முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாய் ராசி

ஆறு மாதத்திற்கு முன்னால் ஊரில் தங்கைக்குத் (சித்தி மகள்) திருமணம் நிச்சயிக்கப் பட்டதில் இருந்தே எனக்குள் ஒரு பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. காரணம், பூட்டா என்கிற அவர்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய். எனக்கும் அதற்கும் ஒத்துப் போவதே இல்லை.

முன்னொரு முறை அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது, கொலை வெறியோடு என்னைப் பார்த்துக் கத்தியது. என் தங்கைகள் தம் உடன் பிறவா தம்பியிடம், "நம்ம அண்ணா டா, ஷேக் ஹாண்ட் குடு" என்று என் கையை வலுக் கட்டாயமாக இழுத்து அதன் அருகில் கொண்டு போனார்கள். நாய்க்குச் சந்தேகம் தீரவில்லை - "... a wooden expression had crept into his face. He looked like a parrot who had been given nuts by a stranger whose bonafides it is not sure of ..." என்று பி.ஜி.வோட்ஹவுஸ் (PG Wodehouse) சொல்வது போல பார்த்து, கொஞ்சமாக முகர்ந்து பார்த்து விட்டு, மறுபடியும் வள்ளென்று கடிக்க வந்தது. நல்ல வேளையாக கைக்கும் முன்னால் நான் கொண்டுவந்த பை இருந்ததில், மனிதர்களுடனாவது ஷேக் ஹாண்ட் பண்ண முடியும் என்ற நிலை இப்போது.

கல்யாணத்திற்கு ஆனமட்டும் தாமதமாக ஊர் போய்ச் சேர்ந்து, வீட்டில் நுழைந்து முதல் வேலையாக நாயிடம் கடி வாங்கிக் கொண்டேன். நன்றாகக் கடிக்கவில்லை, ஆனால், ஒரு பல் பட்டு இரத்தம் கட்டிக் கொண்டு ஒரு வாரத்திற்கு கை கடுத்தது. என்னைக் கடிக்க வந்ததற்காக அதற்கு ஒரு அடி விழுந்தது. கடமையைச் சரிவரச் செய்தும், அதிருப்தியுடன் அடியும் கிடைப்பது தான் 'நாய்ப் பொழப்பு' போல...

ஆனால் எனக்கும் கொஞ்சம் 'டிப்ஸ்' (அபரிச்சியமான நாயைச் சமாளிப்பது எப்படி?) கிட்டியது. அதாகப்பட்டது, நாய் முன்னால் நான் திருட்டு முழி முழிக்கக் கூடாது, திருடனை மாதிரி நடக்கக் கூடாது, என்பது போல. முன்னது பிறவியில் இருந்து இருப்பது. அவர்கள் வீட்டில் கதவுகளின் நடை எல்லாம் சற்று உயரம் குறைவு. சராசரி மனிதர்கள் நடமாடி, புழங்கக் கட்டிய வீடு. பனைமரத்தில் பாதி இருப்பவர்கள் பார்த்துத் தான் போக வேண்டும். இதில் மேலும் சோதனையாக, இப்படிக் குனிந்து ஒரு கதவைக் கடந்து, நிமிர்வதற்குள் அங்கே கட்டியிருக்கும் நாய் சாவதானமாக வந்து ஆடு சதையைக் கடிக்கலாம். அவ்வளவு நேரம் அதற்குக் கிடைக்கும்; குனிந்தபடி கதவைக் கடந்து, நாயின் கடிக்கும் 'ரேஞ்சில்' வராமல் நகர்வது அவ்வளவு கஷ்டம். இதைத் தான் நான் கதவின் பின்னால் இருந்து கணக்குப் பண்ணுவேன். நாயை வீட்டின் கண்காணா மூலையில் கட்டி வைக்கலாம் என்றால், அரை மணியில் குரைத்து ஊரைக்கூட்டி விடும். நாயை நடுக் கூடத்தில் கட்டி வைத்தால் தான் நிம்மதி.

என் நண்பன் பல நல்ல பெடிகிரி (Pedigree) உள்ள நாய்க்களை வளர்த்தான். இப்படியான நாய் சகவாசத்தில் எனக்கு 'நாய்க் கண்ணன்' என்ற பெயரே இருந்ததுண்டு அப்போது. அதற்கும் முன்னால் என்னை ஒரு நாய் கடித்து, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் வரிசையில் நின்று வயிற்றில் ஏழு ஊசி போட்டுக் கொண்ட முன் அனுபவம் இருக்கிறது. "ஏண்டா, பல நாயைப் பார்த்தவன் நீ, இப்பொ என்ன பயம்?" என்று கேட்டால் நான் என்ன செய்வது? இம்மாதிரி "ஏற்கனவே நாய் கடி வாங்கியவர்கள், மற்றும் பல வகை நாய்க்களுடன் பழகியவர்களுக்கு கடியிலிருந்து விதி விலக்கு கொடுக்கவேண்டும்" என்று நாயுலகத்தில் சட்டமா, இல்லை "ஏற்கனவே உன்னை மாதிரி ஒரு பயல் என்னைக் கடித்துவிட்டான், இதோ பாரு தழும்பு" என்று நிஜாரை மேலிழுத்துக் காட்டினால் தான் நாய் விட்டு விடுமா?

என் வீட்டிலேயே, என் நண்பர்கள் சிலரை அம்மாவுக்குப் பிடிக்காது. நாயை "நான் பெறாத மகன்" என்று செல்லம் கொடுத்தால் போதுமா? நாயின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்ளாமல் "ஒண்ணுமே பண்ண மாட்டான், கத்துவான், மோந்து பார்ப்பான் - அவ்வளவுதான்" என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் நாய் பல்லைத் தீட்டிக் கொண்டு, "அப்படியா சேதி, கிட்ட வா பார்த்துக்கறேன்" என்று நினைக்குமா இல்லையா? நாய்க்கும் சில பேரைப் பிடிக்காமல் போகலாம். வீட்டுக்கு வருவோர் எல்லாம் "என்ன இருந்தாலும் அந்த நாய் நம்ம கிட்ட மூஞ்சி குடுத்துப் பேசலை பார்த்தியா?" என்றா சொல்லப் போகிறார்கள்? என் வீட்டுச் சின்னப் பையன் கூட 'மூட்' இருந்தால் தான் தன் பெயரையே வந்தவர்களுக்குச் சொல்லுவான். மற்றபடி தானுண்டு, தன் விளையாட்டுண்டு என்று இருந்து விடுவான். இப்படியிருக்க, வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் நாயுடன் ஒத்துப் போகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டில் தங்கும் வண்ணம் வந்தவர்களை "இந்த நாயைக் கொஞ்சம் பிடிச்சுக்கறீங்களா, அப்பிடியே நான் ஒண்ணுக்கு இருந்துட்டு வரேன்" என்று சொல்லவைக்காமல், நாயை ரெண்டு நாளைக்கு ஒரு ஓரமாகக் கட்டித்தான் வையுங்களேன்.

இந்த பி.ஜி. வோட்ஹவுஸ் வாக்கியம் தான் இந்த இடத்தில் நான் மகிழ்ச்சியுடன் பகரக் கூடியது. "I was sauntering on the river bank with a girl named something that has slipped my mind, when there was a sound of barking and a large hefty dog came galloping up, full of beans and buck and obviously intent on mayhem. And I was just commending my soul to God and feeling that this was where the old flannel trousers got about thirty bobs worth of value bitten out of them, when the girl, waiting till she saw the whites of its eyes, with extraordinary presence of mind opened a coloured Japanese umbrella in the animal's face. Upon which it did three back somersaults and retired into private life. "

ஹ்ம்ம்ம்...இதெல்லாம் கற்பனையில் தான். நம்ம பூட்டாவிடம் ஒன்றும் நடக்காது. அடுத்த தங்கைக்கு கல்யாண எத்தனங்கள் துவங்கிவிடும். நான் இந்த முறை சாம, தான, பேத, தண்டத்தில் எதைப் பிரயோகித்து பூட்டாவை அடக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கருத்துகள்

Pavals இவ்வாறு கூறியுள்ளார்…
// கடமையைச் சரிவரச் செய்தும், அதிருப்தியுடன் அடியும் கிடைப்பது தான் 'நாய்ப் பொழப்பு' போல... //

வேலை செய்யிர இடத்துல ரொம்ப நொந்து போயிருப்பீங்க போல.. :-)
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ராசா,

இதப் பாருங்க முதல்ல. வேலை செய்யிர இடம் பத்தி இனி மூச்சு விடுவேனா என்ன?

:-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
miga nalla nagaissuvai mikka oru pathivu, considering the hero of the article is a DOG :-)
I really enjoyed reading this. Keep it up. And the quote from PG Wodehouse was very very appropriate and hilarious!!!
enRenRum anbudan
BALA
http://balaji_ammu.blogspot.com
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
What's happening? Forgotten blogosphere? Please do keep your pieces coming in. You are such a delight to read!

Saumya
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks Bala...

Kind words, those, Saumya! Thanks!! Been busy and also, cant type much these days...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க