொன்ன மும்மூர்திகளால் நிர்ணயிக்கப்பட்டவை. இவ்வரம்பிற்குட்பட்டே இந்த முன்னேற்பாடுகளற்ற வெளிப்பாடு நிகழ வேண்டியிருக்கிறது.

இந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறைப் பாடகர்கள் மற்றும் இசைஞர்கள் ஏதோவொரு தனித்தன்மையைக் கொண்டிருந்தார்கள். மதுரை மணியின் ஸ்வரக் கோர்வைகள், எம்.டி.ராமநாதனின் மெதுவான காலப் பிரமாணம், கே.வி.நாராயணசுவாமியின் நிரவல் என்று இந்தக் கலைஞர்களின் வெளிப்பாட்டிலே ஒரு உண்மைத்தன்மை இருந்தது. இதுவரை கண்டறியப்படாத, யாரும் கேட்டறியாத வழிகளிலே இக்கலை வெளிப்பாடு நடந்தது. இவ்வெளிப்பாட்டு முறைகளிலே இவர்களே முன்னோர்கள் என்பதிலே இந்த பாசாங்கற்ற கலைவெளிப்பாடுகளின் அனுபவத்தில் ஒரு சிலிர்ப்பு இருந்தது.

இந்தத் தலைமுறை பழையதன் நிழலே என்று தோன்றும் அளவுக்கு ஒரு 'நகல்' தன்மையைக் கொண்டிருக்கிறது - புகழ்பெற்ற ஓவியங்களின் நகல்கள் போல. எங்கும் நகல்கள் உண்மையானவற்றின் இடத்திலே வலம் வருவதில் விரைவிலே சோர்வேற்படுகிறது. கேட்ட பிடிகளே ராக ஆலாபனைகளிலே, கேட்ட பாடல்களே கச்சேரிகளில், கேட்ட வெளிப்பாட்டுமுறைகளின் தரக்குறைவான நகல்களே எங்கும்.

ஆக, போலித்தனங்களின் மொத்தவுருவாகப் போய்விடும் தீனமான நிலையிலேயே இம்மரபிசை இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இப்போலி மேட்டிமை, பக்தி, மதக் கலப்பு, மற்றும் கலையின், கலைஞர்களின் உண்மையான வெளிப்பாடுகள் இல்லாத நிலை என்பவை இருக்கும்போதே இவ்விசைமரபு தழைக்குமாயின், நான் கேட்ட, அனுபவித்தவொன்று இதுவல்ல என்று சமாதானப் படுத்திக் கொள்ளுதலைத் தவிர வேறென்ன வழி?

பின் குறிப்பு: மைக் மார்க்விஸீ (Mike Marqusee) கருநாடக இசை அபிமானி என்பது தெரிந்திருக்கவில்லை. சாமானியருக்கெல்லாம் எட்டாத ஒன்று என்கிற விலத்துதலை எதிர்க்கும் வகையில் இம்மரபிசையைப் பற்றி இவர் எழுதியிருந்த இந்தக் கட்டுரையுடன் முழுதாக உடன்படுகிறேன். முன்முடிவுகளில்லாத, பழைய கலாச்சாரச் சுமைகள் இல்லாத, எதையும் அதன் உண்மையான அனுபவம் சார்ந்தே வரிந்துகொள்ளுகிற / பொருள்படுத்திக்கொள்ளுகிற மேற்கத்தியவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.

இசை விழாபற்றி அவர் எழுதியுள்ள இன்னுமொரு கட்டுரை இங்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...