Monday, August 30, 2004

நாங்க கொயந்தைங்க பா...

நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது வகுப்பில் இரண்டு அணிகள் இருந்தன. செந்தில் 'செட்' மற்றும் ஜெரால்ட் 'செட்'. தினமும் மதிய உணவான பின்னர், இரண்டு 'செட்'டுக்கும் இடையே மற்போர்(!) நடக்கும். இப்படியாக ஒரு நாள் (நான் செந்தில் செட்) எங்கள் செட்டில் இருந்த என் நண்பன் சைமனை இந்த ஜெரல்ட் ஒரு மரக்கட்டையால் அடித்தான். பக்கத்தில் இருந்த நான் ஆத்திரம் கொண்டு ஒரு உடைந்த செங்கல்லை அவன் மேல் எறிந்ததில் அவன் உதடு கிழிந்தது.

மூன்றாம் வகுப்பில் copy அடிக்க முயன்றேன் (!) என்று நூலகத்தில் தனியாக ஒரு ப்ரீட்சை எழுதின ஞாபகம்...

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் பம்பர விளையாட்டில் ஏற்பட்ட ஒரு தகராறில் பக்கத்து வீட்டு விச்சுவையும் (அவன் என்னை விட ஒரு வயது பெரியவன்) துணைக்கு வந்த அவன் தம்பி 'ஜானு' வையும் அடித்துத் துவைத்தெடுத்தேன். அவர்கள் அழுதுகொண்டு போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் அம்மா எங்கள் வீட்டின் முன் போட்ட கூச்சலின் போது உள் ரூமில் ஒளிந்திருந்தேன்.

இதெல்லாம் தற்பெருமை அல்ல. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், அன்றைக்கு என் அக்காள் மகன் படிக்கும் பள்ளியில் இருந்து பெற்றோரை வந்து பார்க்கும்படி ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். இவள் அங்கே போனபோது, இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்தக் குழந்தையின் பேரில் பல குற்றச்சாட்டுகள் - வகுப்பில் கவனிப்பதில்லை, சண்டை போடுகிறான், அடிக்கிறான், உதைக்கிறான் என்று பலவாறாக...இவள் பயந்துகொண்டு child psycologist இடம் ஓடியதில், அவர் இவனுக்கு Attention-Deficit/ Hyperactivity Disorder (AD/HD - பம்மாத்து!)இருப்பதாய்ச் சொல்ல, மகன் 'லூஸா'கிவிட்டான் என்று கப்பல் கவிழ்ந்தாற்போல உட்கார்ந்திருந்தாள். அப்புறம் நாங்கள் அவளைப் பலவாறாகத் தேற்றி ஆறுதல் சொல்லும்போது தான் நான் மேற்சொன்ன என்னுடைய லீலாவினோதங்களைப் பற்றிச் சொன்னேன்.

குழந்தை வளர்ப்பை இப்போது புதிய தாய்மார்கள் மிகவும் சிக்கலாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. மூன்று வயதாவதற்குள்ளே பள்ளிப் படிப்பு அல்லாமல், creativityக்கான சிறப்பு வகுப்புக்கள், spoken English, வரைகலை, பாட்டு, gymnastics, நீச்சல் என்று குழந்தைகளை மிகவும் சிரமப்படுத்துகிறார்கள். ஏன் இவ்வளவு பதைபதைப்பு? இதையெல்லாம் இப்போதே திணிக்காவிட்டால் குழந்தை முட்டாளாகி விடுவானா என்ன?விடுமுறை நாட்களில் கூட, அதை எழுது, இதைப் படி என்று விளையாட முடியாமல் தொந்திரவு. நாங்கள் எல்லாம் இந்த மாதிரி சிறப்பு வகுப்புகளுக்குப் போகாமலே இத்தனை தூரம் வரவில்லையா? பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இதே அளவுகோல் தான். அங்கே குதிரை ஏற்றம் சொல்லிக் கொடுக்கிறார்கள், இங்கே யோகா என்று பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள்.

இந்த மாதிரிப் பள்ளியில் இருந்து தான் இப்படி குழந்தைகளைப் பற்றி முறையீடுகள். மூன்றாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு child psychology ஐ பற்றிய ஒரு counselling ஆவது இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எங்களால் வகுப்பு நடத்த முடியவில்லை, உங்கள் மகன் தொல்லை தாங்கவில்லை என்று சொல்பவர்கள் என்ன படை வழிநடத்திச் செல்லுபவரா, குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பவரா? எந்த ஊரில், எந்தக் காலத்தில் குழந்தைகள் அமைதியாகப் பாடம் கேட்டார்கள்? பள்ளிக்கூட vanல் அடித்துக் கொள்ளாத சிறார்கள் உண்டா? நான் படித்த காலத்தில் என்னைப் பற்றிய குற்றச்சாட்டை அதே பள்ளியில் படித்த என் அக்காளிடம் சொல்வார்கள்; நிறைய அடியும் வாங்கியிருக்கிறேன். என்னைப் பள்ளியில் சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் என் பெற்றோரிடம் முறையிட்டதில்லை. குழந்தைகளைக் கையாளும் பக்குவம் அப்போதைய தலைமுறைக்கு இருந்தது போலும்.

இன்றைய குழந்தைகள் பொத்தி வளர்க்கப் படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் சிறு வயதில், விடுமுறை நாட்களின் மத்தியான வெய்யிலை விரயம் செய்ததே இல்லை. உடம்பு முழுக்கப் புழுதியோடு, கில்லித்தாண்டல், பம்பரம், சைக்கிள் டயர் ஓட்டுதல், முள்ளுக் காட்டில் ஓணான் வேட்டை, கால் இஞ்ச், அரை இஞ்ச் சைக்கிள் வாடகைக்கு எடுத்தல் என்று திரிந்த காலம் அது. நிறைய விழுப் புண்களும் இதிலிருந்து எனக்குக் கிட்டியுள்ளது - புளியமரத்தில் கல் எறிந்தபோது பக்கத்து வீட்டின் ஓட்டுக் கூரையில் விழுந்ததும், வீட்டுக்காரருக்குப் புறமுதுகு காட்டியது தவிர, எல்லாம் வீரச் செயல்களே. எனக்கும் AD/HD இருந்திருக்கலாம், காபரா இல்லை - விறகு கட்டையால் அடி மட்டும் தான், சைக்கியாற்றிஸ்ட் எல்லாம் இல்லை. இப்போதைய குழந்தைகள் சூழல் வேறு. எங்கள் காலத்தில் இருந்த கூட்டுக் குடும்ப முறையால், பதினோரு பேர் கொண்ட கிரிக்கெட் டீம் அமைத்து விளையாடும் அளவுக்கு வீட்டில் கூட்டம் இருக்கும். இப்போது யாரும் யாரையும் வெளியே விடுவதில்லை - விளையாட்டுப் பஞ்சம் தான். என்ன செய்வார்கள், பாவம்?

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் - AD/HD போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தாலும், behavioural therapy மூலம் (விறகு கட்டை, விளையாட விடுதல், ரேஷன் கடைக்கு அனுப்புதல்) ரொம்பக் குறும்பு செய்பவர்களை வழிக்குக் கொண்டு வரலாம். மற்றபடி drugging, stimulants, மற்றும் காபரா எல்லாம் வேண்டாமே.

6 comments:

காசி (Kasi) said...

நல்லாச் சொன்னீங்க!

//இப்போது யாரும் யாரையும் வெளியே விடுவதில்லை - விளையாட்டுப் பஞ்சம் தான். என்ன செய்வார்கள், பாவம்?//
இங்கே அமெரிக்காவில் ஒரு தமிழ்க்குழந்தை, 3 வயதாகிறது. என் 6 வயது மகளுடன் நன்றாக விளையாடுவான். சனிக்கிழமை ஒன்றாக பிக்னிக் போயிருந்தோம், அன்றிரவு என் மகள் அவர்கள் வீட்டில் தங்க விரும்பி, தங்கினாள். ஞாயிறு மதியம் கொண்டுவந்துவிடுவதாக நண்பர் சொல்லியிருந்தார். ஆனால், மாலைதான் வந்தார்கள். திங்கள் காலை எழுந்து, 'காயத்ரி எங்கே?' என்று கேட்டு அழுது, காப்பகத்துக்குப் போகமாட்டேன் (இருவரும் வேலையில் இருக்கிறார்கள்) என்று அழுது, இன்று இப்போது எங்கள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறான். நான் கேட்டேன், 'I'm not gonna daycare" என்கிறான்! உண்மையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும், குழந்தைகளுக்கு விளையாட்டுக்குப் பஞ்சம் என்றால் நாம் பரதேசிதான்.

Arun Vaidyanathan said...

Very Good post...
I read most of your posts...Gr8 ones..!!!

Kannan said...

காசிலிங்கம்: சரியாகச் சொன்னீர்கள். இங்கேயே இந்த நிலைமை - வெளிநாடுகளில் வசிப்போரின் குழந்தைகள் பாடு திண்டாட்டம் தான்.

அருண்: உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் கொடுக்கிறது. நன்றி!

Anonymous said...

100% correct... Romba nalla post!!!

-cc

சுந்தரவடிவேல் said...

நல்ல பதிவு.
கடந்த காலத்தில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங்களும் குழந்தைகளை வளர்க்கும் முறையில் பெரும் மாறுதல்களை உண்டாக்கியிருக்கின்றன. உதாரணமாக பிள்ளை பிடிக்கிகள், தெருக்களில் விரையும் வாகனங்கள், விளையாட்டிடம் இல்லாத நகர்ப்புறக் குடியிருப்புகள், தொலைக்காட்சி போன்றவற்றால் அறுந்த வெளியுலகத் தொடர்புகள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

Anonymous said...

Kannan,

I am unable to read all your posts in Tamil. Got to know of your blog thru Prasanna. I have Murasu Anjal on, but doesn't seem to work. Can read Badri's blog. Mine is a Windows 98 machine.

Any suggestions?

Saumya