முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைப்புச் சுருக்கம் (சோதனை)

நீளமான தலைப்பினால் தான் ப்ளாக்கர் விளையாடுகிறதா என்று செல்வராஜ் சோதித்துப் பார்க்கச் சொன்னார். போன பதிவை இருமுறை பதிந்தும் முகப்புப் பக்கத்தில் காணவில்லை. தலைப்புத்தான் காரணமாயிருக்கும் என்றே தோன்றுகிறது. தனிச்சுட்டியையும் overwrite செய்துவிடுமோ என்கிற பயத்தில், என்னுடைய போன பதிவு இங்கே முழுதாக. (மூன்றாவது முறையும் ஒரே பதிவை இடுவதைப் பொறுப்பீர்களாக)

மறுபடியும் மோட்டார் சைக்கிள் டயரி - ஒரு புத்தக வாசிப்பு அனுபவம்

"A good traveler has no fixed plans, and is not intent on arriving." ~LaoTzu (570-490 BC)~.

Travel என்பதைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பயணம் அல்லது பிரயாணம் என்பது ஒரு இலக்கை நோக்கிச் செல்வதான செயலைக் குறிப்பது போல இருக்கிறது. சுற்றுலா என்பது நம் பள்ளிக்கூட 'இன்பச்சுற்றுலா' வை ஞாபகப் படுத்தி அதன் கனத்தைக் குறைக்கிறது. நான் பெங்களூரில் இருந்து கோவை செல்வதற்கே நிறைய ஆயத்தங்கள் செய்வேன்; டிரெயின், பஸ் டிக்கட் கிடைக்கவில்லையென்றால் 'தொத்திக் கொண்டு' போக முனைய மாட்டேன். "Unreservedல் போகும் அனுபவமே தனி" என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து, தவிர்க்க முடியாமல் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் பிடித்து, ஹிண்டு பேப்பர் இரவல் வாங்கிக் கக்கூஸ் அருகே தரையில் விரித்து இரவெல்லாம் முட்டைக் கட்டிக்கொண்டு தூங்க முயன்றேன். நல்ல அனுபவம் தான்; ஆனால் இதை நான் அவ்வளவாக ரசித்ததாகச் சொல்ல முடியாது. இது இப்படியென்றால், இரவு நேர பஸ் பயணம் வேறொரு வினோத அனுபவம். அரசு பஸ்களில் என்னை மாதிரி நீளமான ஆசாமிகள் காலை 'S' அல்லது 'W' போல மடக்கி வைத்துக் கொண்டு தான் உட்காரவேண்டும். அதுவும் வழியோர இருக்கையானால், அரைப் பிருஷ்டத்தில் balance செய்து தான் போகவேண்டும். களைத்து, அயர்ச்சியுடன் தூக்கம் தள்ளும் இந்த இரவுப் பயணத்தில், வர்ணாசிரம பேதங்கள் இல்லாமல் பரட்டைத் தலையுடனும், சிவந்த கண்களுடனும் எல்லார் மேலும் எல்லாரும் தூங்கி விழலாம்! அர்த்த ராத்திரியில் அத்துவானக் காட்டில் சூடான, இனிப்பென்ற சுவை மட்டும் தெரியும், டீ போலக் காணும் ஒன்றைக் குடித்து (அது எப்படியோ, சிலபேர் அந்த வேளையில் தான் புரொட்டாவெல்லாம் தின்கிறார்கள்)மேலும் தூங்கி சாமி ஆடலாம். ஒன்றும் தெரியாமல் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதியுடன் போகும் ரயில் பயணத்தைவிட, வாழ்க்கையில் நாம் நம்முடனேயே கழிக்கும், ஆழ்ந்து சிந்திக்கும் சில அந்தரங்கமான பொழுதுகள் இந்த வினோதப் பயணங்களிலேயே வாய்க்கின்றன என்பது மட்டும் உண்மை.

***

எனக்கு மிகவும் பிடித்த ஒரு travel நிகழ்ச்சி lonley planet. இப்போது globe trekker என்ற பெயரில் வருகிறது. இதில் Justine Shapiro பயணம் போகும் நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்ப்பேன். Ian wright எனக்குப் பிடித்த மற்றொரு 'பயணி'. "பயணத்தின் நோக்கம் புதிய புலங்களைக் கண்டு, அங்கு வழங்கிவரும் கலாச்சாரம், மற்றும் வாழும் மனிதர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதே என்று நினைக்கிறோம், ஆனால் நடப்பது என்னவோ, பயணம் போகும் ஒருவர் தன்னைப் பற்றித் தானே தெரிந்து கொள்வது தான்" என்கிறார் Shapiro. நான் போன சில சொற்பப் பயணங்களில் இருந்தும் இதைக் கொஞ்சம் அனுபவித்திருக்கிறேன். 'சே' வும் அனுபவித்திருக்கிறார் என்பது இந்த வரிகளில் இருந்து தெரிகிறது: (தமிழாக்கம் அடியேன்) "இந்தக் குறிப்புகளை எழுதிய நபர் தன் காலடி அர்ஜண்டீன மண்ணைத் தொட்டவுடன் மறைந்துவிட்டார். இக்குறிப்புக்களை மெருகூட்டி, ஒழுங்குபடுத்தும் இந்த நபராகிய நான் அப்போதிருந்த நானில்லை" இப்படித் துவங்கும் குறிப்புகளில் இருந்தே இதன் உரைநடையின் மாதிரியும் தெரிந்து விடுகிறது.

அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க மோட்டார் சைக்கிளில் கிளம்பும் இரு வாலிபர்கள் சந்திக்க நேரிடும் அனுபவங்கள் 'கண்டது கண்டபடி' நேரடியாகத் தரும் குறிப்புகள் இவை. பிற்காலத்தில் 'சே' ஆகப்போகின்ற ஆளுமையின் வித்து இங்கிருந்து தான் முளைவிட்டு அரும்புகிறது. இதனாலேயே இந்தக் குறிப்புகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டாலும், எனக்கு இவை அந்த context ல் இல்லாவிட்டாலும் அருமையான வாசிப்பு அனுபவம் தருகின்ற ஒரு படைப்பாகத் தெரிகிறது. எல்லோருக்கும் தெரிந்த, தொப்பியுடன் சுருட்டும் கையுமாய் ஒரு 'சே' வை மனத்தில் நிறுத்தி, இக் குறிப்புகளின் வரிகளில் அவரைத் தேட முயற்சிக்க வேண்டியதில்லை(தேடினால் கிடைப்பதும் சந்தேகமே).

திட்டமிடப்படாத பயணங்கள் பல ஆச்சரியங்களை, அதிர்ச்சிகளை, சந்தோஷங்களை, துக்கங்களைப் பொதிந்து வைத்திருந்து, அப்பொதியில் இருந்து எதிர்பாராதவொன்றை அவ்வப்போது நம்மெதிரே வீசுகிறது. 'சே' இந்தப் பயணத்தில் இருந்து தெரிந்து கொள்வது வாழ்க்கையும் அவ்வாறான ஒரு திட்டமிட முடியாத பயணமே என்பது தெரிகிறது. Forrest Gump இன் தாயார் சொன்னது போல "Life is like a box of chocolates. You never know what you are going to get" என்பது வாழ்க்கைக்கும், பயணத்திற்கும் எவ்வளவு சரியாய்ப் பொருந்துகிறது! சிலி நாட்டின் வடபகுதியிலுள்ள பாலைவனத்தைத் தவிர்க்க வேண்டிக் கடல் மார்கமாக செல்லும் 'சே' ஒரு அமைதியான இரவில் கப்பலில் கடலைப் பார்த்து மனத்தை கடலுடன் அலையவிடுகின்றார். அப்போது இப்படிப் பதிகிறார்: "There we understood that our vocation, our true vocation, was to move for eternity along the roads and seas of the world. Always curious, looking into everything that came before our eyes, sniffing out each corner but only ever faintly - not setting down roots in any land or staying long enough to see the substratum of things". 'வாழ்கைப்பயணம்' எவ்வளவு "க்ளிஷேடா"க இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மானுடம் என்பது புலம், இனம், மொழி என்ற வட்டங்களைத் தாண்டி மிளிர்வது; இதுவே நாளைய உலகின் வழிகாட்டியாகப் போகிற நம்பிக்கை நட்சத்திரம். சிலி நாட்டில் அடுத்த வேளை உணவு மட்டுமே இலக்காக, உயிரையும் பணயம் வைத்து உழைக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் இருந்து, பெருவில் பிற்பட்ட நிலையில், முன்னாளைய பெருமைகளை இழந்து, "வாழ்க்கையே மாற்ற முடியாத ஒரு பழக்கமாய் ஆகிவிட்ட(அதனால மட்டுமே வாழ்கிற)" இந்தியப் பழங்குடி மக்கள், மற்றும் வெனிசுவேலாவின் குஷ்ட நோயாளிகள் வரை நாளை என்ற தினமே இலக்காய் வாழும் ("whose fartherest horizon has always been tomorrow") விளிம்பு நிலை மனிதர்கள், அவர்களின் தினசரி அவலங்கள் 'சே' வின் மனத்தைத் தொடுகிறது. ஆயிரத்தில் ஒருவனுக்கே தன்னை அறியவேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது; இப்படியான ஆயிரம் பேர்களில் ஒருவனுக்கே அது சித்திக்கிறது என்பது போல அர்த்தம் வரும் சுலோகம் கீதையில் உள்ளது. இம்மாதிரியான மனிதர்களின் நிலைமை (புலம், இனம், மொழி என்ற கட்டமைப்புக்களைத் தாண்டி) எத்தனை பேர்களின் மனத்தில் பதிகிறது? அப்படியே பதிந்தாலும் எத்தனை பேர்களுக்கு அது செயலைத் தூண்டுகிறது? அதில் எத்தனை பேர்கள் 'சே' மாதிரி வெற்றியடைகிறார்கள்?

மேம்போக்காகச் சொல்கிற மாதிரியான, சார்பு நிலையற்ற ஒரு பார்வையாளரின் கோணத்தில் எழுதிய நடையானாலும், சில வரிகள் நம்மைச் சிந்தனையில் கட்டிப் போட்டுவிடுகிறது. எழுத்துத் திறமை இயற்கையாகக் கைவரப் பெற்றவராகத் தெரிகிறார் 'சே'. தென்னமெரிக்காவின் அழகைச் சித்தரிப்பதாகட்டும், அவலங்களைச் சொல்வதாகட்டும், ஆங்காங்கே சிக்கல்களில் மாட்டிக் கொண்டு உடனே ஊரை விட்டு ஓடும் சுய பிரதாபங்களாகட்டும் - தொய்வில்லாத, கற்பனைவளம் மிகுந்த, சாமர்த்தியமான, சரளமான நடை எல்லாவற்றையும் விட மிஞ்சி நிற்கிறது. இன்கா வின் முக்கியத்துவம் வாய்ந்த மாச்சு-பிச்சு பற்றிப் பேசும்போது மட்டும், விவரணைகள் அதிகம் தெரிகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் குறிப்புகள் அங்கே ஒரு செய்தித் தாளில் பிரசுரம் ஆனதாகவும் தெரிகிறது. மாச்சு-பிச்சு வை உலகிற்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க அகழ்வாராய்சியாளர் ஹிரம் பிங்கம்மின் விளக்கங்கள் குறித்து தமக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் பதிந்துள்ளார். (சமீபத்தில் ஹிந்துவில் இந்தக் கட்டுரையைப் படித்து, 'சே' வின் கருத்துடன் பொருத்திப் பார்த்தபோது, இவைகளின் ஒற்றுமை ஆச்சரியமாக இருந்தது) . தாம் பயணம் செய்த நாடுகளின் அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, அங்கு கிடைக்கும் மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் பற்றிய விவரங்களில் ஆர்வம் காட்டினாலும், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள், உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவது என்பவைகளைக் குறித்தும் கூரிய பர்வைகளை முன்வைக்கிறார். 1950 களின் தென்னமெரிக்கச் சமூகச் சரித்திரத்தில் இருந்து தொகுத்த ஒருசில காட்சிகளாகவும் எனக்கு இப்புத்தகம் ஆர்வம் அளித்தது.

இப்பயணத்திற்கு நடுவே இவருக்கு 24 வயது நிரம்புகிறது. எனக்கு 24 வயது ஆனபோது சனிக்கிழமையும் அலுவலகம் வந்து கேரம் போர்டு ஆடிக்கொண்டிருந்தேன். 40 வயதிற்குள்ளாகத் தம் வாழ்க்கையைத் தமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகக் கழித்து, பிறர் நலனுக்காக எங்கோ போய் உயிர்விட்டார். இவர் இன்னும் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ! 24 வயதில் இவருக்கு இருந்த கருத்துச் செறிவும், மனிதாபிமானமும் இன்னும் எனக்கு இல்லை! இதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.

நிறைகளை மட்டுமே சொல்லி, குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருப்பது நல்ல விமரிசனம் ஆகுமா? எனக்குத் தெரியாது. படித்து முடித்தவுடன் எழுதிவிடவேண்டும் என்ற உந்துதலில் எழுதிவிட்டேன். 'என்னை பாதித்தது' என்கிற ஒன்று போதுமே. இன்னும் பிரிக்கப்படாத உறைகளில் தூங்கும் புத்தகங்களில் இருந்து, என்றோ வாங்கி வைத்த இதை உடனே படிக்க ஆர்வத்தைத் தூண்டிய டிசே வின் இப்பதிவுக்கு நன்றி. இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. சீக்கிரமே பார்த்துவிடுவதென்று இருக்கிறேன்.

The Motorcycle Diaries : A Latin American Journey by Ernesto Che Guevara , Ocean Press, 2003 , 175 பக்கங்கள்

பி.கு.: போனவாரமே பதிந்தது - புளொகர் சாப்பிட்டுவிட்டது! சிறு மாற்றங்களுடன் மறுபதிவு.

கருத்துகள்

Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நான் பயந்தபடியே, என் பழைய தனிச்சுட்டி உரலை ப்ளாக்கர் மீண்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. முழுப் பதிவையும் போடாமல், சுட்டி மட்டும் கொடுத்திருந்தால் அது recursive ஆன 'தற்சுட்டி'யாகியிருக்கும்.

செல்வராஜ் பின்னூட்டத்தை மீட்டுவிட்டேன். அது இங்கே:

கண்ணன், ரொம்ப நாளைக்கப்புறம் எழுதி இருக்கீங்க. உங்களின் பதிவுகள் படிக்க இதமாய் இருக்கின்றன. "சே" பற்றிக் கொஞ்சமும் தெரியாதிருந்த எனக்கு இந்தப் பெயர் கடந்த ஒருவருடமாய் வலைப்பதிவில் அடிபடுவதில் இருந்து ஒரு ஆர்வத்தை மனதுள் விதைத்திருந்தது. அதை மேலும் வளர்க்கும் விதமாய் உங்களின் இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. படிக்க வேண்டியதின் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்வேன். நன்று. நன்றி.

விடாக்கண்டனாக என் பழைய பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்ட சந்தோஷ் குருவுக்கும் நன்றிகள்!

மறுபடியும் ப்ளாகர் ஸ்வாஹா பண்ணிடுச்சு. :))

Anyway my comments for the next post :

கண்ணன் நல்ல பதிவு.

இப்புத்தகத்தைப் படிக்கும் ஆவலையும், சினிமாவினைப் பார்க்கும் ஆவலையும் தூண்டியுள்ளீர்கள். நன்றி.

Ian wright உங்களுக்குப் பிடிக்குமா ??? எனக்கு பிடித்தவர் மெகான் மெக்கார்மிக் ;)




மொத்தத்தில், ப்ளாக்கர் பற்றி இன்னொரு விடயம் தெரிந்துகொண்டேன்...
Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,

//கண்ணன், ரொம்ப நாளைக்கப்புறம் எழுதி இருக்கீங்க. உங்களின் பதிவுகள் படிக்க இதமாய் இருக்கின்றன.//

Selvaraj's comments are very true. I need to add your blog to my reading list.

Vinobha.
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
Well written and definitely worth reading !!!! nanRi !
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
வினோ,

நீங்கள் சொல்வதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது - நன்றி

பாலா,

ஊக்கத்திற்கு நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந