முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறே புஸ்தகங்ஙள், ச்சில ரிக்காடுகள், குறச்சு கள்ளு - ஒரு ஸாயான்னம்!


பக்கத்துவீட்டு மலையாளி நண்பர் நூல் வெறியர். பிடித்த நூலாசிரியரின் படைப்புகளையெல்லாம் தேடித்தேடி வாங்கிப் படித்துவிடுவார். அதிலும் தாட்டியான உறைப் பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர். அப்படியான சேமிப்புகளில் அண்மைக்காலமாக பழைய வைனைல் ரெக்கார்டுகளை வாங்கிச்சேர்க்க ஆரம்பித்திருக்கிறார். 

ஒரு மாலை நேரம் அவர் வீட்டுக்கு பியருடன் புத்தகங்களை வேடிக்கை பார்க்கவென நானே கேட்டு அழைப்பு வாங்கிக்கொண்டேன். போனதற்கு உடனே ஒரு .பி. சிங்கரின் புத்தகம் இனாமாகக் கிட்டியது (அதே புத்தகத்தின் ஹார்டு கவர் பதிப்பை அவர் வாங்கிவிட்டார்). லேசில், இல்லை, எப்படியானாலும் புத்தகங்களை இரவல் தருவதில்லை என்றும், பழைய புத்தகங்களை வாங்கிய பழைய புத்தகக் கடையிலேயே திரும்ப விற்றுவிடுவது என்றும் கறாராக இருப்பவரிடமிருந்து வந்த புத்தகம் அரியதுதான். அன்றைய புதிய அறிமுகமாக The Limerick என்ற புத்தகத்தை கல்கத்தாவில் பழைய புத்தகக் கடையில் வாங்கியதையும், அங்கிருந்து வரும் வழியில் சிலர் அதைப்பற்றி விசாரித்ததையும் சொன்னார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அதுகாறும் பிரசுரமாயிருந்த லிமரிக்குகளின் தொகுப்பு அது. அதன் தொகுப்பாசிரியரான Legman எழுதிய Rationale of the dirty joke என்ற கடின அட்டைப் புத்தகங்களையும் ( இரண்டு தொகுதிகள்) காட்டினார். 

இரண்டாவது பியருக்கப்புறம் பேச்சு இசையில் போய் முடிய, அவர் படுக்கையறையில் நுழைந்துவிட்டேன். அங்கேதான் 33 மற்றும் 45 ஆர்பிஎம் களில் ஓடக்கூடிய (இரண்டையும் சேர்த்து வைத்தால் 78 ஆம்) ரெக்கார்ட் பிளேயரை குழந்தை மாதிரிப் போர்த்தி வைத்திருந்தார். (‘ஶ்ரீரங்கத்து தேவதைகளில் ஸ்பரிங் தெறிக்குமளவிற்கு சாவி கொடுத்த கிராமபோன் அசந்தர்ப்பமாக  நினைவுக்கு வந்துபோனது)

தனது புதிய பொழுது போக்காக, பழைய மலையாளத் திரைப்படங்களின் வைனைல் ரெக்கார்டுகளை தேடித்தேடி வாங்கி, அவற்றை குறுவட்டுகளில் பகர்ந்து அப்புறம் அவற்றை மீண்டும் விற்றுவிடுவதாகச் சொன்னார். படுக்கையில் நான்கைந்து ரெக்கார்டுகளை கைமுறுக்கு சுற்றி எண்ணெயில் போடுமுன் துணியில் பரத்திவைத்திருப்பது போல வைத்திருந்தார் - துடைத்து அவை அன்றிரவு வட்டுகளில் ஏறவேண்டியன. பேச்சு மும்முரத்தில் பளேயரிலிருந்து ஒரு கருவட்டை எடுத்து என்னிடம் பிடித்துக்கொள்ளச் சொல்லித்தந்தார். புஷ்பாஞ்சலி பிரசாதமாக அதை வாங்கவேண்டி இரு கைகளையும் ஏந்திக்கொண்டேன். உடனே வட்டுகளை எவ்வாறு பிடித்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினார் (மையத்தில் கைபடாதவாறு இரண்டு ஓரங்களில் கைவைத்து)

அந்த ரெகார்டுகளின் ஒலி நயம் பற்றி அவரிடம் சிலாகித்தேன். குரலின், மற்றும் இசைக்கருவிகளின் உண்மையான ஒலிக்கு மிக அருகில் அது இருப்பதையும், கேட்கும்போது முழுமையாக, நிறைவாக அது ஒலிப்பதையும் நான் சொன்னவுடன் எனக்கு இன்னொரு பியர் கிடைத்தது. சில பாடல்களை எனக்குப் போட்டுக்காட்டினார். சலில் சௌத்ரி, தேவராஐன் என பல பாடல்கள். அன்றைக்குக் கேட்டஏழு ராத்ரிகளில்காடாறு மாஸம்யேசுதாஸின் வெண்ணெய்க் குரல் இன்னும் என்னைப் படுத்துகிறது. 

தெருவில் உறங்ஙும் நிழலுகள் - ஞங்கள்
தடவில் கிடக்கும் மோஹங்ஙள்

என்ற வரிகளும்...




அவரும் யேசுதாஸின் பரம விசிறி. நான் சும்மாயிருக்காமல் யேசுதாஸ் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இளம் மாணவனாக இசையின் ஆரம்ப பாடங்களைக் கற்றுக்கொண்டது பற்றிச் சொன்னேன். உடனே அவர் வெகுண்டெழுந்தார். 

யேசுதாஸ் பற்றிய மிகப் பிரபலமான பொய்ப் பரப்புரை இதுதான் என்றார். யேசுதாஸ் செம்பையிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டதன் மூலமே இசையின் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், அதற்கப்புறமே சினிமாவில் பிரபலமானதாகவும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் செம்பையிடம் வருமுன்னரே சினிமாவில் பாட வந்துவிட்டதாகவும், இந்த வரலாறு எற்கெனவே வலுவாக ஆவணப்படுதப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தாலும் திடீரென்று குடித்த பியரெல்லாம் வடிந்து தூக்கத்தினின்றும்  கலைந்தெழுந்ததுபோல் ஆயிற்று. எவ்வளவு இயல்பாக இவற்றை வரிந்துகொள்கிறோம்? இயற்கையிலேயே நல்ல இசைவளம் பெற்று, கடின உழைப்பால் மேலுக்கு வந்த கலைஞனை ஒரு பெட்டிக்குள் அடைக்கும் இந்தத் திரிசமனத்தை யார் செய்தது?! மரபிசை ஞானம் உள்ளதாலேயே அக்கலைஞன் நன்றாகப் பாடுவதாகக் கதைகட்டி விடுவது எதற்காக? "மேல்"சாதி இந்துவாகப் பிறக்காத ஒருவனின் பாட்டில் தவிர்க்க இயலாமல் திளைத்து, அதனால் ஏற்படும் வயிற்றெரிச்சல் / குற்றவுணர்வினால் அவனைப்புனிதப்படுத்தும்முயற்சியா? அப்படிப் பிறக்காத ஒருவனுக்கு இசைஞானம் இருக்கமுடியாது என்ற தடித்தனமா? பிறப்பால் கிறித்துவரானாலும் குருவாயூர், சபரிமலை, மற்றும் மூகாம்பிகை குறித்துப் பாடியதாலேயே அவரை வெகுவாக ஏற்றுக்கொண்டனரா? (இளையராஜாவுக்கும் இந்த மரபிசை-ஞானப் பூச்சு வேலை நடந்தது) இவையெல்லாம் மிகைப் படுத்தப் பட்டதாகத் தெரிந்தாலும் உருவாக்கப்பட்ட பிம்பங்களின் தாக்கம் பாடல்களைக் கேட்கும்போது தலைக்காட்டுவது தவிர்க்க முடியாதது. 

இந்தப் புனிதப் படுத்துதலுக்கு நானும் இரையானது என்னை சற்றே உலுக்கியது. இவ்வளவு பீற்றிக்கொள்ளும் நான் கூகிளில் இதைத் தேடித்தெரிந்துகொள்ள எவ்வளவு நேரமாகியிருக்கும்? சரியென்று தெரியாதவொன்றை மற்றவர்களுக்கு வேறு போதனை - எல்லாம் ஒருபுடுங்கித்தனத்தின் வெளிப்பாடு தானே? நான் மிகவும் வெறுக்கும் செயல்களான, எதிரிலிருப்பவனைச் சல்லீசாகஎடைபோடுதல், வாய்க்குவந்தபடிஅடித்து விடுதல்என்பன என்னிடமிருந்தேயல்லவா வந்தது?!

மீண்டுமொருமுறைகாடாறு மாஸம்போடச்சொலிக்கேட்டேன்.

விளக்குகள் கொளுத்தாத்த வீதிகள் - நிங்ஙள்
விளிச்சாலும் மிண்டாத்த தெய்வங்ஙள்

- மறுபடியும் பாடல் வரிகள் அவன் தெய்வக்குரல் மூலம் மனதைப் பிசைந்தது, ஏளனம் செய்தது. 



ஆனாலும் நிறைவுடன் அன்றிரவு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து யேசுதாஸை மீண்டும் வேறுவிதமாகக் கேட்கவாரம்பித்தேன். இன்றைக்குமேகம் கருக்குது மழைவரப் பாக்குதுகேட்டவுடன்எப்பேர்ப்பட்ட கலைஞன் இவன்என்று ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் அழுகை வர, அதை அடக்கப்போய் முகம் கோணியதில் இவள் மீண்டும் தலையிலடித்துக் கொண்டாள். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...